Covid 19 – 004



” அனைவரையும் கொன்று விட்டு தான் இது நம்மை விட்டு செல்லும் ! “
இந்த வரியை கேட்டவுடன் நமக்குள் என்னவோ செய்யும். மெதுவாக எண்ணங்கள் வேறு உலகம் நோக்கி பயணிக்கும். ஆம். யாரும் அற்ற உலகம் நினைவுக்கு வரும். பின் யாருமற்ற இந்தியா. பின் யாருமற்ற தமிழ்நாடு. பின் யாருமற்ற நம் வீடு. பின் யாருமற்ற நாம். பின் நாமும் இறந்து போவது போல … காட்சிகள் நமக்குள் ஓடக்கூடும் ! இங்கே தான் ஆரம்பிக்கிறது Negativity !
” அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்ய தவறியது “
நமக்குள் யாரோ நம்மை கைவிட்டுவிட்டு போன மனநிலையை இது ஏற்படுத்தும்.
” Oxygen கையிருப்பு இல்லை “
நம்மை இயற்கை கைவிட்டு விட்டதாக தோன்றும்.
” மருத்துவமனைகள் பெரும் தொகையை வசூலிக்கின்றன “
நியாயங்கள் இந்த உலகில் இல்லை என்று தோன்றும்.
இவை அனைத்தும் இன்னமும் இது போன்ற வரிகள் அனைத்தும் நமக்குள் ஒருவித இயலாமைத்தன்மை மற்றும் எதிர்மறை தன்மையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஏற்படும் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்மை செயல் இழக்க செய்ய வைத்து பின் உடலில் அது Reflect ஆகும். வெளி செய்திகள் அப்படித்தான். அவை பரபரப்பை அடிப்படையாக கொண்டவை. ஏன் Breaking News களில் நல்ல செய்திகள் வருவது இல்லை என்று நாம் யோசித்தது உண்டா ?



என்ன செய்ய வேண்டும் ?
” அனைவரையும் கொன்று விட்டு தான் இது நம்மை விட்டு செல்லும் “
அப்படி அல்ல. இறப்பு வைரஸால் நிகழ்த்தப்படுவது இல்லை. அறிவியலுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். ஆனால் இறப்பு .. பிறப்பை போல ஒவ்வொருவருக்கும் அவருக்கு விதிக்கப்பட்ட நேரத்தில் தான் நடக்கும். இவ்வளவுக்கும் இடையில் நேற்று 80 / 90 / 100 வயது பாட்டிகள் / தாத்தாக்கள் Vaccine போட்டுவிட்டு ” vaccine போடுங்க பிள்ளைகளே ” என்று சிரித்து சொல்கிறார்களே .. அதன் அரத்தம் என்ன ? அவர்கள் இதே போல எத்தனை கடினமான தருணங்களை கடந்து வந்திருக்க கூடும் ? எனவே .. யாருக்கு எப்போது எழுதி இருக்கிறதோ ( இயற்கையால் ! ) அப்போது தான் இறப்பு வரும். அனைத்து வசதிகளும் இருந்து இறப்பவர்களும், எந்த வசதி இல்லை என்றாலும் பிழைப்பவர்களுமே இதற்கு சாட்சி !



” அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்ய தவறியது “
ஆம். உண்மை தான். ஆனால் அதுவே நமக்கான இறப்புக்கு காரணம் அல்ல. நதி பெருக்கெடுத்தால் ஊர் அழியாது. ஊரின் கரையோர பகுதிகள் மட்டுமே அழியும். ” பாதுகாப்பான பகுதிகளை ” நோக்கி கரையோர மக்கள் நகர்ந்தால் பாதுகாப்பு நிச்சயம். ( Mask /Sanitize ஞாபகம் வருகிறதா ? )



” Oxygen கையிருப்பு இல்லை “
ஆம். இல்லை. ஆனால் நமக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை. நமக்கென்று எங்கோ ஒரு oxygen கலன் காத்திருக்கும். சரியான நபர் மூலம் அது நம்மை அடையும். இந்த சூழலிலும் Oxygen கிடைக்கும் மனிதர்களுக்கு அதுதானே காரணமாக இருக்க முடியும் ?



” மருத்துவமனைகள் பெரும் தொகையை வசூலிக்கின்றன “
ஆம். தவறு தான். அதற்கான சரி / தவறு பலனை மருத்துவமனை அனுபவிக்கும். ஆனால் நாம் சம்பாதித்து வைத்திருப்பது எதற்கு ? நம்மை இந்த மாதிரி இக்கட்டான சூழலில் இருந்து காப்பற்றிக்கொள்ளவே. மீண்டு வந்தபின் மீண்டும் இதை விட பன்மடங்கு சம்பாதித்துக்கொள்ளலாம். பணம் இக்கட்டான தருணங்களில் நம்மை காக்கவே. எப்போதும் சேமிப்பாகவே இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க அல்ல.



இப்படி ஒவ்வொரு எதிர்மறைக்கும் ஒரு நேர்மறை பார்வை உண்டு. நேர்மறை பார்வைகள் நடுக்கடலில் கிடைக்கும் மிதக்கும் பெரு மரம் போல ! ஏறிக்கொண்டால் கரையை ஓர் நாள் அடைந்து விடலாம். அதை விட்டுவிட்டு கடலை தூற்றிக்கொண்டே இருப்பது நம்மை வலுவிழக்கவே செய்யும். நம் தூற்றலால் கடல் எப்போதும் மாறுவது இல்லை.
அதன் இயல்பு ” எதிர்பாரா இயக்கத்தால் இந்த உலகை சந்திப்பது “.
நம் இயல்பு ?
எதையும் எதிர்பார்த்து காத்திருத்தல். கிடைக்கும் வாய்ப்பில் முன்னேறுதல். அத்தனையையும் கவனித்து சிரித்துக் கொண்டே கரையை அடைதல். கரையை அடைந்த பின் கடலை பார்த்து .. ” நானா ? உன்னிடமா ? வீழ்வதா ? … நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ” என்று மனதிற்குள் சொல்லிவிட்டு பாதுகாப்பான பகுதியை நோக்கி நகர்வது.
அவ்வளவே வாழ்க்கை. அவ்வளவே வேண்டும். நமக்கு நம்மிடம் இருந்து.



( Representative pic is from Twitter. )


