படமும் கற்றலும் : 011
” நினைவுகளின் பிறப்பில் நாம் மீண்டும் பிறப்பது இயல்பே “
அந்த புகைப்படம் பார்த்தவுடன் சாரை சாரையாய் ஊறிய பழைய நினைவுகள் ! மீண்டும் மீண்டும் புகைப்படம் பார்க்க பார்க்க ஊர்ந்த நினைவுகளுக்கு கை கால் முளைத்து … நடக்க தொடங்கி இருந்தது ! காவேரி, மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், Maris Theater, புதிய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் …. என்று நினைவு அதன் பக்கங்களை புரட்டிக்கொண்டே நகர ஆரம்பித்தது. எனக்கும் திருச்சிக்குமான நெருக்கம் மிக அதிகம். எனது ஊர் கள்ளக்குறிச்சி யில் இருந்து எனது தந்தையின் ஊர் கொப்பனாபட்டி செல்லும் போது ஒவ்வொரு முறையும் நான் கடந்து செல்லும் ஊர் திருச்சி. காவேரி எனக்குள் குதூகலம் கொடுக்கும் வரவேற்பை அளிக்கும். பேருந்தில் பயணம் செய்யும்போது சட்டென ஆற்றின் காற்று அனைவரையும் அரவணைக்கும். குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் ” காவேரி பார் ” என்று ஆற்றை காண்பிப்பதும் பயணத்தில் இடம்பெறும். காவேரி க்கு முன்னும் பின்னும் பரபர என இயங்கும் ஊர் காவேரிக்கு முன் அமைதியாகிப் போகும். பின்னே ? ஆற்றுக்கு முன்னே எந்த ஊரால் ஆட்டம் போட முடியும் ? ஆறு வந்தால் அடங்கி நிற்க வேண்டும். ஆற்றுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் அது ஊர். இல்லை எனில் அது just ஊர்வனவாக வாழும் மனித கூட்டத்தின் வசிப்பிடம் !
பனிரெண்டாம் வகுப்பு படித்தவுடன் Entrance Exam காக இங்கு தான் நான் படித்தேன். என்னுடைய சிறிய தாத்தா வீட்டில் தங்கிக்கொண்டு படித்த நாட்கள் அவை. தாத்தாவின் வீடு பாலக்கரையில். அங்கே இருந்து Maris Theater இருக்கும் பகுதிக்கு நடந்தே சென்று படித்து வருவேன். வழியில் கல்லூரிகளும் Church ம் சிறு சிறு கோவில்களும். ( வழியில் ஒரு மசூதி பார்த்த ஞாபகமும் ! ). அப்படி நடந்த போது ஒருமுறை தோன்றியது தான் மலைக்கோட்டை க்கு சென்று மேலே ஏறி பார்க்க வேண்டும் !
எனக்கான படிக்கும் நேரம் சரியாக இருந்தாலும் கொஞ்சம் முன்னமே கிளம்பி மலைக்கோட்டை நோக்கி நகர ஆரம்பித்தால் வழியில் அழகாக ஒரு குளம் வரவேற்றது. ( இன்றும் இருக்கிறதா ? ). குளம் சுற்றி Burma Bajaar வியாபார கடைகள். சாரதாஸ் கடந்து இடது பக்கம் ஒரு சிறு வளைவை அடைத்தால் மலைக்கோட்டையின் வாசற்படி. வரிசையாய் பூஜை பொருட்களுக்கான கடைகள். மேலே இருக்கும் பிள்ளையாரை கீழேயே ஒருமுறை பார்த்து விட்டு மேலே ஏற ஆரம்பித்தது இன்னமும் நினைவில். கோவில்களுக்கு செல்லும்போது என் பார்வை தெய்வத்திடம் நிலைத்தது இல்லை. மாறாக … அந்த கோவிலின் கட்டமைப்பில் ஆரம்பித்து அங்கே வரும் மனித முகங்களின் வேண்டுதல் அடங்கிய தேடல்களை கவனிப்பதில் அதிகம் இருக்கும்.
சிறு வயதில் படிக்கட்டுகளில் ஏறுவது போல மகிழ்வு இந்த உலகத்தில் இல்லை. என்னை பொறுத்தவரை அதற்கு இரு காரணங்கள்.
1. உடல் fitness.
2. 2. மேலே அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கும் ஆச்சர்ய கேள்விக்குறி.
படிக்கட்டுகளில் ஏறும் மனிதர்களிடம் சில வினோத behaviors ஐ பார்க்க முடியும். ” சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே ஏறுபவர்கள். ” சரவண பவ ” என்று ஏறுபவர்கள். அரசியல் பேசிக்கொண்டே ஏறுபவர்கள். குடும்ப நிகழ்வுகளை பேசிக்கொண்டே ஏறுபவர்கள். Just சந்தித்து பேசிக்கொண்டே ஏறுபவர்கள். ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களின் இயக்கம் ஏற்றத்தில் மட்டுமே இருக்கும்.
மேலே ஏறிய பின் எனக்குள் கண்ணில் பட்டது முதலில் பெரு வெளியும், பின் சிறு நகரமும். ஆனால் அவை அனைத்தையும் கடந்து … பெரு வெள்ளை வளையும் பாம்பாய் காவேரி யின் வீச்சு. நான் பார்த்து அதிசயித்த ஆற்றின் பார்வைகளில் அது மிக முக்கியமான ஒன்று. நகரம் அதன் வீச்சுக்கு முன் ஒன்றுமே இல்லை. ” என்னை பயன்படுத்திக்கொள். “. என்று சொல்லும் அதன் கம்பீரம் ! ” எனக்கு எவ்வளவு தீங்கு செய்தாலும் உனக்கு நான் நல்லது செய்வேன் ” என்கிற நேர்மறை திமிர் !
பகலில் செல்வது ஒரு அழகு எனில் இரவு ஏழு மணிக்கு சென்று பார்ப்பது இன்னொரு அழகு. வெளிச்ச நகரம் இரண்டாக பிளந்து நிற்பதை வைத்து … அதுதான் காவேரி என்று தன் கண்டுபிடிப்பை பெருமையாக சொல்லும் மனிதக்கூட்டத்தை அப்போதும் பார்க்கலாம். ( இதையெல்லாம் கவனிக்காது தன் வீட்டை அங்கே நின்றுகொண்டு தேடும் மனிதக்கூட்டத்தை பார்த்தால் ” சிரித்து கட ” மட்டுமே ஞாபகத்தில் வரும். ).
பதின்ம வயது அது. அதனால் திருச்சி யின் ஞாபகங்கள் எனக்கு இன்னும் அதிகம். பின்னே ? சிறு கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த ஒரு மாணவன் சட்டென ஒரு நகரத்தில் விழித்தால் …காண்பவை எல்லாம் ஆச்சர்யமாகத் தானே இருக்கும் ? சக மாணவனும் சக மாணவியும் அருகாமையில், எதிர் எதிரே நின்று, ஒருவருடன் இன்னொருவர் என்று பேசுவதை …. ஆம் … பேசுவதையே, எப்படி இப்படி சுதந்திரமாக பேசுகிறார்கள் … என்று … மிக மிக வியந்து பார்த்த காலங்கள் அவை !





