படம் சொல்லும் பாடம் – 094
A Private War
” அனைத்து பணிகளும் பணிகள் அல்ல. சில பணிகள் மிக மிக பெருமை வாய்ந்தவை. “



Rosamund Pike – நான் பார்த்த நடிகைகளில் மிக intense ஆக நடிக்கக்கூடிய நடிகை. யதார்த்தமான உடல்வாகு, சுருள் சுருளாக கேசம், கண்களில் தீவிரம், அதே கண்களில் சோகம், கோபம், வீரம் காட்டும் இலாவகம்…. ஒரு சில நடிகைகளால் தான் இது முடிகிறது !
ஒரு பத்திரிக்கையாளர். போர் நடக்கும் இடத்திற்கு சென்று, செய்தி சேகரித்து எழுதுகிறார். போரின் தீவிரங்களை வார்த்தைகளால் கொண்டு வருகிறார். ” உலகத்திற்கு தெரியப்படுத்துவது தான் என் வேலை ” என்று கருமமே கண்ணாய் இருக்கிறார் – உயிரை பணயம் வைத்து ! Sri Lanka வில் தமிழ் ஈழ விடுதலைப்படையை சந்திக்கும் போதே நமக்கு தெரிந்து விடுகிறது – அவரின் நோக்கம் போருக்கு பின் இருக்கும் அரசியல் அல்ல. போரில் நடக்கும் அட்டூழியம். அவருக்கு தேவை அதன் எழுத்து வடிவம். அதை இந்த உலகத்துக்கு கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். அப்படியான ஒரு போர்ச்சூழலில் ஒரு பக்க கண் போகிறது. நம்ம ஊர் வில்லன்களை போல ஒரு கண்ணை மறைத்து … படம் முழுக்க வாழ்கிறார். படம் என்றே நம்ப முடியாத அளவிற்கு … ஒரு படம்.
ஸ்ரீ லங்காவில் காயம் பட்டு படுத்திருக்கும் ஒன்றும் அறியா மனிதர்கள், ஈராக்கில் தோண்ட தோண்ட வரும் பிணங்கள், லிபியாவில் கடாபியை சந்திக்கும் தருணங்கள், திமிராக பேசும் கடாபி, அடித்து கொல்லப்பட்ட கடாபி, காதில் வழியும் இரத்ததுடன் சிறுவன், மெத்தையில் படுத்த வண்ணம் இறந்து போன இளம்பெண் … என்று காட்சிக்கு காட்சி நம்மை ஏதோ ஒன்று வந்து அறைந்து கொண்டே இருக்கிறது. மனிதம் எப்போதும் …. உயிர்களை கொன்ற பின்பே விழிக்கிறது – போர் நடக்கும் நாடுகளில் !
போரில் நடக்கும் காட்சிகளை பக்கத்தில் இருந்து கவனித்து, எழுதிய பின் ஒரு பத்திரிக்கையாளரின் தனி வாழ்வில் நடக்கும் அவலங்களை, வலிகளை, தனிமையை, ஏக்கத்தை, உடல் பசியை, கெட்ட பழக்கங்களின் வருகையை … அனைத்துப் பக்கங்களையும் படம் காண்பிப்பதால் … Pike க்கு ஒரு பெரிய Larger Than Life Heroine மாதிரியான image எல்லாம் இல்லை. சராசரி பெண். பாசம், நேசம், துணிவு, கோபம், நிறைந்த சராசரி பெண்ணாக இருக்கிறார். சில காட்சிகளில் உடை அற்று நடிக்கிறார். ( குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும் ). அப்படி நடித்தாலும் அவரை பார்க்கும்போது பாவமாகவே இருக்கிறது அல்லது வருகிறது. அந்த நிலைத்துப் போன ஒரு கண் .. நிறையவே பேசி விடுகிறது – குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் நீர் வழியும்போது.
கூடவே பயணிக்கும் அந்த புகைப்படக்காரர் … என்ன ஒரு நடிப்பு ! அசாத்தியமான செயல்களை நாம் செய்யும்போது அந்த புகைப்படக்காரர் போல யாரோ ஒருவர் நம்முடன் வந்துகொண்டே இருப்பார் – இறப்பு வரை.
இறக்கப்போகும் ஒரு குழந்தையை ஒற்றைக்கண்ணால் கீழே தொங்கும் உதடுகளோடு பார்க்கிறாரே … அந்த ஒரு காட்சி போதும் … மிகச்சிறந்த உணர்வு ஒன்றை …மிகச்சிறந்த படத்திற்கு கொடுக்கும் அந்த திறமையை நாம் புரிந்து கொள்ள.
உண்மைக் கதை என்னும் போது இன்னமும் வலி அதிகமாகிறது !
” முதலில் செய்து விடுவோம். பயம் அப்புறமாக வரும். பார்த்துக்கொள்ளலாம் ” என்னும் அந்த தொனி தான் படத்தின் அச்சாரம்.



படத்தை பார்த்து முடிக்கும்போது … ” போர் எதற்கு ? என்றே கேட்க தோன்றும். அதே நேரம் … மனித திமிரின் ஒரு அங்கம் போர் என்பதால் .. உலகம் உள்ளவரை போர் இருக்கும் என்றே தோன்றுகிறது.
படம் முழுக்க இரத்தம் பல வழிகளில் தெறித்துக் கொண்டே இருக்கிறது. அனைத்து உடல்களில் இருந்தும் வரும் இரத்தம் ஒரே நிறம் தான். ஆனால் …
போரின் நிறம் தான் வேறு வேறு !