கவிதையின் கண் – 002
உலக சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று ஒரு
இலாப நஷ்ட
கணக்கிருந்தால்
விஷயம் வேறு
– நகுலன்
_______________________________________
நிறைய மனிதர்களை கவனிக்கிறேன். ” நான் இல்லாவிட்டால் என் நிறுவனம் அவ்வளவுதான் ” என்கிற தொனியில் அவர்களின் பார்வை இருக்கும். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அலுவலகம் செல்வார்கள். ( வீட்டிற்கு, சொல்லிய நேரத்தில் இருந்து .. குறைந்தது அரை மணி நேரம் கழித்து வருவார்கள் ). அலுவலகத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் involvement இருக்கும். அலுவலகத்திற்கு ஒரு ரூபாய் இழப்பு எனில் ஆடிப்போய்விடுவார்கள். மற்றவர்களை ஆடவும் வைப்பார்கள். ” என்னால் மட்டுமே இந்நிறுவனம் வளர்கிறது ” என்ற நினைவில் புரள்வார்கள். அந்த நிறுவனம் ” இன்னொரு மனிதரை ” கண்டுபிடிக்கும் நாள் வரை. அந்த நாளுக்கு பின் ..
புலம்ப ஆரம்பிப்பார்கள். ” எவ்வளவு செய்திருக்கிறேன் இந்த நிறுவனத்திற்கு ! ” ( ” என் ” நிறுவனம் ” இந்த ” நிறுவனம் ஆகும் பொழுதுகள் அவை ! ) என்று தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆரம்பிக்கும் இந்த பேச்சு, கதவிடுக்கின் வழி கசிந்து, அதே நிறுவனம் அவர்களை அழைத்து “உங்களின் மேல் disciplinary action ” என்று சொல்லும் அளவு செல்லும். எந்த நிறுவனத்தை மிகவும் நேசித்தார்களோ அதே நிறுவனம் சொல்லும் வார்த்தைகள் கேட்டுவிட்டு, எந்த வீட்டிற்கு தாமதமாக வந்தார்களோ அதே வீட்டிற்க்கு அன்று முன்னமே வருவார்கள். மனைவியிடம் / கணவனிடம் சொல்லி புலம்புவார்கள். ” எல்லாம் அந்த ” இன்னொரு மனிதர் ” வந்த பின் தான் என்று திட்டி தீர்ப்பார்கள். அப்போது அவர்களின் கண் முன்னே அந்த ” இன்னொரு மனிதர் ” – ‘ நான் இல்லாவிட்டால் என் நிறுவனம் அவ்வளவுதான் “என்ற வாழ்க்கையை ஆரம்பிப்பார் !
நிறுவனங்கள் தெளிவாகவே இருக்கின்றன – மனிதர்கள் தான் தெளிவை தொலைக்கிறார்கள். நாம் ஒரு நிறுவனத்திற்குள் வரும்போது, நம் திறமைக்காக, அந்த நிறுவனம் சம்பளம் கொடுக்கிறது. அதற்கான வேலையை பெறுகிறது. இங்கு Business Calculations அவ்வளவே. சில நிறுவனங்களில் இதையும் கடந்து மனிதர்களை அன்புடன் கவனிப்பது இருக்கும். அந்த அன்பை கவனிக்கும்போது Business Calculations ஐயும் கவனிப்பது சாலச்சிறந்தது. அதை விட்டுவிட்டு .. நிறுவனமே வாழ்க்கை என்று வாழ்வது போல ஒரு ” புரியாத தனம் ” இந்த உலகில் இல்லை. அப்படி வாழ்பவர்களிடம் ஒரு கேள்வி.
” உங்களில் யார் வரவில்லை என்றால் உங்கள் நிறுவனம் நாளை மூடப்படும் ? ”
இருபது plus வருட வாழ்வில் எனக்கு கிடைத்த பதில் .. ” யார் வரவில்லை என்றாலும் நிறுவனம் நடக்கும் “.
மேற்சொல்லப்பட்ட இந்த பதிலில் இருக்கிறது கள யதார்த்தம்.
ஒரு மனிதன் போனால் இன்னொருவன் – என்பதே உலக சந்தையின் விதி. அது புரிந்து விட்டால் மனிதர்கள் அவர்களுக்கென்று ” இலாப நஷ்ட ” கணக்குகளை கவனிப்பார்கள். நிறுவனம் அதன் இலாப நஷ்ட கணக்குகளை கவனித்து கொள்ளும் – கிடைக்கும் மனிதர்களின் உதவியுடன்.
சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள 10 நிமிடம் தாமதாகி போனதால் நிறுவனத்தில் தனக்கு மிகப்பெரிய இழப்பு என்று புலம்பிக்கொண்டு இருந்தார். 20 வருடமாக உழைக்கும் அவருக்கு கிடைக்க வேண்டிய ஒரு Recognition வெறும் 10 நிமிட தாமதத்தால் கிடைக்காமல் போனது எனில் – அது என்ன மாதிரியான நிறுவனம் என்று நீங்களே ஊகிக்கலாம் ! சரியான நேரத்தில் தலைவரின் முன் இருக்க வேண்டும் – அப்போதுதான் தனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று நினைக்கும் அரசியல்வாதிக்கும், இந்த நிறுவனத்தின் மேல் தட்டு நிர்வாக மக்களுக்கும் என்ன வித்தியாசம் ?
கொஞ்சம் யோசிப்போம். எந்த நிறுவனமும் சிறப்பாக உழைத்ததற்காக உங்களுக்கு சிலை வைக்கப்போவதில்லை. நீங்கள் இல்லை எனும்போது .. அது இன்னொருவனை கண்டுபிடித்து நகர்ந்துகொண்டே இருக்கும். அந்த இன்னொருவனும் இல்லை எனும்போது அது இன்னொரு இன்னொருவனை கண்டுபிடிக்கும். அது தவறல்ல. அதுவே இயல்பு. அதை புரியும் மனிதன் ..
” தனக்கென்று
இலாப நஷ்ட
கணக்குகளை ”
வைத்துக்கொண்டு, சுற்றம், புறம், பயணம், உலகம், யாரோ மனிதர்கள், நட்பு, நம்பிக்கை, நல்லவை, உதவுதல், பெறுதல் … என்று மகிழ்வாக வாழ்வான்.
ஆம். கண்டிப்பாக அந்த விஷயம் வேறு !