நான் எனப்படும் நான் : 174
” Come back to Body. ” – Thich Nhat Hanh
நான் நேரடியாக பார்க்க நினைத்த இருவர்.
ஒருவரை பார்க்க வாய்ப்பே இல்லை. அவர் Buddha.
இன்னொருவர் Thich nhat Hanh. துறவை உண்மையில் செய்த துறவி. பார்க்க முடியும் என்று தோன்றியது. இப்போது வாய்ப்பில்லை என்று ஆகி இருக்கிறது.
அவருடைய பேச்சில் இருக்கும் நிதானம் எனக்கான பெரும் பாடம் / மற்றும் / ஆச்சர்யம். ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையில் ( வரிக்கும் வரிக்கும் இடையில் அல்ல ). நம்மால் என்று ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு யோசிக்க முடிகிறதோ ( நன்கு கவனிக்கலாம் -பேச அல்ல. ) அன்று தான் நம்மால் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு பேச முடியும். அதென்ன வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி ?
எண்ணங்கள் தொடர் ஓட்டங்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படி அல்ல. ஒரு எண்ணம் நம்முள் உதிர்த்து, அதற்கான அர்த்தத்தை நமக்குள் கொண்டு வந்த பின், வார்த்தையாக மாற்றம் கொண்டு, பின் அதற்கான வார்த்தை பிரயோகமாக வெளியே வருகிறது ! இதற்கு சில நொடிகள் ஆகும் என்பதே உண்மை. அந்தக் கால மனிதர்கள் ( 80 வயதுக்கு மேல் ) பேசும் வேகத்தையும் இப்போதைய மனிதர்கள் பேசும் வேகத்தையும் கவனித்தால் இது புரியும் !
” Stay with that Thought for Few Seconds. It has many Dimensions “
” உடலுக்கு வாருங்கள் ” என்று அவர் அழைக்கும் அழைப்பிற்கு பின் இருக்கும் அர்த்தம் மிக ஆழமானது !
ஆம். உடலை சுமந்து திரியும் நாம் எப்போது உடலுக்கு வெளியே சுற்ற ஆரம்பிக்கிறோமோ … அப்போது தான் நமக்கான அனைத்து பிரச்சினைகளும் ஆரம்பமாகிறது. உடலில் தெரியும் மாற்றங்களை கவனிக்க ஆரம்பித்தால் … அங்கேயே அனைத்து பிரச்சினைகளும் முடிந்து போகும். உதாரணத்திற்கு …
இங்கே தான் ” உடலுக்கு வாருங்கள் ” என்கிற அவரின் அழைப்பு முக்கியமான ஒன்றாக மாறுகிறது.
உடலில் நடக்கும் மாற்றங்களை கவனித்தால் நமக்குள் தேவையான தேவையற்ற வைகளை நம்மாலேயே .. சரி செய்து கொள்ள முடியும்.
ஆழமான கருத்து. என்னால் முடிந்த அளவு சொல்ல முயற்சித்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
” Body is the Best and Sensitive Source of Learning – of all Sources available in the World “
அவரின் மறைவு எந்த அதிர்வலைகளையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. அப்படி ஏற்படுத்தினால் .. அவர் சொன்ன பாடங்களை இன்னமும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம் !
” இங்கே பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. இங்கே வரவும் இல்லை. போகவும் இல்லை. இங்கே அனைத்தும் ஒரே மாதிரி என்றும் இல்லை. இங்கே அனைத்தும் வேறு வேறு என்றும் இல்லை. இங்கே நிரந்தரமான ஒன்று என்று எதுவும் இல்லை. மாற்றமடைந்து கொண்டே இருக்கும் என்றும் எதுவும் இல்லை. இவை அனைத்தும் நம் எண்ணங்கள் மட்டுமே. மற்றபடி அவை அவை அப்படியே தான் நிகழ்கின்றன “
என்கிற வரிகளின் படி அவர் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. வரவும் இல்லை. போகவும் இல்லை.
” No Birth. No Death.
No Fear. No Expectations. “
” இந்தக் கணத்தை முழுமையாக மகிழ்வாக வாழ்வதை விட என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் ? “
என்கிற அவரின் பாடம் எனக்கு வாழ்நாள் பாடம் !
” Live. Here. Now. “
என்னை தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மகிழ்வும் நட்புணர்வும். ஏற்கெனெவே உங்களுக்கு தெரிந்திருந்தால் நாம் இப்போது பயணிப்பதில் இன்னமும் மகிழ் உணர்வு.
பயணிப்போம்.





