நான் எனப்படும் நான் : 142
” என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் …
உசுரு இருக்கு வேறென்ன வேண்டும்
உல்லாசமா இருப்பேன் … “



சமீபத்தில் வந்த அந்த ரகிட ரகிட … பாடலில் இசை எல்லாம் இருக்கட்டும். ஆனால் வரிகள் ? அங்கே தான் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கிறது.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் நான் சந்தோஷமாகவே இருப்பேன் – என்பது எவ்வளவு பெரும் சிந்தனை ! உயிரை விட வேறென்ன வேண்டும் என்பது எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை வரி !
” எனக்கு ராஜாவா நான் வாழறேன்….
எதுவும் இல்லேன்னாலும் ஆளுறேன் “
என்ன மனநிலை இது ? எனக்கு ராஜாவாக வாழ்வது என்றால் ? – பதில் மிக எளிது. என்னை நான் Beat செய்வது தான் இங்கே முக்கியம். மற்றவர்களை அல்ல. அப்படி எனில் எனக்கு நான் தான் ராஜா. மற்றவர்களுக்கு அல்ல. எதுவும் தேவையே இல்லை ஆள – அப்படி எனில் – எதை ஆள்வது ? ஒன்றே ஒன்று தான் ஆளப்பட வேண்டும். ஆம். நம்மை மட்டுமே நாம் ஆளமுடியும் !



” அவனுக்காக அப்படி வாழ் / இவனுக்காக இப்படி பேசு / அவனுக்காக அப்படி நடந்து / இவனுக்காக இப்படி நடிச்சு …. “
இந்த வரிகளை விட இதற்கு அடுத்து வரும் வரை தான் எனக்கு மிக பிடித்த ஒன்று.
” அந்த நாலு பேரை இதுவரை பார்த்ததில்லை நானும். எனக்கு தேவைப்பட்ட நேரத்தில் அந்த பரதேசியை காணோம் “
ஆம். யாருக்கெல்லாமோ நடித்து நடித்து கடைசியில் நமக்கு தேவை என்று வரும்போது அந்த யாரோ எல்லாம் காணாமல் போவது தான் உலக இயல்பு. அப்படி எனில் நாம் நாமாக இருந்து நம்முடன் வருபவர்கள் தானே யதார்த்தம் ! அப்படி வருபவர்கள் மட்டும் வரட்டுமே ! மற்றவர்கள் … ? உண்மையாக தோன்றுவதை எழுதவா ?
போங்கடா டேய் . … 

.






” ஏதோ ஒண்ணு நடக்கத்தானே
அடுத்த நாளும் வருது ..
நல்லதை நான் எடுத்துகிட்டா
நல்லதை தான் தருது … “
இதற்கு எதுவும் எழுதவே வேண்டியது இல்லை.
நல்ல Headset டில் ஆடிக்கொண்டே கேளுங்கள் இந்த பாடலை. ஆட்ட மகிழ்வு ஒரு பக்கமும், வாழ்க்கை புரிதல் இன்னொரு பக்கமுமாக … நாள் அட்டகாசமாக தொடங்கும் !


