நான் எனப்படும் நான் : 183
” When that Tomorrow will come ? “
கடுமையாக உழைக்கும் ஒருவர் சொன்னார்
” நாளைக்கு நல்லாருக்கணும்னா இன்னைக்கு உழைக்கணும் “
சில வருடங்கள் கழித்து அவரை பார்த்த போது கேட்டேன்
” இன்னமும் ” நாளைக்கு ” தான் உழைக்கிறீங்களா ? “
அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னார்
” ஆமா ஆமா … கடன் வாங்கி இருக்கேன்ல “
சில வருடங்கள் கழித்து அடுத்த முறை அவர் இதே கேள்விக்கு என்ன பதில் சொல்வார் என்று என்னால் யூகிக்க முடியும்.
” பொண்ணு கல்யாணம் “
” பையனின் படிப்பு “
” அப்பாவின் மருத்துவ செலவு “
இது ஒரு தொடர்கதை. அப்படி என்றால் ” நாளைக்கு நல்லாருக்கணும் ” மை தேடும் அவர் எப்போது அதை அடைவார் ?
Tomorrow என அழைக்கப்படும் ” நாளை ” எப்போதுமே கானல் நீரின் பெரும் வேர்.
இந்த ” நாளை ” யை நோக்கி நாம் நகரும்போதெல்லாம் நம் காலடியில் இருந்து கொண்டே .. இவர் நம்மை எப்போது கவனிப்பார் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அது என்ன ?
” Today எனப்படும் இன்று ” தான் அது !
ஏன் இந்த ” Today / இன்று ” நம் கண்ணுக்கு தெரிவது இல்லை ?
” Commitments இல்லாமல் வாழ்க்கை இல்லை. “
” Survival இருக்கும் வரை உழைப்பிற்கு ஓய்வு இல்லை. “
இது இரண்டும் புரிந்த பின் … மட்டுமே ” Today / இன்று ” கண்ணுக்கு தெரியும். இது இரண்டும் புரிந்தவர்கள் … இன்று வாழ்ந்து இன்று உறங்குகிறார்கள். இது புரியாதவர்கள் … இன்று உறங்குவதே நாளை விரைவாக எழ வேண்டும் என்பதற்கே .. என்று உறங்க ஆரம்பிக்கிறார்கள்.
அவரின் வெற்றிலைப் பெட்டியை அவர் திறந்து பார்த்தார். பல வெற்றிலைகளில் சில அழுகியதாக இருந்தது. அழுகிய வெற்றிலைகளில் சிலவற்றை எடுத்து பார்த்து …
” ம்ச் .. அழுகிப் போச்சே “
என்று .. அதன் அழுகல் பகுதியை கிள்ளிப் போட்டுவிட்டு நல்ல பகுதியை அவர் சுவைக்க ஆரம்பிக்கிறார்.
அடுத்த நாள் …மீதம் இருந்த வெற்றிலைகளில் மேலும் சில அழுக ஆரம்பித்திருந்தன.
” ம்ச் .. இன்னைக்கும் அழுகிப் போச்சே “
என்று மீண்டும் இதற்கு முன் செய்ததை செய்து ..
அடுத்த நாள் மீண்டும் அழுகிய வெற்றிலை …
இதற்கு முடிவே இல்லை !
செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
அழுகிய சில வெற்றிலைகளை தூக்கி எறிந்து விட்டு நன்றாக இருக்கும் வெற்றிலைகளை ருசிக்க வேண்டியது மட்டுமே !
Commitments இருக்கவே செய்யும். Survival இருக்கும் வரை உழைப்பு இருக்கவே செய்யும். இந்த எண்ணத்தை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டு கவனித்தால் …
தென்றலை உணர முடியும்.
மழையில் நனைய முடியும்.
குழந்தைகளுடன் விளையாட முடியும்.
பூக்களை ரசிக்க முடியும்.
பறவைகளை கவனிக்க முடியும்.
அனைத்தையும் விட முக்கியமானது …
” சிறிது நேரம் வானம் பார்த்து அமர்ந்திருக்க முடியும் “
இத்தனை முடியும்களில் இருக்கிறது ” Today / இன்று ” களின் அழகு.
சுவைக்கிறோமா ?





