படமும் கற்றலும் : 019
#படமும்கற்றலும் ; 019



” ஆற்றைப் போல பாடம் சொல்லும் எந்த ஆசிரியையும் இந்த உலகில் இல்லை ! “



Twitter ல் அந்த படத்தை பார்த்தவுடன் கண்கள் நிலைத்து நின்றன. மனதிற்குள் என்னவோ செய்தது. ஆறு என்றால் என்ன ? என்று ஒரு கேள்வி எழுந்து பதில் ஆற்றை போல வேகமாய் ஓட ஆரம்பித்தது. பயணிப்போம்.



ஆறு தன்னை ஆரம்பிக்கிறது எனில் வேர் கொண்டவை காடுகளுக்கு திருவிழா ஆரம்பம் என்று அர்த்தம். ஆரம்ப புள்ளி முதல், இறுதியில் கடலில் கலக்கும் வரை மனித, மிருக, தாவர உயிரிகளுக்கும், விவசாயம், உற்பத்தி என தொழிலுக்கும் … நன்மை செய்துகொண்டே ஒரு பெரும் பயணம் இருக்கும் எனில் அது ஆற்றின் பயணம் மட்டுமே ! அப்படியான ஆற்றின் பயணத்தில் ஒரு ஓரமான சிறு இயக்கப்புள்ளி தான் நாம். அத்துணை நன்மை செய்யும் ஆறு எங்கும் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. சிறிய உதவி ஒன்றை செய்துவிட்டு நாம் தான் உபயம் என்று எழுதிக்கொள்கிறோம் !



நினைவில் கூட கடந்த காலத்தில் வாழா ஒரே இயக்கம் இந்த உலகில் உண்டு எனில் அது ஆற்றின் இயக்கம் மட்டுமே. தன் பயணத்தை ஆரம்பித்தால் இறுதி இலக்கை அடையும் வரை முன்னேறு முன்னேறு முன்னேறு கதை தான். குறுக்கே வரும் மலை, நிலம், கிராமம், நகரம், ஏற்றம், இறக்கம் …ஏதும் ஒரு தடை இல்லை அதற்கு. முன்னோக்கி நகர்தல் மட்டுமே அடிப்படை. நிகழ் கால வாழ்க்கை யில் அனைவர்க்கும் தன்னாலான உதவி, எதிர்கால வாழ்க்கை நோக்கிய வேகமான பயணம் .. எப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கை பாடம் ! ஒவ்வொரு தொழில் முனைவோரும் ஆற்றிடம் கற்க வேண்டியது ஏராளம் !



Flexibility என்ற வார்த்தைக்கு ஆறு என்று அர்த்தம் சொல்லலாம். வளைந்து நெளிந்து, குழைந்து, வீற்றம் கொண்டு, அடித்து, கரைந்து, நின்று, பீறிட்டு … எத்தனை எத்தனை dimensions ! ஆனாலும் அனைத்திற்கும் ஒரே ஒரு அடிப்படை தான் .. ” முன்னேறிக்கொண்டே இரு “. இவ்வளவு Flexibility நமக்குள் இருக்கிறதா ? அப்படியே இருந்தாலும் ஆங்காங்கே சிறைப்படாமல் முன்னேறுகிறோமா ?



கழிவு வசவுகளை ஆறு எதிர்கொள்வது போல வேறு எதுவும் எதிர்கொள்வது இல்லை. ஒரு மனிதக் கூட்டமே ஆற்றிற்கு எதிராக அனைத்து தவறுகளையும் செய்யும்போது .. அந்த மனிதக் கூட்டத்திற்கு தன்னால் இயன்றவைகளை கொடுத்துக்கொண்டே இருப்பது எல்லாம் பரந்த மனநிலையின் முதிர்ச்சியின் அடையாளங்கள். ஆற்று வெள்ளம் எல்லாம் அவ்வப்போது அது காண்பிக்கும் சிறு பிள்ளைக் கோபம் தான். ஆனாலும் இரண்டொரு நாளில் தன்னை கழிவு வசவுகளால் கொல்லும் மனிதனை அது மன்னித்துக்கொண்டே மீண்டும் அமைதியாக பயணிக்கிறது. மன்னித்தல் அதன் தன்மை. அது புரியாத மனிதக் கூட்டம் அதை மீண்டும் மீண்டும் சீண்டிக்கொண்டே இருக்கிறது !



” நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய். நான் உனக்கு நன்மை செய்துகொண்டே தான் இருப்பேன். “
என்பது தான் அதன் ஒரே குரலாக இருக்குமோ ! ?



பயணிப்போம்.


