படம் சொல்லும் பாடம் – 034
” You also Can Rewrite Your Story “
தற்கொலை செய்ய 21 ஆம் மாடியின் பக்கவாட்டு சுவரில் நின்று கொண்டிருக்கும் ஒருவரை நோக்கி ஆர்வமாய் ( ! ஆம். ஆர்வமாய் ! ) பார்க்கும் மக்களின், Media க்களின் Breaking News பசியுடன் ஆரம்பிக்கிறது படம் ! ( ஐந்து பாடல் ஏழு சண்டைக்காட்சிகள் … படம் பார்க்க விரும்புபவர்கள் இங்கிருந்து படிக்காமலேயே வெளியேறி விடலாம் 

)
கோமாளி, பைத்தியக்காரன், சாலையோர வாழ்வினன் .. என்று பலரை நாம் கடந்து செல்கிறோமே.. அவர்களுக்கும் ஒரு கடந்த கால வாழ்க்கை இருந்திருக்கும் என்று நம்மால் நம்ப முடிகிறதா ? அவர்கள் பேசும் வாழ்வியல் நம்மை அசுரமாக கேள்வி கேட்கும். நிறைய நேரங்களில் அதற்கு பயந்தே நாம் ஒதுங்கி விடுவோம். ( என்னை பார்த்து அப்படி ஒரு பைத்தியக்கார ஆளுமை கேட்ட கேள்வி இன்னமும் என் ஞாபகத்தில் –
” இன்று எதை சேர்த்தாய்
எதை தொலைத்தாய் ? ). அப்படியான ஒரு ஆளுமை தற்கொலை செய்யப்போன ஒருவரை காப்பாற்றுகிறது. சரி .. தற்கொலை செய்யப்போன மனிதர் யார் ? அவர் ஒரு Famous Psychologist ! காப்பாற்றியது ? பைத்தியக்கார ஆளுமை !! இது தான் படத்தின் கரு. இதைசுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்குள் கேள்விகளை கன்னத்தில் அறைந்தாற்போல கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
” ஏன் இப்படி அழுதுக்கொண்டிருக்கிறீர்கள் ? இறந்து போன இந்த மனிதனை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். அவரின் இறப்பிற்கு பின் அவர் உங்களிடம் எப்படி வாழ்கிறார் என்று எனக்கு சொல்லுங்கள். உங்களுக்கும் சொல்லுங்கள். அதுதான் இங்கே நடக்க வேண்டும் ” என்று இறந்த வீட்டில் பேசும் அந்த நடிகனின் கண்களில் என்னவோ ஒரு வசியம் இருக்கிறது. படம் முழுக்க கண்களால் சிரிக்கிறார். கேள்வி கேட்கும் முன் அவர் முன் வைக்கும் மௌனம் நமக்குள் களி மண்ணாய் பிசைகிறது !
எந்த தொந்தரவும் இல்லா இரண்டு மணி நேரம் உங்களுக்கு இருக்கிறதா ? அமர்ந்து பொறுமையாக இந்த படத்தை பாருங்கள். ( குழந்தைகள் பார்க்கலாம். ஆனால் இந்த படத்தை உங்களுடன் பார்க்கும்போது அவர்கள் உங்களை ஒரு பார்வை பார்ப்பார்கள். அதை உங்களால் எதிர்கொள்ளவே முடியாது ! ). உள்ளே எழும் கேள்விகளை Google Keep ல் எழுதிக்கொண்டே வாருங்கள். கிட்டத்தட்ட நீங்கள் புதிய மனிதனாக வாழ இந்த படம் Guarantee.
” என்ன அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையா ? நான் படம் பார்த்துவிட்டேன் ” என்பவரா நீங்கள் ?
சரி. நீங்கள் நிறைய இலக்குகளுடன், பணம் சம்பாதிக்க கிளம்பி இருப்பவர் என்று நினைக்கிறேன். ஒரு 05 வருடங்கள் கழித்து பாருங்கள். ” முன்னமே பார்த்திருக்க வேண்டும் ” என்று தோன்றும்.
ஆங்காங்கே நம்மை உரித்து போடும் கேள்வி பதில்களில் ஒன்று இங்கே…
” நீ என்ன விற்கிறாய் ? “
” Comma வை விற்கிறேன். மக்களுக்கு அது போதும். கொஞ்சம் மூச்சு விட்டுவிட்டு அவர்கள் கதைகளை அவர்களால் தொடர முடியும் “





