அவனும் அவளும்: 012
கொஞ்சம் யோசிப்போம்.
தெரியாத மாதிரி நடிக்கும் ஆண்கள், இதை படிப்பதில் இருந்தே விலகி விடலாம். படித்த பின் மனதிற்குள் ” என்னை மன்னிக்கவும் “என்று சொன்னால் .. #metoo கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கும்.
1. ” பெண் என்பவள் ஒரு போகப்பொருள் ” என்று அவளை பார்ப்பதில் இருந்தே .. பெண்களின் #metoo வலி ஆரம்பமாகிறது. அங்குலம் அங்குலமாக அவளின் உடலை பார்த்துவிட்டு, அவளையே தவறு என்று சொல்லும் ஆண்களின் நாக்குத் தராசை அவர்களே வெட்டிக்கொள்வது நன்று. இல்லை என்றால் ‘ வெட்ட ‘ வேண்டி வரும்.
2.கற்பு – என்ற ஒன்றை பெண்ணுக்கு மட்டும் போர்வையாய் போர்த்திவிட்டு, அவளை அடக்க முயற்சிக்கும்போதே .. பெண்களின் #metoo கதறல் ஆரம்பம். எனக்கு தெரிந்து எந்த ஆணும் தன் கற்பை இழந்து விட்டதாக அழுவதை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆணும் பெண்ணும் இணையாமல் கற்பு அழியப்போவதில்லை. ( முதலில் கற்பு என்று ஒன்று உண்டா ? அப்படியே இருந்தாலும் அது ஏன் பெண் சார்ந்து இயங்குகிறது ? கற்பு என்பது என்னை பொறுத்தவரை உடல் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. )
3.உடல் தெரிந்தால் அந்த பெண் வாழ்க்கையே போய்விட்டது என்ற பார்வை சட்டத்தை போட்டு அவளை அடக்கும்போதே .. பெண்களின் #metoo வலிக்கு விதை போடப்படுகிறது. எனக்கு தெரிந்து பல வருடங்களாக ஒரு ஆண் பொது வெளியில் ஒரு சிறு துணி அணிந்து குளிக்கிறார். அவர் தன் உடல் தெரிந்ததால் இறந்துபோனதாக நான் இன்னும் படிக்கவில்லை. கைலியை தொடைக்கு மேல் கட்டிக்கொண்டு திரியும் ஆண்கள் எங்கும் தன் கற்பு போய்விட்டதாக அழவில்லை. நாகரிகம் சார்ந்த ஒன்றை எப்போது பெண்ணின் மேல் தனக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று … ஆண் சுமத்தினானோ அன்று முதல் இந்த #metoo ஆரம்பம்.
4.கொஞ்சம் out of syllabus இல் ஒரு கேள்வி வைத்தால் ஆணின் வில்லங்கம் புரியும். இவனுக்கு stress வந்தால் alcohol சாப்பிடுவான். SMoking ஐ கையில் எடுப்பான். ஆனால் இன்று வரை ஒரு மனைவியும் smoking மற்றும் alcohol ஐ stress என்ற காரணத்தால் கையில் எடுப்பதை அவன் அனுமதிப்பதில்லை. ” அவன் ஆம்பளை ” என்கிற வாசகங்களுடன் அப்போதும் அவள் அடக்கப்படுவாள். இந்த இலட்சணத்தில் புகைத்த, குடித்த, அவன்… இரவு அவள் மேல் விழுவான். அவள் அதையும் சகிக்க வேண்டும். இது ஒரு offcial #metoo !! அங்கீகரிக்கப்பட்ட கொடுமை.
5.பெண்கள் நல்லவர்களா ? என்று ஒரு கேள்வியுடன் அவர்களை அடக்க முயற்சிக்கும் அடுத்த முயற்சி இன்னொரு #metoo வலி. உங்களில் யார் யோக்கியமானவரோ அவர்… அவள் மேல் கல் எறியலாம் என்று சொல்ல ஒரு கடவுள் தேவைப்படுகிறது இந்த ஆண்களுக்கு. ஆண் முதலில் தன்னை திருத்திக்கொள்ளட்டும். பெண்களுக்கு அவர்களை சரி செய்துகொள்ள நன்றாகவே தெரியும். யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
6.ஒரு பெண் – பார்த்தால் தவறு, பேசினால் தவறு, பயணித்தால் தவறு, நேரம் கடந்து தாமதமாக வந்தால் தவறு, பொது விஷயங்களை கையில் எடுத்தால் தவறு, fb, whatsapp என்று நேரம் செலவழித்தால் தவறு… இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது தவறு சரி என்பதல்ல நான் பேசுவது. நான் பேசுவது … இது பெண்களுக்கு மட்டும் ஏன் என்பதே !!? குடும்பம் என்ற அமைப்பில் பெண் மட்டும் தான் அங்கத்தினரா ? மொத்தமாய் அவளை யோசிப்பதிலேயே … அடக்கி வைக்க நினைக்கும் ஒவ்வொரு ஆணின் செய்கையும் #metoo குற்றமே.
7.ஒரு பெண்ணிடம் இருக்கும் திறமையை ” சரி .. வெளியே கொண்டு வா ” என்று சொல்ல வேண்டாம். ( நீ யார் அதையும் சொல்ல ? உனக்கு எங்கிருந்து அனுமதிக்கும் அதிகாரம் வருகிறது ? ) ஆனால் … அவளை அடக்கி வைக்கும் ஆண்கள் இருப்பதால், அடங்கும் அவளுக்கு, வெளி உலக தகவல் தொடர்புகளை முடிந்த வரை cut செய்துவிட்டு .. தான் நினைப்பதை அவளை செய்யவைக்கும் ஆண்களின் உலகத்தில் #metoo ஒரு virtual ஆயுதம். எப்போதெல்லாம் … அவள் எழுகிறாளோ .. அப்போதெல்லாம் அவளின் மேல் பயன்படுத்தப்படும் பல ஆயுதங்களில் ஒன்றுதான் #metoo .. அதற்கு எதிராக எழும் குரல்கள் … அதற்கு ஏன் ஆண்களிடம் இந்தப்பதட்டம் ??
8.தாமதமாக ஏன் சொல்ல வேண்டும் ? ஆண்களே ..தனி நபர்களை விடுங்கள். வெட்கமாயில்லை உங்களுக்கு ? இன்னும் சொல்லாமல் இருக்கும் பெண்களும் பேச ஆரம்பித்தால் தான் உங்களின் Mask ஐ கழட்டுவீர்களா ? ஏதோ ஆண்கள் மிகவும் சரியானவர்கள் போல ஒரு Mask அணிந்து நிற்கும் உங்களின் Mask கிழிக்கப்படும் நேரம் வந்திருக்கிறது. #metoo ஒரு ஆரம்பபுள்ளி மட்டுமே. இப்போதுதான் தையிரியம் வந்திருக்கிறது என்பது இருக்கட்டும். இதற்கு முன் சொன்ன பெண்களின் கதி என்ன என்பது ஆண்களுக்கு தெரியாதா ? ஆம் தவறுதான் என்று ஒத்துக்கொண்ட ஆண்கள் இன்னும் வெளியில் திரிந்துகொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் சரியான ஆண்கள் எனில் கேள்வி கேட்க வேண்டியது பெண்களை அல்ல. நீதிமன்றங்களை ! சில மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும் என்று இருந்தால் அவன் அவளை கூப்பிடுவானா ? தொடுவானா ? கண்களால் ரசிப்பானா ?
9.நகரங்களில் / கிராமங்களில் innocent பெண்களை இன்னும் ” பயன்படுத்தும் ” ஆண்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள் ? ஒரு பெண் தன் உடலை ஆண்களிடம் இருந்து காப்பற்றிகொள்வதே இங்கு மிகப்பெரிய போர். இந்த போரில் .. குற்றம் செய்பவன் ஆண். குற்றவாளி ஆண். கத்தி வைத்திருப்பவன் அவன். கத்தி சுத்துபவன் அவன். கையில் ஒன்றுமில்லாமல் நிராயுதபாணியாக நிற்கும் பெண்ணுக்கு .. கொஞ்சமும் தையிரியம் வந்தவிடக்கூடாது என்பதற்காக கையில் ஆண்கள் எடுக்கும் அடுத்த விஷயமே Character assasination. அதற்கு அவன் பயன்படுத்தும் medium அவளின் உடல். உடலை தொட்டுவிட்டால் அவள் வாழ்க்கை அழிந்தது என்ற ஒன்றை கற்பு என்ற போர்வையில் அவள் மேல் போர்த்தி போர்த்தி .. மூச்சு விட முடியாமல் அவளை அழிக்கும் அவனின் பார்வையை கொஞ்சம் அசைக்கும் முதல் முயற்சியே .. #metoo. என்னை கேட்டால் பெண்கள் இன்னும் வெளியே வரவேண்டும். நான் உட்பட, யார் தவறு செய்தாலும் சொல்ல வேண்டும். இதில் சில நிரபராதிகள் தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ( என்னமோ இதுவரை நிரபராதிகள் தண்டிக்கவே படாதது போல !! ). குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை கிடைக்கும் என்ற பயம் வர வேண்டும்.
10.ஆண் … தன் சார் குடும்பம், சமூகம், தொழில் உறவுமுறைகள், நட்பு உறவுகள், ஆண் பெண் தோழமைகள் … இங்கு எங்கு #metoo குற்றத்தை செய்திருந்தாலும் .. ஏன் ” என்னை மன்னிக்கவும் ” நிகழ்வை இப்போதே ஆரம்பிக்கக்கூடாது ? அப்படி அவனை கேட்க வைப்பதை எது தடுக்கிறது ? அவனின் ego. ” ஆண் என்றால் நெடில். பெண் என்றால் குறில். ” என்று ஒரு படத்தில் வருமே .. அப்படி ஒரு உயரத்தில் அமர்ந்து இருக்கும் அவனை தரையில் இறக்கினால், அவன் சரியாகிவிடுவான். ” என்னை மன்னிக்கவும் ” என்ற ஒரு வார்த்தையில் இது முடிவதில்லை. ஆனால் ” ஆம். இது நடக்கிறது ” என்பதை ஒப்புக்கொள்ளும் முதல் முயற்சி இது. நாகரிகம் கற்போம். முகமூடி அகற்றுவோம்.
முதல் Paragraph ஐ இப்போது மீண்டும் படிக்கவும்.