அவனும் அவளும்: 004
” சும்மா ‘தொன தொன‘ன்னு … சும்மா இருக்க முடியாதா உன்னால ” அவனின் இந்த வார்த்தைகள் அவளுக்கு புரிவதில்லை. அவன் பார்வையில் வெளியுலகம் தெரியாதவள் தானே அவள் !
அதென்ன ‘தொன தொன ‘ ? …. எப்போதும் அவனுக்கு தொழில் தான் முக்கியம். தொழிலின் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம், வரவு, செலவு .. அவன் மன நிறைவுக்கு போதும். அவன் உலகம் அதில் இயங்கும். வயிருக்கும், உடலுக்கும் இருக்கவே இருக்கிறாள் அவள். அதே சமயம் தொழிலின் கடினமான பக்கங்களை யாரிடமும் பகிர அவன் விரும்ப மாட்டான். ஆண் அகங்காரம், கர்வம், தனக்கு தெரியும் என்ற செருக்கு, தன்னை யாரும் இழிவாக நினைத்து விடக்கூடாது என்கிற பதட்டம் .. அவனை அவனின் கடினங்களை சொல்ல விடாது. ஆதலால் ஏதோ மிகப்பெரிய கஷ்டத்தை தாங்கி கொண்டிருப்பதுபோல உணர்வான். அத்தனையும் illusion என்று அவனுக்கும் தெரியும். இந்த கடினங்களை பகிர்ந்து கொள்ளவே அவள் என்பதை அவனை வளர்த்த சமூகம் ஒத்துக்கொள்ள வைக்காது. அவன் வாழ்வின் இலாப நஷ்டம் யாருக்கும் தெரியா கள்ள உறவு. இலாபம் வந்த அன்று சிரிப்பான். நஷ்டம் வந்த அன்று உம் மென்று அமர்ந்து இருப்பான். அதற்கு தகுந்தால்போல் அவள் இருந்தால் அவளை கண்டுகொள்ள மாட்டான். அதுவே அவள் தகுந்தாற்போல் இல்லை எனில் ‘தொன தொன ‘ என்று define செய்வான். ‘உனக்கு உலகம் தெரியாது‘ என்று போதிப்பான். ‘கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா ‘ என்று முகம் காட்டுவான். அவள் அவனிடம் இருந்து திட்டு வாங்கி வந்த வேகத்தில் கிடைத்த அறைக்குள் நுழைந்து வெளி சொல்ல முடியாமல் அழுவாள்.
அவளின் ‘தொன தொன‘ தான் என்ன ?. அவனுக்கு ஒரு இலட்சம் கிடைத்தால் சிரிப்பான். அவள் தான் நட்டு வைத்த செடியில் பூ பூத்தால் சிரிப்பாள். அவன் ஒரு business deal முடித்துவிட்டு இருமாப்பாய் நிற்பான். அவள் எதிர்பார்த்த taste சமையலில் வந்ததும் குதிப்பாள். அவனுக்கு ஒரு இலக்கை அடைத்துவிட்டு வெளியே சாப்பிடப் போகலாம் என்பான். அவள் ‘ஒரு மாதிரி‘ இருக்கு வெளியே போகலாம் என்பாள். ஆனால் அவனுக்கு அவள் ‘ தொன தொன ‘. ஏன் ? … அவனின் முட்டாள்தனம்தான் காரணம். அவன் தான் அவளை வெளியே அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தவன். அவளுக்கு வெளி உலகம் தெரியக்கூடாது என்று திட்டமிட்டவன். அவனை பொறுத்தவரை அவள் எல்லை குழந்தையின் பள்ளி வரை இருக்கலாம். பின் அவன் … அனுமதி இல்லாமல் எங்கும் செல்ல கூடாது. கேட்டுவிட்டு செல் என்பான். கேட்டால் செல்லமுடியாத, செல்லக்கூடாத காரணங்களை சொல்வான். அவன் ஆசைப்படி அவள் வாழும் வட்டத்தில் அவளுக்கு எது மிகப் பெரியதோ… அதைத்தானே அவள் சந்தோஷமாய் பகிர்வாள் ? ஆனால் அந்த அவனின் dash க்கு அது புரியாது. அவள் குழந்தை பேசிய முதல் வார்த்தையை சொல்வாள். அவன் முறைப்பான். அங்கே ஒரு gate போடவேண்டும் அவனுக்கு. ‘சரி .. அப்புறம் பேசறேன் ‘ என்பான். அவள் பக்கத்து வீட்டிற்கு வந்த புது மனிதர்களை பற்றி பேசுவாள். அவன் ‘ மற்றவர்களை பற்றி பேசவேண்டாம்‘ என்று ஒரு இன்னொரு gate போடுவான். அவள் fridge repair என்பாள். சொல்வதற்கு முன் gate போட்டுவிடுவான். அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது. அவனுக்கு அதில் ஒரு குரூர சந்தோஷம். அவள் அமைதியானது அவனின் உலகில் வெற்றியாக கருதப்படும்.
அவனுக்கு சில விஷயங்கள் புரியாது. அவன் தான் எல்லை வகுக்கிறான். அப்படி எனில் அந்த எல்லைக்குள் உள்ளதை பற்றித்தான் அவள் பேசமுடியும் என்பது அந்த genius dash க்கு தெரியாது. திரை கடலோடும் அவன் திரவியத்தை எங்கோ தேடிக்கொண்டிருப்பான். அவள் சொல்வதை சிறு குழத்தையின் ஆர்வத்தில் கேட்பதே திரவியம் என்பது அவனுக்கு புரியாது. ஆனால் .. உலக இலக்கியம் பேசுவான். Business trends latest பேசுவான். பார்க்காத வியாபார நண்பருக்கு உதவ நினைப்பான். அதென்னவோ, ( to be precise என்ன இழவோ .. ) .. இன்னொருவனின் மனைவி அல்லது திருமணம் ஆகா பெண் … அதே curiosityயில் சொன்னால், பேசினால் கேட்டுக்கொள்வான். அவனின் design அப்படி.
அவளுக்கு அவன் பேச மறுக்கும்போது ஒன்றும் புரியாது. அவள் tv கொஞ்ச நேரம் பார்ப்பாள். மனசு ஒட்டாது. முகநூல் பக்கம் வருவாள். அங்கும் போலிகள் நடமாட்டம் கண்டு வராமல் நகர்வாள். ஓவியம் வரைவாள். அவளின் மூன்று வயது பெண்ணிடம் நல்லா இருக்கா என்று கேட்பாள். மூன்று வயது அதை கிழித்து போடும். அவன் பிள்ளை தானே என்று திட்டுவாள். அவள் சொல்வதை பொறுமையாக கேட்கும் யாரோ அவளுக்கு நேர்மையாக பிடிக்கும். அந்த யாரோவிடம் ‘ரொம்ப கஷ்டப்படுத்தறேனா ‘ என்று கேட்பாள். ( அவளின் உலகில் அவள் ‘ சொல்வதற்கு‘ அவன் இட்ட பெயர் ‘கஷ்டம்‘ – ஆகையால் தான் அவ்வாறு கேட்கிறாள் ). அருகில் நடக்கும் ஏதோ ஒரு போட்டியில் கலந்து கொள்வாள். அங்கே வெற்றி பெறுவாள். அங்கே கிடைக்கும் பாராட்டில் மனம் நிறைவாள். நாம் சரியாகவே இருக்கிறோம் என்று திருப்தி கொள்வாள். அவனுடன் மீண்டும் பேசுவாள். ‘நான் ஒரு வேலைக்கு போகட்டுமா ?’ என்று கேட்பாள். இதற்குள் இரண்டு மூன்று குழந்தைகளை பெற்று இருப்பாள். அவன் குழந்தைகளை காரணம் காட்டுவான். அந்த குழந்தைகளும் அவளின் இருப்பை விரும்பும். ( வீட்டில் இருப்பது அவள் மட்டும் தானே ! ). சுத்தி சுத்தி சுத்தி … கடைசியில் குழந்தைகளே உலகம் என்று settle ஆவாள். அவன் முகத்தில் வெற்றி பெற்ற திருப்தி இருக்கும். இனி அவள் எங்கும் நகரமுடியாது என்பது அவன் ஆழ்மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்.
அவளின் ‘ தொன தொன‘ இப்போது குழந்தைகள் பக்கம் திரும்பும். ஆரம்பித்தில் விரும்பும் குழந்தைகள் பின் அவளை ஒதுக்கும். அம்மா strict – என்று அவளிடமே பேசும். அவள் நொறுங்கி போவாள். அவன் இரண்டு வீடுகள் கட்டி, ஒன்றை வாடகைக்கு, இன்னொன்றில் குடி இருப்பான். கார் மூன்று வாங்கி இருப்பான். அவள் குழந்தைகளின் வேலைக்காரியாக மாறுவாள். அவளின் கல்லூரி நண்பி வருடங்கள் கழித்து அவளை பார்த்து விட்டு … ” என்ன ஆச்சு உனக்கு .. எப்படி இருந்த பெண் நீ ” என்பாள். விரக்தியாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நகர்வாள். வீட்டில் அவன் அவளை பார்த்து சொல்வான் … ‘ உனக்கு மட்டும் எதுவும் புரியாது ‘ என்பான். அவள் அதற்கும் சிரிப்பாள். கிட்டத்தட்ட யோகியின் மனநிலை. அப்படியே வாழ்க்கை முடிவுக்கு வரும். அவன் மேடைகளில் வெற்றி பெற்ற மனிதனாக மரியாதைகள் பெறுவான். அவள் ‘எதுவும் புரியாத பெண்ணாக‘ சிரித்து கொண்டு கீழே அமர்ந்து இருப்பாள். அவன் இறங்கிய பின், அவனுக்கு விழுந்த மாலைகளை, பரிசுகளை அவளிடம் கொடுத்து விட்டு யாரிடமோ பேசிக்கொண்டிருப்பான். அவள் நின்று கொண்டிருப்பாள். தன்னை ‘தொன தொன‘வென்று பேசுபவனா இவன் என்று ஆச்சரியப்படுவாள். இன்றும் அவன் பொது இடங்களில் பேசும்போது, அவள் ஓரமாய், அவனுக்காக, யாருமற்று நின்று கொண்டிருப்பதை…. காண முடியும். அப்போது அவள் யாரிடமும் ‘ தொன தொன‘ வென்று பேசா மனநிலையை கற்றுக்கொண்டிருப்பாள். ஒரு ‘தொன தொன‘ வை வெற்றிகரமாக பேசா மனநிலை நோக்கி நகர்த்த அவனுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது. உலகம் அவனுக்கு கை தட்டிக்கொண்டே இருக்கிறது. மாலைகளும் பரிசுகளும்… விழ விழ .. அவள் கீழே நின்று வாங்கி கொண்டே இருக்கிறாள். உலகம் அவளை ஒரு மரியாதை பார்வை பார்த்துவிட்டு ‘ இன்னாரின் மனைவியா ‘ என்று நகர்கிறது. அவள் அதற்கும் பேசா நிலையில் சிரிக்கிறாள். ஒருவித ஜென் நிலை நோக்கிய பயணம் அது. அதில் துணை என்று யாரும் வரப்போவதில்லை என்று அவளுக்கும் தெரியும். துணையற்ற பாதையில், தனக்கு தானே பேசி, மற்றவர் முன் பேசா மனநிலையில் அவள் வாழ்வதை … என் மனைவி ஒரு பொக்கிஷம் என்று அவன் பொது இடங்களில் ‘தொன தொன‘ வென்று புகழ்வான். கூட்டம் அவளை கவனிக்கும். இல்லை என்பதை ஆம் என்று தலை ஆட்டி சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்புவாள் அவள். அந்த வேறு பக்கத்திற்கு மட்டும் அவள் கண்களின் ஒரு சொட்டு கண்ணீர் தெரியும். ஆனால் இன்னொரு பக்கம் அவளை பாராட்டி கொண்டே இருக்கும். வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது என்று எவனோ எவளோ எங்கோ எழுதியதை அவள் சிரித்துக் கடப்பாள். அந்த சிரிப்பும் அவனுக்கு கேட்டு விடக் கூடாது என்பதால் மௌன சிரிப்பாகவே இருக்கும்.