படம் சொல்லும் பாடம் – 095
#படம்சொல்லும்பாடம் ; 095
” ஆழமான தத்துவங்கள் அதற்கான தலைவர்களை உருவாக்கும். வெறும் தலைவர்கள் ரசிகர்களைத் தான் உருவாக்குவார்கள் “



விஜய் சேதுபதி மற்றும் நடிகர்கள் அனைவரையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு கதையை கவனிப்போம். கதையிலும் திரைக்கதைக்கே உண்டான – Twist Turns எல்லாம் இன்னொரு பக்கம் வைப்போம். ஆங்காங்கே கூரிய வசனங்களை வரவேற்பு வளையத்தில் வைப்போம். இவை எல்லாம் இந்தப் படம் அல்ல. இவை அனைத்தையும் கடந்து செல்லும், மனதில் கேள்விகளை விதைக்கும், பார்வையாளனுக்குள்ளே மாற்று சிந்தனைகளை வைக்கும் அல்லது பதில்களை நோக்கி யோசிக்க வைக்கும் உரையாடல்கள் தான் இந்தப் படம். அந்த உரையாடல்கள் அனைத்திலும் இருக்கும் நகைச்சுவை விஜய் சேதுபதிக்கானது. இந்த நகைச்சுவை கலந்த உரையாடலை வழங்கும் … விஜய் சேதுபதியை வேறு எந்த நடிகராலும் அசைக்கவே முடியாது.
அம்மணமாக அமரும் போதும் கால் மேல் கால் போட்டு பேசும் தெனாவட்டில் இருப்பது Heroism அல்ல. அடிமையாய் அடைபட்டு கிடந்த மனநிலையின் வெளிப்புற ஆணவ உலா.



” கருத்துக்களால் முன்னேற வேண்டும் ” என்பதில் இருந்து வன்முறையை நோக்கி பயணித்து … ஒரு கட்டத்தில் ” கருத்துக்களால் மட்டுமே பலரை உருவாக்க முடியும் ” என்னும் புள்ளிக்கு வரும்போது நமக்குள் என்னவோ ஒன்று எழும்பி தொண்டைக்குள் அடைத்துக்கொள்கிறது. வன்முறை தீர்வல்ல என்பதை வன்முறை மூலமாகவே சொல்வதும் … அது நமக்குள் ஒரு வலியை ஏற்படுத்துவதும் உண்மை. ஏனோ அந்த கடைசி காட்சிகளில் ஈழத்து பிரபாகரன் நினைவு தவிர்க்க முடியாது போகிறது. குறிப்பாக அந்த இறப்பை மறைக்க மேல்தட்டு மட்டம் போடும் ” வன்ம அறிவு திட்டங்களை ” கேட்கும்போது ! கையை தூக்கி கொண்டு சரணடைய வந்தவரை – Point Blank ல் சுட்டுவிட்டு … அதைப்பற்றி பேசி மகிழும் காட்சியில் … அதை ஓரக்கண்ணால் கவனிக்கும் மனசாட்சி மனிதராக சூரி உள்ளே சிம்மாசனம் போட்டு அமர்கிறார். Character என்றால் இப்படி சிலவற்றை செய்துவிட்டு Retire ஆக வேண்டும். பார்வையாளனின் மனக்குரலை பிரதிபலிக்கும் சூரியின் Character தான் – நெஞ்சுக்கு நெருக்கம். நீதியும்.



செய்திக்கு பல முகம் இருக்கிறது. ஆனால் உண்மை ஒன்று தான். ஒரே செய்தி சொல்லப்படும்போது அது உண்மையாகவே மாறிப்போக வாய்ப்புண்டு. உன் செய்தி இது – சரி – அந்த அடிமைப்பட்டு கிடந்த மனிதனின் செய்தி என்ன ? என்று நாம் கேட்பதே இல்லை. அல்லது பத்திரிக்கைகள் கேட்பது இல்லை. அப்படிக் கேட்டாலும் அது – காலம் கடந்து அந்த உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ள விருப்பமே இல்லாத போது தான் சொல்லப்படுகிறது. செய்திகளை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் அதிகாரம் தான் நினைத்தபடி காய் நகர்த்திவிட்டு தான் நினைக்கும் உண்மையை சொல்ல முடியும்.



காவல் துறைக்கு உள்ளேயே பலிகளை அரங்கேற்றம் செய்யும் அவலம் – அதில் A Grade, B Grade என்னும் நக்கல், காரியம் முடிந்ததும் அடித்தட்டு காவல்காரனை சகட்டுமேனிக்கு திட்டும் வன்மம் … வெற்றி மாறன்கள் இன்னமும் சில காவல் துறை படங்கள் எடுத்தால் அநேகமாக காவல்துறையின் அழுகிய ஈரல்கள் 1. திருந்தும். அல்லது 2. இன்னமும் அழுகும். 3. அல்லது Resign செய்துவிட்டு ஓடிவிடும்.



” உனக்கெலாம் பணக்கார வீட்டு பொண்ணு கேட்குதோ ? “
என்னும் கேள்வியிலேயே இருக்கும் எகத்தாளம் தான் ஆளும் வர்க்கத்தின் ரத்தம் வழியும் நாக்கு.
” ஏன் எனக்கெல்லாம் அப்படி பொண்ணு கேட்கக்கூடாதோ ? “
என்னும் பதில் தான் அடி வாங்கிக்கொண்டு அழியும் அடிமையின் ரத்தம் வழியும் நாக்கு.
” கீழே என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், நாம் சொல்வது தான் உலகத்திற்கு செய்தி ” என்னும் மேல் மனிதர்கள் இருக்கும் வரை காடுகளில் வாத்தியார்களும், நாடுகளில் வெற்றி மாறன்களும் நிச்சயம் இருப்பார்கள். இறப்பார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் யாரோவாக பிறந்து கொண்டே இருப்பார்கள்.



இறுதியாக …
அந்தப் பெரு வனம், அதில் நடக்கும் வேட்டையாடல் … தலை குனிந்து வணக்கம் தெரிவிக்கும் தொனியுடன் Just WoW !
வேறென்ன சொல்ல முடியும் – அதை காட்சிப்படுத்திய உழைப்பிற்கு !
Minimum 10 முறையாவது பார்க்க வேண்டும் – உரையாடலின் உண்மையான ஆழத்தை புரிந்துகொள்ள.