படம் சொல்லும் பாடம் – 047
” When a Government Decides to Make One Set of People as Best, The Other Set Naturally are Made to Appear Worst. “



ஒரு அழகான குடும்பம். கணவன். மனைவி. மூன்று சிறு பெண் குழந்தைகள். விவாசயம். மலைக்கிராம வாழ்க்கை. நாடு – ஜெர்மனி. காலம் – ஹிட்லர் ஆண்ட நேரம். இப்போதே கதை புரிந்து இருக்கும். ஆனால் இங்கே நடக்கும் நிகழ்வுகள் ஒரு யூதக் குடும்பத்துக்கு அல்ல. ஜெர்மானியக் குடும்பத்திற்கு. முதல் சில காட்சிகளிலேயே அதிர்ச்சி நமக்குள் !
நாட்டுக்காக போரிட அழைப்பு வருகிறது கணவனுக்கு. நாட்டின் போர் நோக்கங்களில் அவனுக்கு உடன்பாடு இல்லை. மறுக்கும் அவனுக்கு தேசத்துரோகி என்ற பெயரோடு … அனைத்து அவமரியாதைகளும் ஆரம்பிக்கின்றன. தன் சொந்த கிராம மக்கள் தன்னை தன் குடும்பத்தை தன் குழந்தைகளை தீண்டத்தகாதவர்களாக பார்ப்பதை அவன் அதிர்ச்சியோடு பார்க்கிறான்.
ஒரு தேசத்தின் தலைமை நாட்டுப்பற்றுக்கு புதிய பெயர் வைக்கிறது. அது என்ன தெரியுமா ? கேள்வி கேட்காமல் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்வது ! இன்னமும் சுருக்கமாக சொன்னால் அடிமையாக வாழ்வது. இன்னமும் சுருக்கமாக சொன்னால் .. இன வெறி நிறை அடிமை ! இதுவே தேசப்பற்று என்று சொல்லும் அந்த நாட்டின் தலைமையை அவன் ஒப்புக்கொள்ளவில்லை.
அனைத்து யூதக் கொடுமைகளும் சிறையிவ் அவனுக்கு நடக்கிறது. கிராமத்தில் மனைவியும் குழந்தைகளும் அதே கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் ! சொந்த நாட்டு மக்களை கொடுமைப்படுத்தும் முட்டாள் தனம் நிறைந்த தீவிரவாதப் பெருமையை அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான். பெரிது பெரிதாக இருக்கும் நகரங்கள், கட்டிடங்கள், வளர்ச்சி … அனைத்துமே அந்த நாட்டில் பெரிதாய் பிரம்மாண்டமாய் இருக்கிறது – மனிதத்தை தவிர !
அவனுக்கு குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதே படம்.
இன வெறி நிறைந்த, முட்டாள் தன, Ego நிரம்பிய ஒருவன் நாட்டின் தலைமைக்கு வந்தால் சொந்த நாட்டின் மனிதர்களுக்கும் இதுவே நடக்கும். ஒன்று … இனவெறி மனிதர்களாக இரண்டு .. தேச துரோகியாக …இப்படித்தான் வாழ முடியும். வாழ வேண்டும்.
ஆனால் ஒன்று. மனிதன் ” எதிர்ப்பது ” என்று முடிவெடுத்து விட்டால் கடைசி மூச்சு வரை எதிர்ப்பான். அவனை எந்த அரசாங்கமும் ஒன்றும் செய்யமுடியாது. ஒன்றுமே செய்ய முடியாது !



நடிப்பு என்று சொல்லவே முடியாத நடிப்பு. அப்படியே கணவன் மனைவியாக அவர்கள் வாழ, உடன் நாம் பயணிப்பது தவிர்க்க இயலா ஒன்று. ஜெர்மனி யின் கிராம வாழ்க்கை கண் எதிரில். கணவனும் மனைவியும் கடிதங்களால் பேசிக்கொள்வது நமக்குள் எழும் கேள்விகள் மற்றும் பதில்கள். ” Do what is right. Whatever You do, I am with you ” என்று சொல்லும் மனைவி பெரும் வரம். அவளின் I Love You வில் அவன் நிமிரும் ஒரு கணம் போதும் – கணவன் மனைவி உறவுக்கு !
எந்த நாட்டுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது ! இப்படி ஒரு ” இனவெறி அல்லது தேசத்துரோகி ” மனநிலை வருகிறது எனில் … அந்த நாடு அழிவை நோக்கி நகர்கிறது என்று அர்த்தம் ! எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல – இந்தியாவிற்கும் சேர்த்து !


