நான் எனப்படும் நான் : 173
” The Best of Us comes .. When We Keep our Resources in Best Format “



கருப்பு சட்டையும் சந்தனமுமாக அந்தப் பார்வை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கக்கூடும். கருப்புக்கு இங்கே ஒரு அர்த்தம் உண்டு. அந்த அர்த்தங்களில் நான் என்னை யோசித்தது இல்லை. ஆனால் .. கடவுள் என்கிற பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இயற்கை மேல் எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. இயற்கை வடிவம் அற்று எங்கும் நிறைந்ததாக இருக்க .. வடிவம் தேவைப்படும் மனிதர்களுக்கு ‘கடவுள்’ வடிவமாக இருக்கிறார். ( மந்திரங்கள், பூஜைகள், பழக்க வழக்கங்கள் …இவை எல்லாம் மனித கண்டுபிடிப்புகள் ! மாறுதலுக்குட்பட்டவை ! ). வடிவ கடவுள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் .. மாறிப்போவதும் இதனால் தான் ! மாறாதது .. இயற்கை மட்டுமே ! அதாவது .. இயற்கை என்கிற ஒன்று மட்டுமே எப்போதும் ஒரு Concept ஆக இருக்கிறது. அதற்கு மந்திரங்கள் தேவை இல்லை. பூஜைகள் தேவை இல்லை. பழக்க வழக்கங்கள் தேவை இல்லை. வேண்டுதல்கள் தேவை இல்லை. கோவில்கள் தேவையே இல்லை. மனிதர்களும் தேவை இல்லை.
ஆம். மனிதர்களுக்கு தான் இயற்கை தேவை !
” Nature Just Lives. Whether we are here or not ! “



” அப்புறம் ஏன் நெற்றியில் சந்தனப்பொட்டு ? “
என்ற கேள்விக்கு ஒரு பதில் உண்டு. மனிதம் மற்றும் அன்புக்கு இணையான ஒரு சக்தி இந்த உலகில் இல்லை. அப்படியான ஒரு மனிதத்தின் மனம் நிறைவாய் வாழ்த்தி கொடுத்த சந்தனம் தான் அந்த நெற்றிப்பொட்டு !
நான் படித்த Danish Mission பள்ளியிலும், Roman Catholic பள்ளியிலும் .. சிறு வயதில் நான் சொன்ன ” பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ” இன்னமும் ஞாபகத்தில் ! Church ன் உயரம் மிக பிடிக்கும். அமைதி மிக மிக பிடிக்கும். ஆனால் இன்று வரை Jesus Christ ஐ கும்பிட வேண்டும் என்று சென்றது இல்லை !
சிறு வயதில் நீண்ட நாட்கள் கேட்டு, அனுமதி பெற்று .. நான் படித்த குர்ரானில் … இருக்கும் வாசகங்களில் … ” அவன் அல்லாது ஒரு இலையும் உதிர்வது இல்லை ” என்னும் வரி இன்னமும் நினைவில். அதே போல .. நான் அப்போது கேட்ட பாடல்களில் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய ” இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை ” இன்னமும் நெஞ்சில். அப்போது பேசிய இஸ்லாம் பெரியவர் ஒருவர் சொன்ன ” நம்மால் எதிர்கொள்ள முடியாததை இறை நமக்கு அளிப்பதில்லை ” என்பதும் இன்னமும் நினைவில். ஆனாலும் இன்னமும் மசூதி /நமாஸ் / தொழுகை என்று யோசித்தது இல்லை.
பகவத் கீதை / இராமாயணம் / மகாபாரதம் .. அனைத்தும் சொல்வதில், இந்தியா முழுக்க பயணித்ததில், கோவில்களை பார்த்ததில் … எந்த கடவுளும் என்னை ஈர்க்கவில்லை. மாறாக … ” அனைத்திற்கும் ஒரு காரணம் காரியம் உண்டு ” என்பதே மீண்டும் மீண்டும் வேறு வேறு வடிவத்தில் !
இந்தியா முழுவதுமாக நிரம்பி இருக்கும் சிவன் ஒரு பயணியாக எனக்கு ஒரு ஆச்சர்யம் தான் ! உலகம் முழுக்க Christ, Muhammad, Shiva என்று ஏதோ ஒரு வடிவம் ……
இவை அனைத்தும் வேறு வேறு மொழிகளில் சொல்லிக்கொண்டே இருப்பது .. இதைத்தான் !
” மனிதம் பழகு.
நல்லது செய்.
இறப்பை வரவேற்று வாழ்.
ஒரு புள்ளியில் அடையாளம் தெரியாது மறைந்து போ “


