நான் எனப்படும் நான் : 167
” True Love Begins after 60. Till then, Its Just a Long Rehearsal “



காலையில் தான் அவர்களை கவனித்தேன்.
” மெதுவா வா. அவசரப்படாதே. நான் கூடவே தான் இருக்கிறேன் “
கணவர் சொல்ல சிரிக்கும் அந்த வயதை வெல்லும் மனைவியை கவனிக்கிறேன்.
” சரி. ” என்று சொல்லி கணவரை பார்த்து மென்மையாக சிரிக்கும் அவரின் கண்களில் தெரிவது தான் காதலாகப் படுகிறது ! அக்கறை / Care / வயோதிகம் / காலம் போன காலத்துல .. என்றெல்லாம் இந்த அழகான உணர்வை அமைதியாக கடந்துவிடுகிறோமோ என்று உள் கேள்வி ஒன்று துருப்பிடித்த ஆணியாய் கேட்க ஆரம்பித்தது.
” ஹ்ம்ம் .. இப்போ Free. வா போகலாம் ” என்று கணவர் அழைக்க அவரின் விரல் பிடித்து நடக்கும் அந்த பெரு வயதின் சிறு குழந்தையை கவனித்தால் காதல் முகம் முழுக்க நிறைவாய் படர்ந்து பூப்பது தெரிகிறது.
சாலையை கடந்தவுடன் இருவரும் கண்ணோடு கண் பார்த்த அந்த ஒரு சிரிப்புக்கு ஈடாகுமா இந்த உலகத்தின் இள வயது கண் பார்வைகள் ?



” ரொம்ப நடந்தாச்சு. கொஞ்சம் Rest எடுங்க. ” என்று சொல்லும் மனைவியை பார்த்துக்கொண்டே அமரும் அந்த கணவர் சிரிக்கிறார்.
” வயசாக வயசாக நீ சொல்வதை நான் கேட்டுக்கத்தான் வேண்டும் “
என்று அவர் சிரிக்க அந்த வயதை வென்ற பெரும் குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் !
” வயசுல உங்களால கேட்க முடியாது. அதனால நான் கேட்டுகிட்டேன். இப்போ உங்க முறை. நீங்க கேளுங்க. நான் பேசறேன் “
என்று சொல்லிக்கொண்டே இருவரும் உரக்க சிரிக்கிறார்கள்.
பூங்காக்கள் அழகான கவிதைகளை கண் முன்னே கொடுத்து கொண்டே இருக்க .. கவிதைகளை வாசித்து வாசிக்காமல் வேக வேகமாக நடக்கும் மற்ற இணைகளை கவனிக்கிறேன். எங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் ?
” கால் வலிக்குதா ? ” என்று கேட்கும் அந்த மனைவியை பார்த்துக்கொண்டே
” இல்லை. கொஞ்சம் rest வேணும் அவ்வளவு தான் ” என்று சொல்லும் கணவர் … கால்களை பிடித்துக்கொள்ள ..
” இருங்க பிடிச்சு விடறேன் “
என்று மனைவி தயாராக .. அவர்களுக்கான தனி மனித அழகான பக்கத்தில் இருந்து நான் விடை பெற்றுக்கொண்ட போது .. மனதில் ஒரே ஒரு கேள்வி / பதில் / என்னவோ ஒன்று வந்து போனது.
” 60 களில் அருகில் அமர்பவளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் ? மனைவி ? காதலி ? தோழி ? இணை ? …அல்லது வேறு என்ன பெயர் ? …. அநேகமாக ” மனிதம் ” என்று இருக்கலாமோ ? “
என்று தோன்றியதை இங்கே உங்களுடன் பகிர்வதில் மனதிற்கு பெரும் நிறைவு. ஒரே ஓர் கேள்வி நம்மிடம் வைத்து விட்டு …என் விரல்களை எண்ணங்களை பதிவிப்பதில் இருந்து விலக்கி வைக்கிறேன்.
” நம்மின் மனிதம் இன்னமும் நம்முடன் இருக்கிறதா ? குறிப்பாக …உயிர்ப்புடன் இருக்கிறதா ? “
” Leave a Question that brings Humanity. Rest …Everything will be alright “



