நான் எனப்படும் நான் : 135
” நேர்க்கோடோ, அழகான வட்டமோ அல்ல. ஏற்ற இறக்கம் நிறைந்த, ஒழுங்கற்ற வடிவத்தின் பிரதிபலிப்பு கவிதை தான் வாழ்க்கை “




கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் தன் தவறு, தன்னிலை, எதிர்ப்பக்க பார்வை உணர்தல், மன்னிப்பு, இளகும் மனம், சிரிப்பு, எளிய நடை … இப்படித்தான் வாழ்வியல் அவ்வப்போது மலர்கிறது – தினமும். காலையில் எழுந்தது முதல் இரவு வரை ஒருவன் ஒருத்தி அப்படியே இருக்கிறார் என்றால் .. அது பெரும் பொய். யதார்த்தம் என்பது ஏற்ற இறக்க வாழ்க்கை மட்டுமே !
அப்படி எனில் நாம் ஏன் Image என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொண்டு நடிக்க ஆரம்பிக்கிறோம் ? இயல்பாக இருப்பதால் பலரை இழக்கிறோம் சிலரை மட்டுமே பெறுகிறோம் என்கிற பயம் தான் காரணமா ? நாம் இழக்கும் பலர் … நம் இயல்பு புரியாமல் நம்மிடம் வேறு எதையோ எதிர்பார்க்க, அவர்களை காப்பாற்றி கொள்ளத் தான் நாம் நடிக்க ஆரம்பிக்கிறோமா ? யோசிக்க வேண்டிய விஷயம் இது. அவர்களுக்கு என்று நடிக்க ஆரம்பித்து நம்மை தொலைத்து பின் ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களையும் தொலைத்து .. நாம் எங்கே இருக்கிறோம் என்று புலம்புவதற்கு பதில் ..நாம் நாமாகவே இருந்து அவர்களை தொலைத்து விடலாம்.
ஒரு அரசியல்வாதி வருகிறார். உடனே சாலை செயற்கையாய் சரி செய்யப்பட்டு சிரிக்கிறது. இரு பக்கமும் கோடெல்லாம் இட்டு அழகாய் மாற்றுகிறார்கள். என்ன பிரச்சினை என்றால் .. சரி செய்பவர்களுக்கு மட்டும் அல்ல …வரும் அரசியல்வாதிக்குமே நன்றாகவே தெரியும் .. இது உண்மை அல்ல என்று ! இதற்கும் துணை ஒன்று இன்னொரு துணையை சிரித்த முகத்துடனே எதிர்பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் ? ஆனாலும் அதையே எதிர்பார்ப்பது என்ன பகுத்தறிவு ? அனைத்தும் கலந்தது தானே சாலை ? எலிசபெத் ராணி செல்லும் இடம் எல்லாம் மணக்கும் என்பார்கள். அதாவது அங்கே இருக்கும் வாசம் கூட மாற்றப்படும் ! ஆனால் வாழ்க்கை அப்படி அல்ல. இல்லற அணைப்பில் வியர்வை கலந்த சாம்பார் வாசம் இருப்பது தான் இயல்பு. யதார்த்தம் !
தனி ஒழுக்க வரைமுறைகளை மீறாத வரை, மகனை மகளை தம்பியை அண்ணனை அக்காவை தங்கையை துணையை அம்மாவை அப்பாவை நட்பை தொழில் உறவுகளை … அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை எனில் … நாமும் அரசியல் செய்ய ஆரம்பிக்கிறோம் ! என்ன … ஒரே ஒரு வித்தியாசம். நம் களம் நாடு அல்ல. வீடும் தொழிலும் !.


