நான் எனப்படும் நான் : 171

” Acceptance of Age is Maturity.
Non Acceptance of Inability is Next Level of Maturity ! “



” ஏம்பா .. இந்த முடியை கொஞ்சம் கருப்பாக்கிட்டு வாயேன் “
இருவரும் சிரித்தோம்.
” எனக்கு இப்படி இருந்தா தாம்மா பிடிக்கும். இதுதான் யதார்த்தம் “
மீண்டும் இருவரும் சிரித்தோம்.
” அதெல்லாம் நீ Training ல வச்சுக்க. இங்கே போய் பேசாம கருப்பாக்கிட்டு வா “
இந்த அம்மாக்களின் உலகில் மகன்களுக்கும் மகள்களுக்கும் வயதாவதே இல்லை. வயது ஆவதை அவர்கள் ஒப்புக்கொள்வதும் இல்லை !



கருப்பு இளமையையும், வெண்மை வயது ஆவதையும் … குறிக்க ஆரம்பித்தது எப்போது என்று தெரியவில்லை. அதே போல முடிவது இளமை, முடியாதது முதுமை என்பதும் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை முடிவதை உடனே செய்வதும், முடியாததை முயற்சிப்பப்பதும், முடியவே முடியாததை ஒப்புக்கொள்வதும் .. வயது எனப்படும் ! முடிவதை தள்ளிப் போடுவதும், முடியாததை காரணம் கண்டுபிடித்து செய்ய முடியாது என்று சொல்வதும், முடியவே முடியாததை ஒப்புக்கொள்ள மறுப்பதும் .. வயதாகிறது எனப்படும் !



தோற்றத்தில் என்ன இருக்கிறது ? தோற்றம் கடந்தவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள். தோற்றம் விரும்புவர்களும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தான். ஆனால் தோற்றம் சரியாக இருக்க வேண்டும் அல்லது இருந்தே ஆக வேண்டும் என்பவர்கள், அதற்காக எதையும் செய்ய தயாராகுபவர்கள் … இன்னமும் முதிர்ச்சி அடையாதவர்கள்.
கொஞ்சம் அழகாக்கி கொண்டால் என்ன ? என்ற கேள்வி மேற்புறத்தில் சரி என்று பட்டாலும், அதன் ஆழம் ” அழகாக இருந்தால் தான் நாம் கவனிக்கப்படுவோம் ” என்று செல்லும் அழுகும் மனநிலை !
அனைத்திற்கும் மேலாக …
Temporary உடலில், தலைமுறை தலைமுறையாக வாழும் நல் எண்ணங்கள் தான் உண்மையான Treasure. மற்றவை ? கடந்து போகும் நீர்க்குமிழிகள் !


