நான் எனப்படும் நான் : 155
” Impression is Temporary. Influence is Timely. Inspiration is Everlasting. “



சிலரை நமக்கு கண்டவுடன் பிடித்துவிடும். அவர்களின் தோற்றம், பேச்சு, பாவனை, உடுத்தும் விதம், சிரிப்பு … போன்றவை நம்மை அவர்களை நோக்கி கவரும். நம்மையும் அறியாமல் அவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் செல்ல வைக்கும். இது தற்காலிகமான ஒன்று. ஆம். கொஞ்சம் நெருங்கியவுடன் எவை எல்லாம் கவர்ந்ததோ அவை அனைத்தும் காணாமல் போகும்.
சிலரை நெருங்க நெருங்க நமக்கு அவர்களை மிகப் பிடிக்கும். வியத்தல் இங்கே தான் ஆரம்பமாகும். அட … என்னும்படியான நடவடிக்கைகளில் மகிழ்வோம். இணைந்து பயணிக்க நினைப்போம். இன்னமும் நாம் நிறைய மாற வேண்டி இருக்கிறது என்று நினைப்போம். மாறுவோம்.
இன்னும் சிலரை மட்டுமே பார்த்து, நெருங்கி, அவர்களிடம் பேசி அல்லது ஏதும் பேசாது, நாமாகவே அவர்களை தொடர ஆரம்பித்து, அவர்களின் ஏற்ற இறக்கங்களை கவனித்து, ஒவ்வொன்றிலும் அவர்களின் செயல்பாட்டு விதங்களை கவனித்து .. அதில் பாடம் படித்து அவர்களை போல, அல்லது, அவர்களையும் விட பெரும் உயரத்தை அடைய முயற்சிப்போம். அல்லது அடைவோம். இந்த பிரிவு மனிதர்களை நம் நட்பு வட்டத்தில் வைத்திருக்கும் பட்சத்தில் நமக்கு Inspiration வெளியில் இருந்து தேவைப்படாது. தினசரி செய்ய வேண்டியவைகளை சரியாக செய்து முன்னேறுவது மட்டுமே மனதில் இருக்கும். ரஹ்மானோ சச்சினோ கலாமோ .. இதில் வருவார்கள். அவர்களை எப்படி நட்பு வட்டத்தில் ? என்று யோசிப்பவர்களுக்கு … கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் .. நட்பு வட்டம் இது.
இந்த மூன்றில் எந்த வகை நட்பு நம்மிடம் இருக்கிறது ?



பொதுவாக ஈர்ப்பு வீதியில் முதல் வகை நட்புக்கள் தான் நடமாடிக்கொண்டு இருக்கும். தேவையற்ற பேச்சுகள் அங்கே அதிகமாகவும், தன்னை பற்றிய அல்லது மற்றவர்களை பற்றிய மிகைப்படுத்தலும் அதிகம் எதிரொலிக்கும். இந்த நட்பு வகையில் தான் ” இப்படி நினைக்கவே இல்லை ” திடீர் திடீரென்று கேட்டுக்கொண்டே இருக்கும். ” எப்படி இருக்காங்க பாருங்க ? ” என்று அங்கலாய்க்கும்.
தோற்றம் மறைவு அனைத்தும் இங்கே சாதாரணம்.
இரண்டாம் வகை – அதிகம் பேசாது. நிறைய யோசிக்கும். புதிய சிந்தனைகளை அலசும். பெரும் முயற்சிகளுக்கு முன்னே நிற்கும். பேச்சு சுருக்கமாக ஆனால் யதார்த்தமாக இருக்கும். மனிதர்களை பார்த்து வியக்கும் அல்லது படித்துக்கொண்டே இருக்கும்.
மூன்றாம் வகையில் பேச்சு almost zero. இங்கே யோசனையும், ஆழ்மனப்பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் மட்டுமே … பிரதானமாக இருக்கும். செயலும் விளைவும் அது ஏற்டுத்தும் எதிர்கால நேர்மறை பாதிப்பும் இங்கே அழகான எரிபொருள்.
எந்த வகையில் நாம் நட்பு வட்டங்களை வைத்திருக்கிறோம் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.



” வருடத்திற்கே சில முறை தான் சந்திப்போம். பேசுவோம். ஆனால் பெரும் உயரங்களை எங்களின் நட்பு வாழ்க்கை தொழில் குடும்பம் …அடைந்திருக்கிறது ! ” என்றும் மனிதர்கள் உண்டு. அவர்களும் இங்கே தான் வாழ்கிறார்கள் – வெளியே அதிகம் தெரியாது, அதே சமயம் தங்களின் உயரத்தை அதிகரித்துக்கொண்டே !


