நான் எனப்படும் நான் : 137
” Its not about Being right. Its about what has happened after Being Right ! “



” நான் சொன்னது தான் சரி ” அவர் வாதாட ஆரம்பித்தார்.
” 100 % சரி ” என்று சொல்லி சிரித்தேன்.
” இல்ல சார் …. ” என்று மீண்டும் ஆரம்பித்தார்.
” நான் 100 % சரி என்று சொன்னேன் ” என்று சொல்லி சிரித்தேன்.
பிறகு தான் அமைதியானார்.
மனிதர்களுக்கு தான் சரியென்று நினைப்பதை எதிராளியும் அப்படியே ஒத்துக்கொள்வதில் எவ்வளவு மகிழ்ச்சி !.
சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்த போது அதே அவர் சொன்னார் ..
” அப்போ நான் சொன்னது சரியா வரலை. அப்புறம் வேற செய்ய ஆரம்பிச்சிட்டேன் ” அவர் கொஞ்சம் சோகமாக பிறகு விறைப்பாக சொன்னார்.
” சரி ” என்று நான் இப்போதும் சிரித்தேன்.
காலம் தான் பல ” சரி தவறு ” களுக்கு நிரந்தர பதில்.
கடைசி வரை நான் அவரிடம் சொல்ல நினைத்ததை சொல்லவே இல்லை. அவரும் கேட்கவில்லை. பிறகு ?. தான் சரி என்று நினைத்தபின் இன்னொருவரின் சரி தவறு எல்லாம் காதில் கேட்குமா என்ன ?



இன்று நிறைய பேரின் சிந்தனா வியாதி இதுவே. தான் சரி என்று அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஏன் இப்படி தோன்றுகிறது ? காரணம் மிக எளிது. சிறியது. தான் சரி என்று காலம் நிரூபிக்கும் வரை காத்திருக்கும் பக்குவம் இல்லை. அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும்.



அந்த பெண்ணிடம் நான் சொன்னேன் …
” நீங்கள் இப்படி செய்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? “
” தவறுதான். நான் இப்படி செய்திருக்க கூடாது “
நான் அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து அந்த பெண் ஆரம்பித்தார்.
” ஆனால் அவர்கள் செய்தது சரியா ? இவர்கள் செய்தது சரியா ? ” என்று அந்த பெண்ணின் பேச்சு நீண்டது.
” அப்படி என்றால் .. ? “
” நான் செய்ததும் சரிதான் ” என்று ஆணித்தரமாக பேசினார்.
சிரித்தபடி விடைபெற்றேன்.
” இன்னமும் எவ்வளவு காலம் இவர் காத்திருந்து தான் செய்தது தவறு என்று புரிந்து கொள்வாரோ அதை அவரே புரிந்து கொள்ளட்டும். நமக்கு நிறைய வேலை இருக்கிறது. நம் வேலையை பார்ப்போம் ” என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது. அதற்கு மதிப்பளித்து வேலையை பார்க்க ஆரம்பித்த போது மனம் மீண்டும் ஒன்று சொன்னது.
” நம் தவறை திருத்திக்கொள்ளவே நமக்கு இந்த ஜென்மம் போதாது. நாம் ஏன் பிறர் சரி தவறை எல்லாம் பார்த்து கேட்டு உணர்ந்து .. “
மனதின் அந்த குரல் எனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


