நான் எனப்படும் நான் : 143
” Unconditional Support and Unconditional Demand will Never Support any Performance. It will create Slavery “



அவருக்கு ஒரு 65 வயது இருக்கலாம்.
” நீங்க ? ” என்று ஆரம்பித்தார். சொன்னேன். சந்தித்தது ஒரு பொது இடத்தில்.
” நான் ஒரு Retired Teacher. இப்போது பொது சேவை பணிகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன் “
நான் அமைதியாக இருந்தேன்.
” உங்களை FB live ல் பார்த்திருக்கிறேன். உங்களின் சேவை மிகப்பெரிய ஒன்று “
” நன்றி ” சொல்கிவிட்டு அமைதியாக இருந்தேன்.
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார் …
” எப்படி உங்களால் manage செய்ய முடியுது ? மக்களை ? அவர்களின் தொடர்ச்சியான அழைப்புகளை ? உதவி கோருதலை ? நிபந்தனைகளை ? “
பெரும் விஷயத்தை சட்டென அவர் கேட்டுவிட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி அவரால் சட்டென கேட்க முடிந்தது ?
” இல்லை. பொது வாழ்வில் இப்போது நான் அதை சந்திக்கிறேன். நீங்கள் நிச்சயம் சந்தித்து இருப்பீர்கள். அதனால் தான் கேட்கிறேன் “
சிரித்தேன்.
” பொதுவா … ” கொஞ்சம் கனைத்து விட்டு பேச துவங்கினார்.
” மக்களுக்கு உதவி வேணும். அதை செய்ய ஒருவர் வேணும். அந்த ஒருத்தர் நல்லவரா இருக்கணும். அவரை பற்றி எந்த குறையும் காதில் வரக்கூடாது. தாங்கள் கேட்பதை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அழைக்கும் போதெல்லாம் உதவ வேண்டும். உதவி பெற்ற பின் அவர்கள் காணாமல் போவதை பொறுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் தவறு செய்யலாம். ஆனால் மக்களுக்கு நல்லது செய்யும் அந்த நல்லது செய்கிற ஒருத்தர் தவறே செய்ய கூடாது. மக்கள் மனம் மாறலாம். ஆனால் அந்த நல்லது செய்யும் மனிதர் மாறவே கூடாது. மக்களுக்கு கோபம் வரலாம். ஆனால் அந்த நல்லது செய்யும் மனிதர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் … இதுக்கு பதிலா அந்த நல்லது செய்யும் ஆளை அவர்கள் விஷம் வைத்து கொன்றே விடலாம் “
இருவரும் சிரித்தோம். அவரின் யதார்த்தத்தை உணர்த்தும் பேச்சு மிக இயல்பாக இருந்தது.
” அந்த ஒருத்தர் நல்லது நினைத்தால் அதில் வியாபார நோக்கம் இருக்கலாம். ஆனால் உதவி பெறும் மக்களிடம் வியாபார நோக்கம் இல்லை என்று அவர் நினைக்க வேண்டும் “
இருவரும் மீண்டும் சிரித்தோம். இந்த முறை பலமாக. மிக சில நேரங்களில் தான் நம் அலைவரிசை மனிதர்களை நம்மால் பார்க்க முடியும். கேட்க முடியும்.
” மக்கள் பேசாமல் மாதக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் அந்த நல்லது செய்யும் மனிதர் ஒரு Phone call க்கு பேசவில்லை எனில் அவர் கெட்டவர் “
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து பின் கேட்டார்.
” எப்படி சமாளிக்கிறீங்க ? “
அவர் கண்ணை பார்த்து சொன்னேன்.
” பழகி விட்டது “
” எது ? ” அவர் சிரித்து கேட்டார்.
” மக்களின் இயல்பு “
” எப்படி ? “
” பொதுத்தன்மை அல்லது பொது புத்தி எப்போதும் அப்படித்தான். இல்லாததை தேடும். அப்படியானதை கொடுப்பவர்களை உயர் பிம்ப நிலையில் வைத்து அசை போடும். ஆச்சர்யம் என்னவெனில் … அனைவரும் மனிதர்களே என்பதை மறந்து விடும். உயர் பிம்ப நிலையில் பொதுத்தன்மை நம்மை வைக்கலாம். அது அவர்கள் இயல்பு. நமக்கு எங்கே போனது அறிவு ? நாம் நாமாகவே இருப்பதே அறிவு என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். “
” ஹ்ம்ம்ம். புரிகிறது “



இருவரும் கிளம்பும்போது அவர் ஒன்று சொன்னார் …
” ஆனாலும் .. நான் சரியில்லை / எனக்கு உதவி செய்பவன் மிக சரியாக இருக்க வேண்டும் / என்பது என்ன நிலை ? “
என்று கேட்டார்.
சிரிப்பை மட்டுமே பதிலாக சொல்லிவிட்டு நகர்ந்தேன்.



நம் அலைவரிசை மனிதர்கள் மிக அரிது. அவர்களுக்கு பதில் தேவை இல்லை. நிறைய பகிர்தலும் கொஞ்சம் சிரிப்பும் போதுமானது ! மிக மிக போதுமானது.


