படம் சொல்லும் பாடம் – 087
#படம்சொல்லும்பாடம் ; 087
” நாம் போகவேண்டியது காசிக்கோ இராமேஸ்வரத்திற்கோ அல்ல. நம் சொந்த ஊருக்கு. அங்கே … நம்மின் தேவை அற்றவை தானாக அழிந்து … நாம் உருவாவோம் “



எனக்கு வயது 51 என்பது ஞாபகம் இருக்கட்டும்.
அரவிந்த் ஸ்வாமி யின் அந்த ஆரம்பமே கவிதை. ஒரு மனிதன் அத்தனை கிளிகளுக்கும் உணவளித்து விட்டு அவை உண்பதை பொறுமையாக அமர்ந்து பார்ப்பது போன்ற ஒரு ஆணழகன் காட்சியை சினிமாவில் இப்போதெல்லாம் பார்க்க முடிவது இல்லை.
இப்போதும் என்னுடைய அப்பத்தா வீட்டிற்கு செல்லும்போது நான் சிறு வயதில் நான் வளர்ந்த அந்த பழைய வீட்டை ” எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும் மகிழ்வான வீட்டை ” பார்க்காமல் வருவது இல்லை.
” கோவிலுக்கு வந்திருக்கேன். இது மட்டும் அப்படியே இருக்கு “
என்பதில் இருக்கிறது நிறைய அர்த்தங்கள். உண்மை இல்லை என்றாலும் கடவுள் என்னும் தத்துவம் அது சார்ந்த கோவில்கள் அப்படியே இருக்கிறது. ஆனால் உண்மையான மனிதர்கள் மாறிவிடுகிறார்கள்.
அந்தப் பச்சை .. அந்த தூய்மையான சாலைகள்…. பேருந்து … மனித வெள்ளந்தித்தனம் …. எப்படி இப்படி காட்சிக்கு காட்சியாக இழைக்க முடிகிறது ?
ஒரு மனிதன் தன் வாழ்வியலில் … தான் வாழ்ந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்திருந்தால் மட்டுமே இப்படி இழைக்க முடியும். வாழ்த்துகள் இயக்குனருக்கு !
ஒவ்வொரு Character ஆக தங்களை அவிழ்த்துக் கொள்ளும் அழகு, காட்சிகளில் பேசா பொழுதுகளில் இருக்கும் மௌனம் … இப்போதெல்லாம் இப்படியான படங்களை காண முடிவது இல்லை. இப்போது இருக்கும் படங்களில் இருக்கும் எரிச்சலே … அதிகப்படியான கத்தலும், அதிகப்படியான இசையும் … தான்.



அண்ணன் தங்கை உறவு என்பது கண்ணெதிரில் தெரியும் அப்பா மகள் உறவு. அதை அப்படி பிறந்தவர்களால் மட்டுமே உணர முடியும். கொலுசை காலில் அணிவிக்கும் ஒரு காட்சியும் அப்போது வரும் கண்ணீரும் அந்த உறவிற்க்கான வாழும் சாட்சி. நிறைய நேரங்களில் தங்கையை கவனிக்கும் அண்ணன்களுக்கு … வாழ்ந்த பழைய நாட்கள் கண்ணுக்குள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் நிறைய அண்ணன்களுக்கு அந்த பழைய நாட்களை வார்த்தைகளில் சொல்ல தெரியாது. அல்லது சொல்ல வராது.



” இது அவ வீடு ” என்று மனைவியை பற்றி பெருமையாக சொல்லும் கார்த்தியை இதுவரை பார்த்தது இல்லை. இப்படியும் நடிக்க முடியும் என்கிற கார்த்தி இன்னமும் நிறைய வெளி வர வேண்டும். அந்த ஜல்லிக்கட்டு எனக்கு எம் நினைவுகளை கொண்டு வந்தது. அப்பத்தா வீட்டுக்கு பக்கத்தில் தான் ஜல்லிக்கட்டு நடக்கும். இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் .. படிப்பு சார்ந்த ஊர் வேறு என்பதால் முடியாமல் போனதால் … நான் செய்ய முடியாமல் போன விடயங்களில் இது இன்னமும் இருக்கிறது. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதை விவரிக்கும் அழகும், யாருக்கோ வேண்டாம் என்பது யாருக்கோ மிக மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது. ” அந்த Cycle தான் சாமி ” என்னும் அழகில் இருக்கிறது வாழ்க்கை.
அதெல்லாம் இருக்கட்டும் … அந்த காளையை மனைவி இழுத்துக்கொண்டு வரும் அந்தக் காட்சி … உயர் ரகம்.



ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் உணர்வுகளை ரசிப்பதை விட்டுவிட்டு அப்படி என்ன ஓட வேண்டி இருக்கிறது என்னும் கேள்வியுடன் முடியும் அல்லது அந்தக் கேள்வியை ஆரம்பித்து வைக்கும் படம். ஓடிக்கொண்டே இருப்பவர்கள், உணர்வுகளை தொலைத்தவர்கள், பணத்தின் பின்னே ஓட ஆரம்பித்தவர்கள், நகரங்களிலேயே – மூடிய அறைகளில் வாழ்ந்து பழகியவர்கள் … இவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டியது இல்லை. இந்தப் படத்தை பிடிப்பவர்கள் – நல்ல உணர்வுகளை நிறைய மிச்சம் வைத்திருக்கும் நேர் வாழ்க்கை கோடீஸ்வரர்கள்.
நீங்கள் யார் என்பதை கொஞ்சம் உரசிப்பார்க்க உதவும் கண்ணாடி பிம்பம் தான் இந்தப் படம்.
” நல்லவர்கள் மன்னிக்க பழக வேண்டும். இல்லை எனில் … நல்லவர்களின் வலியும் வார்த்தைகளும் .. பிறருக்கு கெடுதலாக நடக்கும் “
என்னும் வரி மிக மிக யோசிக்க வைக்கிறது.
” சிறு சிறு விடயங்களில் குழந்தைகளை அங்கீகரித்து அவர்களின் மகிழ்ச்சியில் நாம் இருப்பது .. நமக்கு சாதாரணம். ஆனால் அவர்களுக்கு அது மிக மிக பெரிய விடயம் ” என்னும் கருத்தோடு படம் முடியும் போது ஒன்று தோன்றியது.
நாம் போக வேண்டியது காசிக்கோ இராமேஸ்வரத்திற்கோ அல்ல. நம் சொந்த ஊருக்கு. அங்கே …. நம்மின் தேவை அற்றவை தானாக அழிந்து … நாம் உருவாவோம்.