அவனும் அவளும்: 005
” அம்மா வீட்டுக்கு போகணும் ” அவளின் பேச்சு அவன் காதில் விழாது. அல்லது விழுந்தும் விழாதது போல் நடிப்பான். ‘என்ன கேட்கலையா ?’ என்ற அவளின் கோப கேள்விக்கு முறைப்பை பதிலாக்குவான். ‘எத்தனை நாள்‘என்ற கேள்வியை அவளை பார்க்காமல் எழுப்புவான். அவளும் போயாக வேண்டுமே என்ற எண்ணத்தில் ‘ நான்கு நாள் ‘ என்று கோபத்தை மறைத்து சொல்வாள். ‘குழந்தையை யார் பார்ப்பது ‘ என்று அவன் ஆரம்பிப்பான். ஏதோ அவனுக்கும் குழந்தைக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி. யாரோ ஒருவனின் குழந்தைபோல். அவளுக்கு இப்போது தெரியும் – அவன் அவளை அனுப்ப போவதில்லை. முடிவு செய்து விட்டு பேசுகிறான். பேசி ஒரு dash ம் ஆகப்போவதில்லை.
அது ஏன் ‘அம்மா வீட்டுக்கு‘ மனைவி போவதென்றால் அவனுக்கு கசக்கிறது ? காரணம் தெரிந்தால் ஆச்சர்யம் வரலாம். அவன் ஒரு dependent. காலையில் எழுவதில் இருந்து, சுடு தண்ணீர் தயார் செய்வது, துண்டு எடுத்து கொடுப்பது, அன்றைய dress எடுத்து வைப்பது, water bottle, கார் சாவி …. எல்லாம் எடுத்து காரில் உட்கார்ந்து கிளம்பும்போது இளித்து கொண்டே சொல்வான் …’ஒரு blue file மறந்துட்டேன், எடுத்துட்டு வர்றீயா ‘. வீடு திரும்பும்போது அவனுக்கு சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். சத்தம் இருக்க கூடாது – ஏன் எனில் அவன் நாட்டு நடப்பு tv யில் பார்த்தாக வேண்டும். உலகம் சரியாக இருக்கிறது என்று verify செய்துவிட்டு ஒரு வித்தியாசமான சிரிப்புடன் படுக்கை அறைக்கு செல்வான். அங்கும் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் அவனுக்கு – அவள் உட்பட. தாமதம் அவனுக்கு பிடிக்காது. Such a dependent dash – அவன் ! ( வேறு எந்த கண்ராவி expressionsம் இல்லாததால், ஆச்சர்ய குறி அதுவாக வருகிறது இங்கு. இல்லை எனில் …… )
தன்னால் தனியாக நிற்க முடியாது என்பதை ‘clever ஆக சம்பாதிக்கும் ஆண்‘ போர்வை போட்டு மறைத்துக்கொண்டவன் அவன். அவளின்றி அவனின் அணுக்கள் அசையாது என்று அவனுக்கு தெரியும். ஆரம்ப காலங்களில் அவன் அம்மாவின் dependent. இப்போது அவளின். இந்த dependent வாழ்க்கையில் அவன் போடும் ஆட்டம் எழுத முடிந்த ஒன்றே. நாகரிகம் கருதி அடுத்த வரி நோக்கி எழுத்து தானாக நகர்கிறது. இவ்வளவு dependent ஆன அவன், அவளை அவள் வீட்டுக்கு அனுப்ப யோசிக்கத்தானே செய்வான் ?. அவனுக்கு ‘நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்ய முடியாது ‘ என்று சொல்ல முடியாது. Hided சுயம், duplicate கவுரவம், ஆண் justifications .. அவனை சொல்ல விடாது. அதற்கு பதில் .. ஏதோ அவன் முடிவெடுப்பதை போல் கேட்டுக்கொண்டு இருப்பான். பின் நடு முதுகில் கத்தி சொருகிகொண்டு, முன் மார்பில் வீரத்தை காட்ட வேண்டிய வேடம் அவனுக்கு. நன்றாக செய்வதாக அவனே நினைத்து கொள்வான் – அவளுக்கும் அவனால் தனியாக இருக்க முடியாது என்று தெரிந்த போதும் ! கிட்டத்தட்ட ஒரு comedian status அவனுக்கு – அந்த வேடத்தை வீரமாக செய்யும் ஒருவன் அவன் மட்டுமே.
இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு அம்மாவிற்கு phone செய்வாள் அவள். ‘ அவருக்கு உடம்பு சரியில்லை ‘ என்பாள். இதை கேட்டுக்கொண்டே, அவன் பேப்பர் படித்துக்கொண்டு busy யாக எதையோ தேடுவான். அவளின் அம்மாவிற்கு புரியும். ‘ விடமாட்டேன்னுட்டாரா ? ‘ என்று கேட்பாள். (அம்மாவுக்கு தெரியாதா ? அப்பாவிடம் தன் வீடு செல்ல நின்றவள் தானே அவள்.). ‘இல்லை அவருக்கு நிஜமா … ‘ என்று ஆரம்பிக்கும்போது அம்மா phone cut செய்து விடுவாள். அம்மாவிற்கு தலைமுறை தலைமுறையாக இது போராட்டம். மகளுக்கு இப்போது ஆரம்பித்திருப்பதில் .. அம்மாவிற்கு மனம் கனக்கும்.
இவ்வளவுக்கும் பின் அவளுக்கு உள்ளிருக்கும் கோபத்தை என்ன செய்வது என்று தெரியாமல் நிற்பாள். அப்போது வரும் சிறு மகன் செய்யாத ஏதோ ஒரு தவறுக்கு அடி வாங்குவான். அங்கே இருக்கும் ஒரு பாத்திரத்தை வேகமாக கீழே வைப்பாள். சத்தம் கேட்டு அவன் வருவான் .. ‘ என்ன பண்ணினாலும் வீட்டுக்கு போக முடியாது ‘ என்று வீம்பு காட்டிவிட்டு ‘பசிக்குது .. சாப்பிடலாம் ‘ என்பான். இந்த உலகத்தின் மொத்த அவமானத்தையும் அவளின் மேல் just like that எறிந்து விட்டு செல்லும் action அது. அதில் அவன் master !
அம்மா வீடு ஒரு வரம். பெரும்பாலான அவள்கள் அம்மா வீட்டுக்கு செல்வது அம்மாவை காணப்போவதற்காக அல்ல. ( பாவம் அந்த அம்மாக்கள் அப்படி நினைத்து கொள்கிறார்கள் ). அவள்கள் அம்மா வீட்டிற்கு போவது, தொலைந்து போன அவள்களை மீட்டு எடுத்து வர. அந்த வீட்டிற்கு சென்றதும், பழைய வீடாகினும், ஏதோ ஒரு காற்று வந்து ஆசீர்வதிக்கும். எங்கோ பறக்கும் பறவை ‘ எப்போ வந்தே‘ என்று கேட்கும். பக்கத்து வீட்டு பாட்டி வந்து ‘ நல்லா இருக்கியா தாயீ ‘ என்பாள். போன முறை மறந்து வைத்துவிட்டு போன soap குளியலறையில் அவள் உலடெங்கும் வலம் வந்து .. ‘ ஏன் dull ஆ இருக்க ?’ என்று கேட்கும். அம்மா துண்டை கொடுப்பாள். (அம்மா துண்டை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். ஆனால் அவள் குளிக்க செல்லும்போது வீட்டில் யாரும் இருப்பதில்லை என்பதால் அவள் துண்டை அவளே எடுத்துக்கொள்ள வேண்டும். மறந்தாலும்.). அவளின் சிறு வயது மெத்தை அவளுக்கு என காத்திருக்கும். அதில் விழும்போது, திருமணம், தாலி, இரவுகள், குழந்தை, பள்ளிக்கூடம் எதுவும் அவளுக்கு ஞாபகம் வராது. அவள் அவளாக இருப்பாள். இதற்குத்தான் அவள் வர நினைக்கிறாள். அவள் அவளாக அவ்வப்போது மாறுவதே அவளின் உளப்பிரச்னைகளுக்கு சரியான மருந்து. இது தெரியாது அவன் phone செய்வான். ‘ போயாச்சா ‘ என்பான். ஆம் என்ற அவளின் பதிலுக்கு ‘ அங்கே போனா எதுவும் ஞாபகம் இருக்காது உனக்கு ‘ என்று சொல்லிவிட்டு ‘ சரி .. இந்த பனியன் எங்கே இருக்கு ‘என்று கேட்பான். அதான் முதலிலேயே பார்த்தோமே .. such a dependent dash avan !
அவளுக்கு அம்மா வீடு ஒரு போதி மரம். அங்கே யாருமில்லை எனினும் சில புரிதல்கள் அழகாக நடக்கும். அம்மாவின் ‘ அப்படித்தான் இருக்கும் ‘ என்ற ஒற்றை வரி அவளுக்காக எழுதப்பட்ட counselling வரி. அதை கேட்டதும் அவள் இலகுவாவாள். ‘எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை ‘ என்ற தரையை பார்த்து சொல்லும் அம்மாவின் வார்த்தை அவளை அறையும். இப்படித்தான் அம்மாவிற்கும் ஒரு காலத்தில் அறை விழுந்திருக்கும் என்று அவள் நினைத்துக்கொள்வாள். வீட்டைவிட்டு கிளம்பும் நேரம் வரும்போது… சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்க்ரீமை திடீரென பிடுங்கப்பட்ட குழந்தையாய், அவள் அதிர்வாள். ஒரு இனம்புரியா அழுகை உள்ளே இருக்கும். அம்மாவை கட்டிப்பிடித்து விட்டு வெளியேறுவாள். தூரத்தில் தெரியும் அம்மா வீடு அக்கரை அவளுக்கு. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை சுத்தப் பொய். அவளுக்கு எக்காலமும் அக்கரையே பச்சை. இக்கரையில் அமர்ந்து அவள் அக்கரையை பார்ப்பதில்லை. அக்கரையில் அமர்ந்துதான் இக்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள்.