நான் எனப்படும் நான் : 151
#WhoIsJay ; 151
” Just ask the other Person – Tell me about you – Because that’s where a New World of Choices Waiting “



வியாபார சந்திப்புகளில் எனக்கு சில வித்தியாச அனுபவங்கள் கிடைப்பது உண்டு. அப்படி ஒன்றினை இங்கே பகிர்கிறேன். தங்களுக்கும் உதவக்கூடும் என்று நம்புகிறேன்.
” சார் .. என்னோட speciality என்னன்னா … “
அந்த மனிதர் அப்படித்தான் பேச ஆரம்பிக்கிறார். அவரின் திறமைகளை சொல்கிறார். அவர் செய்த சாதனைகளை சொல்கிறார். அவருக்கு தெரிந்த மனிதர்களை பற்றி சொல்கிறார். அவரின் வரலாற்றினை சொல்கிறார். பேசுகிறார். பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். ( அவர் ஒரு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார் என்பது ஞாபகம் இருக்கட்டும் ).
ஒரு 15 நிமிட பேச்சுக்கு பின் அவர் ” அவ்ளோ தான் சார் ” என்று முடித்துக்கொள்கிறார். அவரிடம் நான் சில விடயங்களை என் Whatsapp க்கு அனுப்ப சொல்கிறேன். உடனே அனுப்புகிறார்.
” போயிட்டு வர்றேன் சார் ” என்று கிளம்பி விடுகிறார்.
நிச்சயம் திறமையானவர். அதில் சந்தேகம் இல்லை. அங்கே தான் எனக்கு ஒரு கேள்வி வருகிறது.
தன்னை பற்றி இவ்வளவு நேரம் பேச முடிந்த அவரால் ஏன் எதிரில் இருக்கும் மனிதரிடம் ” நீங்கள் யார் ? ” என்று கேட்க முடியவில்லை ? அல்லது கேட்கவில்லை ? அல்லது கேட்க விரும்பவில்லை ?
ஏட்டளவில் என்னை பற்றி தெரிய வாய்ப்பு இருந்தாலும் .. ” உங்களை பற்றி சொல்லுங்கள் ” என்கிற அந்த ஒரு வரி ஏன் வரவில்லை ? அப்படி கேட்பதில் என்ன பிரச்சினை ? ( நேரம் இங்கே ஒரு பிரச்சினை அல்ல. அவரின் 15 நிமிட பேச்சினை நான் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும் ! )



தன்னை பற்றி பேசுவது, தன் திறமைகளை பற்றி சொல்வது, தன் வரலாறு, அனுபவங்கள், தான் சந்தித்த மனிதர்கள் .. என்று பயணிக்கும் அவரால் .. ஏன் எதிரில் இருக்கும் மனிதரிடம், நேரம் இருந்தும், ” உங்களை பற்றி சொல்லுங்கள் ” என்று கேட்க முடியாமல் போகிறது ? இது என்ன மனநிலை ?
” என்னை பற்றி சொல்லிவிட்டேன். எனக்கு வாய்ப்பு கொடு “
” என்னை பற்றி சொல்லிவிட்டேன். நான் கிளம்புகிறேன் “
” என்னை பற்றி சொல்லிவிட்டேன். நீ யார் என்று எனக்கு தேவை இல்லை “
” என்னை பற்றி சொல்லிவிட்டேன். உன்னை யார் என்று கேட்க என்னால் முடியவில்லை “
இப்படி ஏதோ ஒரு மனநிலை அது ! ஏன் எங்கிருந்து இது வருகிறது ?



உரையாடலில் .. ” உங்களை பற்றி சொல்லுங்கள் ” என்பது தானே இரண்டு பக்க கண்ணாடி. நான் என்னை பற்றி யோசித்து பார்க்கிறேன். அநேகமாக என் சந்திப்புகளில் முதல் கேள்வி அல்லது பேச்சின் ஆரம்பம் .. ” நீங்க ? ” அல்லது ” உங்களை பற்றி ? ” என்பது நிச்சயம் இருக்கும். என்னை பற்றி என்பது அவர் அவள் அவர்கள் கேட்டால் அதற்கு பதிலும் இருக்கும். பெரும்பாலும் அப்படி கேட்கும் மனிதர்கள் உண்டு. அதே நேரத்தில் அப்படி எதுவும் கேட்காமல் வந்ததற்காக வந்ததை பேசிவிட்டு நகரும் மனிதர்கள் உண்டு. எதிரே இருப்பவரை பற்றி தெரிதல் என்பது முக்கியமான ஒன்று என்று ( நேரம் இருந்தும் ) ஏன் திறமை வைத்திருக்கும் பலருக்கு தெரியாது போய்விடுகிறது ?
நம்மை விட பெரிய மனிதர்களிடம் இந்த கேள்வியை எப்படி கேட்பது என்று ஒரு பார்வை இருக்கலாம். ஆனால் .. அங்கேயும் … ” உங்களை பற்றி நான் இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் “” கேள்விப்பட்டு இருக்கிறேன் ” ஆகியவை வந்துவிடும்.
” உங்களை பற்றி சொல்லுங்கள் ” ஒரு பெரும் வரம். அதில் இன்னொரு பெரும் உலகம் நமக்காக காத்திருக்கிறது. பேசாமல் கடப்பது ஒரு வகை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் … இருவர் மட்டும் பேசும் ஒரு அறிமுகப் பேச்சில் .. தன்னை பற்றி மட்டும் பேசிவிட்டு .. நகர்தல் .. கண் முன் இருக்கும் வாய்ப்பை தெரியாது நகர்தலாக முடியக்கூடும்.
யோசிப்போம்.


