படமும் கற்றலும் : 017
#படமும்கற்றலும் ; 017 – Part 01
” Thought is so cunning, so clever, that it distorts everything for its own convenience – JK “



நம்மில் எத்தனை பேர் JK வை படித்து இருக்கிறோம் ? கிட்டத்தட்ட ” கமலின் இந்தியன் தாத்தா ” போன்ற அவரின் பார்வை, தோற்றம், அமைதி, பேச்சு .. அனைத்தும் ! ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இடையில் இருக்கும் ஒருவித அமைதியில் நமக்குள் ஏதோ ஒரு மென் திராவகம் வீசப்பட்டு, தேவை அற்றவை எண்ணங்களில் இருந்து வெளியே கழிவாக பிய்த்து எறியப்படும் ! “எண்ணம் போல ஒரு குள்ள நரித்தனம் இருக்க வாய்ப்பில்லை. அது அதன் வசதிக்கு அனைத்தையும் மாற்றும், திரிக்கும், தவறு என்று சொல்லும், சரி என்று சொல்லும், எதிரியாக்கி கொள்ளும், நண்பனாக மாற்றும். ” என்று எண்ணத்தை படித்து நமக்கு சொன்னவர். நாம் கொண்டாடப்பட வேண்டிய தத்துவ ஞானி ! நமக்கு எப்போதும் சாக்ரடீஸ்ம், அரிஸ்டாட்டில்ம், கன்பூஷியஸ் ம் தான் கண்ணில் தெரியும். கற்றலில் கூட வெளியார் வந்து சொன்னால் தான் கேட்போம். JK வின் கண்ணில் தெரியும் Clarity மிக மிக ஈர்ப்புடையது. உள்ளத் தெளிவை அது சொல்லிக்கொண்டே இருக்கும் !



” Real learning comes about when the competitive spirit has ceased. “
போட்டிகள் அற்ற உலகில் தான் கற்றலுக்கு மரியாதை. கற்றலின் உண்மைத்தன்மையும் வெளியே வரும். இப்போது நாம் கற்பது எல்லாம் ” எதற்காகவோ “. இந்த ” எதற்காகவோ ” கற்றல் கற்றல் அல்ல. இலை அசைவதில் இருக்கும் பாடம் நமக்கு புரிவதில்லை. காம்பு அதை தாங்கி பிடித்து காப்பாற்றும் என்று நாம் யோசிப்பது இல்லை. காம்பிற்கு தண்டு முக்கியம் என்று நாம் உணர்வது இல்லை. தண்டிற்க்கு கிளை, மரம், வேர், மண், நீர், பூமி .. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இன்னொன்றுக்காக தொடர்புடையவை என்று நாம் யோசிப்பது இல்லை. அப்படி யோசிக்கும் பட்சத்தில் சக மனிதனை நாம் நேசிப்போம் ! ஆனால் இப்போது சக மனிதனை நேசிக்க ஏதோ ஒன்று நமக்கு தேவைப்படுகிறது. பணம், உதவி, நட்பு … என்று ஏதோ ஒன்று ! எதுவும் தேவை அற்ற பிணைப்பில் தான் நாம் அனைவரும் வாழ்கிறோம் என்பதை மரங்கள் ஆங்காங்கே சொல்லிக்கொண்டே இருக்கின்றன. போட்டி உலகில் நாம் அதை எல்லாம் கவனிப்பது இல்லை. கவனிக்க நமக்கு நேரமும் இல்லை !



” The Eagle has gone. But the Flight of the Eagle and the Way … still stays there ” என்று அவரின் புத்தக வரி ஒன்று வரும். படித்ததும் JK கன்னத்தில் அறைந்தது போல இருக்கும். ” பறவை சென்று விட்டது. ஆனால் அது பறந்து சென்ற முறையும், தடமும் இன்னமும் அங்கேயே இருக்கிறது ” என்கிற வரி .. நாம் இறந்த பின், நமக்கு பின் இருக்கும் வாழ்க்கை, அது மற்றவர்களுக்கு சொல்லக்கூடிய வாழ்வியல் முறை, நாம் வாழ்ந்த வாழ்வின் பாதை … அனைத்தையும் யோசிக்க வைக்கும். ஆம். என்ன கொடுத்துவிட்டு போகப்போகிறோம் ?
குரு, சாமியார், ஸ்ரீ ஸ்ரீ …அனைத்தும் அற்ற தன்மை அவர். நாம் வாழ்ந்த இதே உலகில் .. பெரும் விடயங்களை சொல்லிவிட்டு .. அப்படி அவர் வாழ்ந்ததே நமக்கு பெரும் செய்தி. அவர் இன்று இல்லை. ஆனால் …அவர் இப்போது யோசித்த தடம் நம்முடன் பயணிக்கிறது.
Part 2 வில் மீண்டும் சந்திக்கிறேன்.


