படம் சொல்லும் பாடம் – 107
” பணம் தேவை தான். ஆனால் உணர்வும், மகிழ்வும், நட்புறவும், புரிதலும், குடும்பமாக வாழும் கலையும், தன்னைத் தான் உணர்தலும் … இல்லா இடத்தில் பணத்திற்கு Value இல்லை “



எளிய கதை. ஆனால் ஆரம்பித்தது முதல் இறுதி வரை …உணர்வுகள் துடிக்கின்றன. கதை இருக்கட்டும். அந்தப் பெரியவரின் நடிப்பின் யதார்த்தம் – Master Class. மூத்த அண்ணனின் உணர்வுகள் படம் முழுக்க. இரண்டாம் அண்ணன் ஒரு பக்கம் ” என்ன செய்யறது ? ” ம் இன்னொரு பக்கம் பாசமிகு அண்ணனாக அழுகையை உள்ளே அழுத்தி வைப்பதும் … நடிப்பு நமக்குள் என்னவோ செய்கிறது. மூத்த அண்ணன் அமைதியாகி விடும்போதெல்லாம் நமக்குள் இயலாமை வருகிறது. மலையாள இயக்குனர்கள் வித்தியாசமான கதைக் களங்களை மட்டும் யோசிப்பதில்லை. எளிய களங்களை கண்டுபிடித்து … அவற்றில் மிக மிக எளிய மனிதர்களை வைத்து … வாழ்க்கை என்றால் என்ன என்று காண்பித்து விடுகிறார்கள்.
ஒரே ஒரு புகைப்படம். பெரிய அண்ணன் கடைசி தம்பியை தூக்கி தோளில் வைத்திருக்கும் படம். அது தான் கதையின் அடிப்படை. பல மூத்த அண்ணன்களுக்கு இளைய தங்கை அல்லது தம்பி எப்போதும் மகன் தான். கிட்டத்தட்ட மகன் அல்ல. நேரடியாகவே மகன் மகள் தான். அப்படித்தான் இந்தக் கதையின் கருவே அமைகிறது. ஒரு அண்ணனாக …. இந்தக் கதை எனக்குள் மிக மிக நெருக்கமாய். தங்கைக்கு தம்பிக்கு ஒன்று என்றால் …நமக்குள் ஒரு துடிப்பு வருமே அது அண்ணன் துடிப்பு அல்ல. அது அப்பாக்களின் துடிப்பு.
சொத்துப் பிரச்சினை போல ஆரம்பித்து ….உறவு மிக முக்கியம் என்னும் கட்டத்திற்கு வந்து … கடைசியில் மனதிற்குள் ஏற்படுத்தும் அழுத்தம் தான் மொத்தப் படமும். படம் பார்த்து முடித்துவிட்டு நம் உறவுகளை பார்த்தால் நமக்கு நம் உறவுகள் நமக்கு மிக மிக பிடிக்க ஆரம்பிக்கும்.
ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல நடிப்பில். இன்னமும் கொஞ்சம் சரியாக சொன்னால் வாழ்ந்திருக்கிறார்கள். குற்றத்திற்கு பிறகு – வரும் காவல்துறை அதிகாரியின் நடிப்பும். அனைத்தும் இயல்பு.
படத்தில் ஆங்காங்கே காற்று மென்மையாக வன்மையாக வீசிக்கொண்டே இருக்கிறது.
மனத்திற்கொள்ளும்.


