படமும் கற்றலும் : 025
#படமும்கற்றலும் ; 025



” சில புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன சிலகண்ணுக்கு முன்னே யதார்த்தமாக கிடைத்து விடுகின்றன. சிலவைகள் மட்டுமே அந்த புகைப்பட ஆர்வலனுக்கும் இயற்கைக்குமான தொடர்பின் கவிதையாக மாறுகின்றன. அவற்றை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொன்று தோன்றும் ! “



வானமும் நிலவும் தான் அதிகம் புகைப்படமாக பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும். எப்போதும் இருக்கும் அவை எப்போதும் மாறுவது தான் அவற்றின் மீதான பிடிப்புக்கு காரணம். ஒரே மாதிரி இருப்பதை நாம் புகைப்படம் எடுக்க விரும்புவது இல்லை. சிறு சிறு மாற்றங்கள் தான் புகைப்படத்தின் அழகு. முற்றிலுமாக வேறு பின் புலத்தில் எடுக்கப்படும் புகைப்படம் இன்னமும் அழகு. ஆனால் இரு வேறு காட்சிகளை இணைத்து எடுப்பது புகைப்பட அழகில் இன்னமும் வித்தியாசமான ஒன்று. கிராமத்து கிழவி ஒன்று cellphone வைத்து பேசுவது, சிறு குழந்தை ஒன்று தாத்தாவை கை பிடித்து அழைத்து செல்வது, பெண்கள் கல்லூரி வளாகத்தில் septic tank ஐ சுத்தம் செய்யும் ஆண் … என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதில் இங்கே இருக்கும் நிலவின் பின் புலத்தில் தெரியும் இந்த சுத்தியல் அரிவாள் படம் …. அனைத்தும் சுகமானவை என்பதை நிலவு சொல்ல .. அப்படி இல்லை வாழ்க்கை என்பதை தான் சுத்தியலும் அரிவாளும் சொல்ல முனைகிறதோ என்னவோ ? பின்னே ? இரு வேறு காட்சிகள் தானே உலகம். !



ஒரு பக்கம் உலகம் குளிர்சாதன வசதியுடன் உள்ள வாழ்வில் இலயிக்கிறது. இன்னொரு பக்கம் சாலையோர புழுதியில் பெரும் வெப்பத்தில் வியர்த்து ஒழுகுகிறது இன்னொரு உலகம். ஒரு பக்கம் பெரும் செலவில் திருமணங்கள், இன்னொரு பக்கம் புதைக்க கூட காசில்லாது .. அனாதையாக மண்ணில் விழும் உடல்கள். இரு பக்கமும் உலகம் இளித்துக்கொண்டு தான் இருக்கிறது.
காலையில் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே சென்று வீடு திரும்பும் வரை இரு உலகமும் கண்ணுக்கு முன்னே தான் இருக்கின்றன. எதை பார்க்கிறோம் பார்க்க விரும்புகிறோம் என்பது இருக்கட்டும். எதை பார்ப்பதை தவிர்க்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்வின் சுத்தியல் அரிவாள் பக்கம்.


