படமும் கற்றலும் : 016
#படமும்கற்றலும் ; 016
” ஆதி அவள் எனில் மீதத்தில் அவளுக்கு ஏன் பாகுபாடு ! “



இந்த புகைப்படம் பார்த்தவுடன் Browser நின்றது. என்ன காரணம் ? ஆளுமையின் கம்பீரம் ? நேர்கொண்ட கூரிய பார்வை ? கையில் எடுக்கவிருக்கும் வாளில் காத்திருக்கும் செய்தி ? ஆடையின் நேர்த்தி ? நிமிர் நிற்றலின் ராணித் தன்மை ? இல்லை இவை அனைத்தும் ?
ஆண் பெண் இணைதலில் ஆதி முகவரி பெண்ணுக்கே ! முறைப்படி பெயரில் நாம் இணைக்க வேண்டும் எனில் அது அவளின் பெயராகவே இருக்க வேண்டும். அப்பாக்களுக்கு தன்னை மகன் மகள் மறந்து விடுவாளோ என்கிற பயம். அதனால் வேகமாக அப்பாவின் பெயரை இணைக்க வைத்தார்கள். அங்கே ஆரம்பிக்கிறது பாகுபாடு. முதல் Initial ஆக அவளும், இடையில் புள்ளி அற்ற அவனுமாக தானே மனதிற்குள் நுழைந்திருக்க வேண்டும் ? ( அப்படி பார்த்தால் நான் G ஜெயசேகரன் அல்ல. JG.ஜெயசேகரன் ! ) அங்கே ஆரம்பிக்கும் பாகுபாட்டில் அவளை மெதுவாக சமையல் கட்டிலுக்குள் நகர்த்தி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது ஆண் சமூகம் ! ( M. குமரன் S / O மஹாலக்ஷ்மி – படத்தின் பெயரில் இப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு ! )
கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கட்டில் இருந்து வெளியே அவள் வர ஆரம்பிக்கிறாள். வாசல், வீதி, அலுவலகம், ஆலை, அரசியல், பொருளாதாரம், கணினி .. என்று அவளின் வீச்சு நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் இது ஒவ்வொன்றுக்கும் அவள் ” வேலைக்கு போகணுமா ? ” ” சம்பாதித்து தான் ஆக வேண்டுமா ? ” என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நிறைய மாறியாயிற்று என்று முனகும் ஜீவிகளுக்கு … மாற்றம் எல்லாம் மிக குறைந்த % அளவில் தான் ! நீங்கள் வசிக்கும் தெருவில் எத்தனை பேர் வெளியே வந்திருக்கிறார்கள் என்று கவனித்தால் நமக்கு % புரியும் ! இந்தியா இன்னும் கிராமங்களில் வாழ்கிறது என்பது ஞாபகம் இருக்கட்டும்.



பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் – என்று ஒரு செய்தி. உடனே விவாதம். ” அந்த மூன்று நாளில் … ” என்று அறிவுஜீவிகளின் பாகுபாட்டுக் கணைத்தல் ! அவர்களுக்கு சில கேள்விகள்.




ஒவ்வொரு முறையும் தேவையற்ற நம்பிக்கைகளை எதிர்க்க பெரியார் போல் ஒருவர் வந்துகொண்டே இருக்க முடியாது ! வீட்டில் ஒருவர் பெரியாராக மாற வேண்டிய தருணம் இது ! ஞாபகம் இருக்கட்டும். பெரியார் என்பது இங்கே தனி மனிதன் அல்ல. அது ஒரு மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் தத்துவ இயல். ( தனி மனிதனை என்ன வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். தத்துவத்தை நம்மால் விமரிசிக்க முடியாது ! )
விபச்சாரத்திற்கு அவள் வரக்கூடாது என்று போராடாத சமூகத்திற்கு … கருவறைக்குள் அவள் செல்லக்கூடாது என்று சொல்ல எங்கே இருந்து தையிரியம் வருகிறது ? அந்த இருள் பக்கங்களில் அவள் வேண்டும். இந்த கோவில் பக்கங்களில் அவள் வேண்டாம். அவ்வளவு தானே நம் நியாயம் ? முதலில் விபச்சார விடுதியில் இருக்கும் பெண்களை காப்பாற்றி விட்டு இங்கே வாருங்கள். பிறகு உங்களின் குரலை பற்றி யோசிக்கலாம்.
எங்கும் அவள் வருவாள். வர வேண்டும். அதுதான் நியதி. சரி தவறு எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அவள் வரட்டும். யாருக்கு தெரியும் … ? அவள் நம்மை விட சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடும் – கடவுளை !


