நான் எனப்படும் நான் : 129
” World Stays as an Everyday Puzzle.
The Brilliant finds numbers as answer.
The Peaceful Finds Smile as Answer.
I choose to Smile. “



Covid இரண்டாம் அலை. அவ்வளவு கோபம். ஒருவித இயலாமை. இறந்த உடல்களை பார்க்க பார்க்க மனம் கேள்விக்குறியாக பதறுகிறது. அதே மனதை சிரிப்பு தான் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தப்படுத்துகிறது. என்ன செய்வது ? என்கிற மனம் நாடும் ஒரு வித சிரிப்பு தான் அனைத்திற்கும் பதில்.
Positive ஆக எதிர்கொள்ள வேண்டும் – என்று சட்டென சிலர் போதிக்க துவங்கும்போது எனக்குள் சிரிப்பு தான் வருகிறது ! இதே பக்கங்களில் வாழ்க்கையின் மென் அழகு பக்கங்களை நான் பல முறை பகிர்ந்து இருக்கிறேன். அதை படித்து தன் வாழ்வின் மென் பக்கங்களை கண்டுபிடித்தவர்களும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஒரு வார்த்தை அல்லது ஒரு வரி கூட பேசாத மனிதர்கள் இப்போது Positive ஆக இருப்பது பற்றி பாடம் எடுக்க முயற்சிப்பதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ஆம். எப்போதும் வாழ்க்கையை அழகாக பார்ப்பவருக்கு எப்போதாவது கோபம் வரும். எப்போதும் வாழ்க்கையை ஒருவித அடிமை மனநிலையில் பார்ப்பவருக்கு எப்போதாவது Positive மனநிலை பற்றிய சிந்தனைகள் வரும். சிரித்தே கடக்கிறேன் !
கண்ணுக்கு முன் தவறுகள் தெரிகின்றன. நிர்வாக தவறுகள். அடுத்த தவறாக அதை மறைக்க நினைக்கும் அரசியல் முயற்சிகள். இவை அனைத்திற்கும் இடையில் Oxygen அற்று சரியும் மனித உடல்கள். இந்த கொடுங்கோலத்திற்கு சப்பைக்கட்டு கட்டும் அறிவுஜீவிகள். அவ்வளவையும் சிரித்தே கடக்க வேண்டி இருக்கிறது. ” அத்தனையும் இயற்கை பார்த்துக்கொள்ளும். அவரவர்க்கு உரிய நியாயத்தை அது வழங்கும் ” என்றும் உள்ளே ஓர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. விழும் ஒவ்வொரு உடலுக்கும் ஏதோ ஒரு மனித தவறு காரணம் ! இங்கே தவறுக்கு தண்டனை உண்டு. என்ன … நாம் எதிர்பார்க்காத பொழுதில் எதிர்பார்க்காத விதத்தில் அது சட்டென நிகழும். அப்போது தோன்றும் ஒரு வரி … ” கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க மனிதர்களே ! “. நான் ஏதோ ஒரு வானத்தில் மிதந்து கொண்டு இதை எழுதவில்லை. இது எனக்கும் பொருந்தும். ஆம். தவறு செய்யும் அனைவர்க்கும். நான் உட்பட. அங்கும் சிரித்தே கடக்க வேண்டும்.
எனக்கும் நாளைக்கு ஏதோ ஒன்று நடக்கலாம். உங்களுக்கும். நமக்கும். அதற்கும் தயாரோவோம். சிரித்து பழகுவோம். உலகம் நம்மை சிரித்த முகமாகவே பார்க்கட்டும். இங்கே நடக்கும் எதுவும் நம்மை பாதிக்கவில்லை என்றே உலகம் உணரட்டும். ஆனால் ஒன்று நிச்சயம். விழும் ஒவ்வொரு உடலுக்கும் .. ஏதோ ஒரு மனித தவறுதான் காரணம். ஏன் எனில் … இயற்கை எப்போதுமே தவறு செய்வது இல்லை. தண்டனை கொடுப்பதிலும் !
இன்னமும் நிறைய உடல்கள் இந்த உலகில் இருப்பதால் … சிரித்தே வாழப் பழகுவோம். கடைசி வரை உடன் வரப்போவது அது மட்டும்தான் !


