படம் சொல்லும் பாடம் – 060
#படமும்பாடமும் #moviewatching #Nuremberg YouTube
” Self Realization after any War is just Useless. Before War.?. Then .. There won’t be any war ”
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. Hitler தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் உடன் இருந்து அட்டூழியம் செய்த 22 பேர் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு விசாரணையை உண்மையாக நடத்தி … இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதை ! கதை அல்ல. நம் மனதில் பல கேள்விகளை உருவாக்கும் அறிவுப் பெட்டகம் !
ஏன் Hitler படங்களாக பார்க்கிறீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு என்னிடம் இரு பதில்கள் உண்டு.
1. சமீப 100 வருடங்களில், இந்த உலகின் நிகழ்வை பெரிதும் பாதித்தவர்களில் இருவர் மிக மிக முக்கியமானவர்கள். 1. காந்தி 2. Hitler ஒன்று நேர்மறை வெற்றிக்க்கு சொந்தம் எனில் .. இன்னொன்று எதிர்மறை வெற்றிக்கு சொந்தம். நேர்மறை வெற்றிக்கு ” தேசத்தந்தை ” என்றும், எதிர்மறை வெற்றிக்கு ” எனக்கு யார் என்றே தெரியாது ” என்றும் பெயர். என்ன செய்யக்கூடாது என்பதை Hitler இ பார்த்து நிச்சயம் கற்கலாம். அதிலும் இந்தப் படம் இதுவரை பார்த்ததில் மிக மிக ஆழமான கருத்துக்களை கொண்டது.
2. Survival ல் இருக்கும் உண்மைகளை படிக்கவில்லை எனில் வாழ்க்கை நமக்கு புரியப்போவது இல்லை !
” Hitler ” ன் பத்து கட்டளைகள் சொல்லப்பட்ட இடம் இது ” என்று சொல்லும் Assitant இடம் …
” அப்படியானால் இது தான் விசாரணை நடக்க வேண்டிய இடம் ”
என்று சொல்வதில் ஆரம்பிக்கும் படம் கடைசி Frame வரை நம்மை அப்படியே கண் கொட்டாமல் பார்க்க வைக்கிறது. படம் முழுக்க கேள்விகளும் பதில்களும் நம்மை என்னவோ செய்கின்றன. மனிதனுக்கு மதம் இனம் என்று Superiority வந்துவிடக் கூடாது. வந்தால் எதையும் செய்வான் என்பதே இந்தப் படம். ஆவணக்காட்சிகளாக வரும் Black And White காட்சிகளை ஒவ்வொரு நாட்டு பிரதம அமைச்சரும் பார்த்துவிட்டு பதவியேற்றுக்கொண்டால் .. அனைத்து மக்களையும் சமமாக நடத்துவது இயல்பாகவே நடக்கும் !
” எனக்குள் இரு மனிதனாக நான் உணர்கிறேன் – ஒன்று இங்கே இருக்கும் மனிதன் இன்னொன்று நாஜிப் படையின் தலைவன் ”
என்று சொல்லும் முன்னாள் நாஜி இராணுவ தலைவனிடம்
” நாஜிப் படைத்தலைவன் இப்போது இங்கே உள்ளவனை பார்த்து என்ன சொல்கிறான் ? ”
என்று கேட்கப்படும் கேள்விக்கு அவன் வைக்கும் பதிலில் மனம் ஆடிப்போகிறது.
இன்னமும் தான் ஒரு அமைச்சர், மந்திரி, முதன்மை இராணுவ தளபதி …என்று சிரிக்கும் அவர்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாத ஓர் நிலை அது ! கிட்டத்தட்ட ஒரு கனவுலகில் வாழ்ந்தவர்கள் அவர்கள். நினைத்த அனைத்து அட்டூழியங்களையும் செய்தவர்கள். அதில் இருந்து மீளாதவர்கள்
” அதனால் என்ன .. ஆம் .. 1.5 இலட்சம் பேரை கொன்றோம். இப்போது அதற்கென்ன ? ” என்கிறார்கள்.
அந்தக் கனவுலகில் இருந்து மீண்டவர்கள்
” தவறு செய்து விட்டேன் ”
என்கிறார்கள். போர்களில் பங்கேற்றவர்களின் மனநிலை கிட்டத்தட்ட மனநோய்களின் சங்கமம் தான் !
சாட்சியங்களின் பேச்சுக்கு கிட்டத்தட்ட நாம் ” அடப்பாவிகளா ” என்று கண்டிப்பாக மனதுக்குள் திட்டுவோம். அப்படியான சாட்சியங்கள்.
” ஒருவரை கொல்ல எதற்கு ஆறு மாதம் ? நான் அதனால் 3 நாட்களில் கொன்று விடும் மருந்தை கண்டுபிடித்தேன். அதன் மூலம் பலரை கொன்றேன். அது நல்லது தானே ? ”
” Jew என்கிற இனம் இருக்கவே கூடாது. அது அழிவதால் நாட்டுக்கு நல்லது ”
” நாங்கள் பதவிக்கு வந்த பின் அந்தப் பதவியை நாங்களே வைத்துக்கொள்ள முடிவு செய்தோம். அதில் தவறொன்றும் இல்லை. அதற்கான அத்தனை வேலைகளையும் செய்தோம். அதில் ஒன்று யூதர்களை கொன்று குவிப்பது ”
என்று நாம் ஒன்றை ஜீரணம் செய்யும் முன் மற்றொன்று நம் மேல் எறியப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கண்ணில் நீர் வரும். கோபமும் வேகமும் வரும். பின் ” இவனை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும் ” என்று தோன்றும். பிறகு ” என்னவோ போ … மதப் பித்து , அதிகாரக் காமம், Superiority நோய்…இவை தான் உண்மையான தீங்கு போல் ” என்று எண்ணத் தோன்றும்.
படம் முழுக்க ஆங்காங்கே தெளிக்கப்படும் கேள்விகள் …
” நாகாசாகி யில் நீங்கள் எறிந்த குண்டு க்கு என்ன பெயர் ? ”
” வெற்றி பெற்றவர்கள் நடத்தும் Court ல் தீர்ப்புகள் முன்னமே எழுதப்பட்டு விடும். இல்லையா ? ”
” உடலில் பலம் அற்றவர்கள் நாட்டுக்கு வீண். அவர்களை கொன்று நாட்டை சுத்தப்படுத்துவத்தில் என்ன தவறு ? ”
” நாகரீக மனிதர்கள் இதையெல்லாம் செய்வார்களா ? ” என்கிற ஒரு கேள்விக்கு
” May be Civilisation is overrated “- அதாவது
” நாகரீகம் என்பதன் பொருள் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது …”
என்கிற ஒற்றை பதில் நமக்குள் பல அதிர்வுகளை எழுப்புகிறது.
இதுவரை பார்த்த படங்களில் நிச்சயமாக இது ஓர் மிகச்சிறந்த படம். உளவியல் படிப்பவர்கள், அரசியல்வாதிகள், நேர்மையான மனிதர்கள், பயிற்சி வகுப்புகளை நடத்துபவர்கள், வழக்கறிஞர்கள் …மருத்துவர்கள் … கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குறிப்பாக .. மனித நேயம் என்றால் என்ன என்பதை / அது இல்லை என்றால் என்னென்ன நடக்கும் என்பதை கொண்டு புரிந்து கொள்வதை பாடமாக வைத்திருக்கும் படம். இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் .. உங்களின் இளகிய மனம் கண்டு நீங்கள் பெருமை கொள்ளலாம். வன் மனம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். உங்களின் வன் மனம் கடைசியில் உங்களை எங்கே இழுத்து செல்லும் என்பதை படம் பார்த்து அதிர்ந்து .. புரிந்து கொள்ளலாம்.