படம் சொல்லும் பாடம் – 092
#படம்சொல்லும்பாடம் : 092
” Without Saying Goodbye “
“சில சந்திப்புகள் நமக்கு என்று எழுதப்பட்ட காரணங்களால் தான் நடக்கின்றன “
***
ஒரு படம் பெரு நாட்டின் அழகை சொல்கிறது. இயற்கையான சூழலை கண்ணில் கொண்டு வருகிறது. உணவை, ஓவியத்தை, நடனத்தை, பேச்சு வழக்கினை, நிலப்பரப்பை, மலை, ஏரி, சுடு நீர்க் குளியலை … இவ்வளவு அழகியலையும் காண்பிக்க முடியும் எனில் … அந்தப் படத்தின் கதையும் நம்மை யோசிக்க வைக்க கூடியதாகவே இருக்கும்.
பெரும் பணக்கார வியாபாரியின் மகன், பெரிய ஓட்டலை கட்டும் எண்ணத்துடன் வரும் இடத்தில் சிறு ஓட்டலை அல்லது ஓட்டல் மற்றும் சிறு தங்கும் விடுதியை வைத்து நடத்தும் பெண்ணை சந்திக்கும் கணத்தில் வாழ்க்கை தன் கணக்கினை ஆரம்பிக்கிறது. இரு வித்தியாச ஆளுமைகள். ஒரு ஆளுமை – பெண் ஆளுமை – யதார்த்த வாழ்வியலை வாழ்க்கைக்குள் கொண்டு வர, இன்னொரு ஆளுமை – ஆண் ஆளுமை – பணம் வியாபாரம் முன்னேற்றம் என்று கட கடவென்று யோசிக்க … விரும்பும் வாழ்வியலை வாழ்க்கைக்குள் கொண்டு வர முயல .. வாழ்க்கை அவர்களை என்ன செய்கிறது என்பதே கதை !
***
ஆட்டத்துடன் துவங்கும் அந்தப் பெண் வாழ்க்கை தான் கதையின் அடி நாதம். Stay away from everything and live here … என்னும் வாழ்வியலை ஒவ்வொரு காட்சியாக அவள் நகர்த்த … பணம் புகழ் இலக்கு என்று ஒடும் அவனின் ஓட்டம் மெல்ல மெல்ல ஒடுங்கி …கடைசியில் வாழ்கையின் அழகு ” பெரிய பெரியதில் “இல்லை …மாறாக … இருக்கும் இடத்தில் இருக்கும் ஆன்மாவுடன் இருக்கும் உணர்வில் இருக்கிறது என்று படம் தத்துவார்த்தமாக புரிய வைக்கும் போது … படம் என்னவோ முடியாமல் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது.
***
கதாநாயகனும் கதாநாயகியும் செல்லும் அந்த Trekking… அந்த Trekking முழுக்க கிடைக்கும் வாழ்வியல் அர்த்தங்கள் … குறிப்பாக Smartphone உடையும் காட்சி …. நாம் எதிலோ நம்மை தொலைத்துவிட்டு … எங்கேயோ நம்மை தேட ஆரம்பிக்கிறோம்.
ஆண் பெண் இணைதலை நாம் வேறு விதமாக பார்த்துக்கொண்டு இருக்கும் போது .. அதை மிக எளிதாக எடுத்துக்கொண்டு புரிதலை நோக்கிய பயணத்தை தொடங்கும் அந்த உறவு தான் classic ! குறிப்பாக …
” நான் உனக்கு சரி வருவேனா? ” என்னும் கேள்விக்கு
” தெரியவில்லை ” பதிலும்
” உனக்கு ? ” என்னும் மறு கேள்விக்கு …
” சந்தேகம் தான் “
என்னும் பதிலுடன் ஒரு வாழ்வு துவங்குவதை நம்மால் யோசிக்க முடியுமா ?
இவ்வளவும் சில இணைதலுக்கு பின் !
***
மிக நெருக்கமான படம். குறிப்பாக ஒரு தேசாந்திரி யாக, பயணியாக !
….