நான் எனப்படும் நான் : 190
” What Is Komorebi ? “



ஜப்பானிய மொழியில் கோமோரேபி என்று ஒன்று இருக்கிறது. இது என்ன சொல்கிறது ? என்று கவனித்தால் ஒரு அழகான வாழ்க்கைத் தத்துவம் விளங்கும்.
” சூரிய ஒளிக்கதிர்கள் மரங்களுக்கும் இலைகளுக்கும் கிளைகளுக்கும் இடையில் வரும் அழகு “
என்பது கோமோரேபி யின் அர்த்தம். சரி இதில் என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கிறது ?
கேள்வி ஒன்றை இப்போது இங்கே நம் முன்னே வைக்கும் போது … இது அநேகமாக புரியக்கூடும்.
” கடைசியாக கோமோரேபி யை நீங்கள் எப்போது பார்த்தீர்கள் ? “
ஆம். சூரிய ஒளிக்கதிர்கள் மரங்களுக்கும், இலைகளுக்கும், கிளைகளுக்கும் .. இடையில் வருவதை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் ?
சரி. இதில் என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கிறது ?
இதை அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை கவனிக்கும் மனிதர்களின்
” பார்க்கும் திறன் ” கூட ஆரம்பிக்கும். அது எப்படி ? என்று கேட்டால் பதில் அடுத்து வர இருக்கிறது. கவனிக்கலாம்.
கோமோரேபி – யை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்க வேண்டும் எனில் நீங்கள் கடந்த காலத்தில் வாழ்வதில் இருந்து, எதிர்காலக் கனவுகளில் வாழ்வதில் இருந்து .. அவற்றை ” நிகழ்கால கண்களால் ” பார்த்து இங்கே குருடாக வாழ்வதில் இருந்து விடைபெற்றால் மட்டுமே கோமோரேபி – கண்ணில் தெரியும். இல்லை எனில் எதிரே இருக்கும் கோமோரேபி – கண்ணில் தெரியாது ! தெரியவே தெரியாது !
இப்போது புரிகிறதா வாழ்க்கை தத்துவம் ?
கோமோரேபி யை போல – எதிரே இருப்பதை பார்க்க வைக்கும் அழகு இருந்தும், அதை பார்க்காமல் வாழ்கிறோம் எனில் .. நாம் ” இங்கே இக்கணத்தில் ” வாழவில்லை என்பது உண்மை. கண்ணிருந்தும் குருடாக வாழ்வது என்பதே இன்னொரு உண்மை. கோமோரேபி சொல்லும் வாழ்க்கை தத்துவம் இதுதான். கண்ணுக்கு முன் இருக்கும் அழகான உலகத்தை, காட்சிகளை, உணர்வுகளை, மனிதர்களை, சூழல்களை .. கவனிக்கிறோமா ? இல்லை குருடாக வாழ்கிறோமா ?



கரும் பச்சை இலையின்
குறு வளைவு நுனியில்
காத்திருக்கும்
ஈர்ப்பு விசை மாலைக்கு
கழுத்து நீட்ட
காத்திருக்கும்
ஒற்றைப் பனித்துளி.


