அவனும் அவளும்: 008
“இரண்டாவது வேண்டும் ” – அவள் வேண்டாம் என்று சொல்லும்போதும் அவனின் அடம் வித்தியாசமானது. அவளுக்கு உடல் பயம். முதல் குழந்தை சந்தோஷம் எனினும், உடல் படுத்திய பாடு இன்னும் நினைவை விட்டு அகல்வதற்குள் அவனுக்கு அவசரம். அவளுக்கு உடல் பழைய நிதானத்திற்கு வேண்டும். அவனுக்கு இன்னொரு குழந்தை வேண்டும். முதிர்ந்த என்று சொல்லிக்கொள்ளும் அவனின் முதிராத வன் கோரிக்கை இது. கோரிக்கை நிறைவேறும் வரை, அவன் கொடுக்கும் அழுத்தங்கள் வன்முறைக்கு சமமான ஒன்று.
ஆம் என்று doctor சொன்ன நாளில் இருந்து அவள் சுதந்திரம் பறிபோகும். ( அம்மா என்ற அடையாளம் ஒன்றும் சும்மா வரவில்லை. அதற்கு அவள் இழக்கும் சுதந்திரம் அதிகம். அவனுக்கு அப்படி அல்ல !). எது சாப்பிட வேண்டும், எது சாப்பிட கூடாது, எப்படி நடக்க, படுக்க, தூங்க, எழுந்திருக்க …. என்று அவள் அவளாக சுற்றி திரிந்த ஒவ்வொன்றுக்கும் redesigns. அவனுக்கு ஒரே ஒரு extra நிலை மட்டுமே ‘ doctor சொல்வதை கேள் ‘ என்பதை தவிர எதுவும் செய்ய முடியா, விரும்பா, தப்பிக்கும் அதிர்ஷ்டசாலி அவன். அவள் சாப்பிட்டது உள்ளே தங்காது. வாந்தி எடுப்பாள். சில அவள்களுக்கு இது நிற்கும். சிலருக்கு நிற்காது. புது வரவுக்கு உடல் தன்னை மாற்றிக்கொள்ளும் தருணம் அது. வயிறு வெளியே தள்ள ஆரம்பிக்கும். ஒரு பக்கமாய் படுப்பது வசதி எனினும், படுத்தால் என்ன ஆகுமோ என்ற பயம் பின்னும். உடல் இன்ச் இஞ்ச்சாக அகலும். வயிற்றை கட்டு, வாயை கட்டு பழமொழிகள் காதில் அறையும். பிறக்கப்போகும் சுகம் இருக்கட்டும். பிறக்கும் வரை யார் பார்ப்பது ? அழுதழுது பெற்றாலும் அவள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்…என்ற பழமொழிகள் வேறு – தானாக parking க்கு செல்லும் காரை வழி சொல்லி park செய்ய சொல்லும் watchman போல – வந்து விழுந்துகொண்டே இருக்கும். கொடுமையே அதை வீட்டின் watchman watch woman பேசுவதுதான் !
சீமந்தம் என்ற பெயரில் ஒரு உறவு ego clash நடக்கும். உன் அண்ணன் என்ன செய்தான் போன்ற அபத்த வியாபாரங்கள் பேசப்படும். அதே சீமந்தத்திற்கு ஆகும் செலவின் போது அவனின் original முகம் தெரிய வரும். கடைசி மாத நகர்தல், தூக்கம், முழிப்பு, வலி …. இவை அனைத்தையும் தாண்டி இயற்கையாய் நடக்க வேண்டியதை அல்லது நடக்க முடியாததை சில வியாபார யுக்திகள் கலந்து … செயற்கை பிரசவம் நடக்கும். வலி மறைக்க ஏதோ கொடுத்து, பிரசவம் நடந்து விடும். பிரசவ குழந்தையை எல்லோரும் கொஞ்சுவார்கள். அவளை பிடிக்காது என்று சொன்ன வீட்டு அதிகாரங்கள் குழந்தையை பார்த்து சிரிக்கும். அவன் குழந்தையாம் ! இது அத்தனையையும் பார்த்துக்கொண்டு, சிரிக்க முடியாமல், அழவும் முடியாமல், திரும்பிக்கொண்டிருக்கும் வலியில்… அவனை பார்த்து கேட்பாள் … ‘ குழந்தை நல்லா இருக்கா ? ‘. அது ஒன்று மட்டுமே அவளின் ஆறுதல். அப்போது சில அவன்கள் அவள்களின் கன்னத்தில் முத்தமிடுவார்கள் – கண்ணீருடன். ( அப்படி செய்தவன் தான் வலி மறையும் முன் இரண்டாவது என்று பறக்கிறான் ). ஆனால் பல அவன்கள் குழந்தையை முத்தமிடும் அளவுக்கு அவளை கவனிப்பதில்லை. அவனை பொறுத்தவரை குழந்தை result, அவள் ஒரு process. அதனால் தான் அவளின் வலி புரியாமல் அந்த dash இன்னொன்று வேண்டும் என்கிறான். ( இதை படிக்கும்போது மனதில் குத்தல் இல்லாமல் இருக்கும் அவன்களுக்கு இந்த எழுத்து பொருந்தாது. குத்தல் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சிக்கும் அவன்களுக்கு இது நூறு சதவிகிதம் பொருந்தும் )
குழந்தை வந்ததும் எல்லோரும் குழந்தையை கொஞ்ச ஆரம்பிப்பார்கள். தாய்மை வலியை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும். ‘ அது சரியாகிவிடும்‘ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு நடையை கட்டும் எதுவும் சமையல் அறையில் உதவிக்கு வராது. ( சமையலுக்கு, வீட்டு வேலைக்கு, உதவியாக எனக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லும் அவள்களுக்கு … அந்த பெண்ணும் ஒரு குழந்தை பெற்று சில வாரங்களில் வேலைக்கு வந்திருப்பாள் அல்லது மாதமாக இருந்து கொண்டே வேலைக்கு வந்திருப்பாள்). குழந்தை வந்ததும் சில அவன்கள் குழந்தையை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார்கள். அவளும் மகிழ்வாள். குழந்தைக்கு என்றால் செலவு செய்வான். அவளுக்கு என்றால் பழைய முகம் காட்டுவான். அப்போதுதான் அவளுக்கு புரியும். அவன் ‘அவனின் ‘ குழந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளின்/அவர்களின் குழந்தையை அல்ல. ஒரு process முடிந்து விட்டால் அது எப்படி result ல் பங்கு கேட்க முடியும் ? Result எப்போதுமே தனி. அதன் மரியாதையே வேறு. மீண்டும் result வேண்டும் போது மட்டுமே .. process ஞாபகத்திற்கு வரும். Just like a thankless business world.
அவள் இப்போதும் இரண்டாவதிற்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. பொறுக்க சொல்கிறாள். உடல் நிதானத்திற்கு வரட்டும் என்கிறாள். கசப்பான உடல் வலி அனுபவங்கள் கொஞ்சம் நினைவில் இருந்து மறையட்டும் என்கிறாள். எல்லாவற்றிற்க்கும் மேல், தனக்கும் அப்படி தோன்ற வேண்டும் என்று நினைப்பாள். முதல் குழந்தை நிலை வேறு. அது என்னவென்றே தெரியா நிலை. இது அது எது என்று புரிவதற்குள் பிறந்த அனுபவம் முதல் குழந்தை. ஆனால் இரண்டாம் குழந்தை அப்படி அல்ல. என்னவென்று தெரிந்து, எதற்கு என்று புரிந்து, அதற்க்காக அது என்ற பொறுமையுடன் இரண்டாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பாள் அவள். பொருளாதார கணக்குகளையும் யோசிப்பாள். அவனுக்கு இந்த நிதானம்லாம் புரியாது. பொதுவாகவே அவனுக்கு அவசரமே மூன்று வேளை சாப்பாடு. எல்லாவற்றிலும் அவசரம் அவனுக்கு. ஆம். எல்லாவற்றிலும்.
என் அவன் இப்படி எல்லாம் இல்லை, என்னை தாங்கு தாங்கு என்று தாங்கினான் என்று சொல்லும் அவள்களிடம் ஒரே ஒரு கேள்வி .. ‘அவன் மீண்டும் அவளிடம் சேர வந்த போது, அவளின் வலியை கேட்டு தெரிந்து கொண்ட பின், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பின் … ‘ அவள்கள் தாங்குவதில் அர்த்தம் உண்டு. அதெல்லாம் இல்லை என்று ஆன பின்பு, தாலி, குழந்தை sentimentலாம் பேசிக்கொண்டிருந்தால் …. Process ஆகவே அவளின் வாழ்க்கை முடியும் என்பதை அவள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் விரைவில் வரும் !