கவிதையின் கண் – 003
“ஒரு மலர் இதழில் ..
மௌனமாக நிற்கும்
பாறைத் தூணில் ..
மனம் தன்
” தன்மயத்தை ” இழக்கிறது ! ”
– பிரமிள்
_______________________________________
மனம் “தன்மயத்தை ” இழத்தலை நீங்கள் உணர்ந்தது உண்டா ?
எங்கு ” நீங்கள் ” என்ற எண்ணம் ” நீங்களில் ” இல்லையோ .. அங்கு மனம் தன் மயத்தை இழந்து .. ஒரு பெருவெளியின் அங்கமாக மாறும். திடீரென்று கடலில் தன்னை இணைத்துக்கொண்ட நதிபோல … அசாத்திய ஆற்றலுடன் திமிர்ந்து அடங்கும். கடலின் ஆறுகள் எகிருவதில்லை. முழுங்கப்பட்ட எச்சில் போல, சத்தமின்றி இயங்கும். பெருங்கடலின் ஒரு பகுதியாக மாறும். ஆழம் என்ற ஒன்றில் அங்கமாகிப்போகும் !
காடுகளுக்குள் சென்றவுடன் முதலில் வரும் உணர்வு ” தனியாக இருக்கிறோமே “. ஆம். நகரில் ” எல்லோருடனும் இருப்பது ” போன்ற உணர்வில் வாழும் ஒருவனுக்கு, ஒருத்திக்கு, காடு ஒன்று… சட்டென கூட்டத்தில் நின்ற குழந்தையை கை பிடித்து வீட்டுக்குள் இழுத்த கதையாக .. உள்ளே இழுத்து விட்டுவிடும். இழுத்த கையும் இருக்காது. சட்டென வீடும் மறைய, பெருங்காட்டு வெளியில் தனியில் உலாவும் அழகு இருக்கிறதே .. அங்கு இழக்கும் ” தன்மயம் ” தான் இந்த உலகின் மிகச்சிறந்த விடுதலை !
காணாமல் போன பொழுதுகள் அவை. காடுகளுக்குள் visiting card உதவப்போவதில்லை. கேட்கவும் ஆளில்லை. சொல்லவும் விரும்பவில்லை. பிறகு ஏன் இந்த Visiting, Debit, Credit, Customer card அடையாளங்கள். காடுகளில் இவை வேலை செய்வதில்லை என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை ! இந்த அடையாளங்களை தொலைத்த பின் மட்டுமே மரங்கள், செடிகள், ஆறுகள், பறவைகள், அவற்றின் ஒலிகள், பட்டாம்பூச்சி, அதன் பல்வண்ண நகர்வு, யாரும் நடக்கா தடம், யாரோ கால் வைத்த தடம், புற்கள் தங்கும் பனி, கிளை இடைவெளிகளில் வழி வந்து தோள் தொடும் கதிர், சில்லென்ற காற்று, தூரத்தில் ஏப்பம் இடும் சிங்கம், மகிழ்வில் பிளிரும் யானை .. எல்லாம் தெரிய வரும் !
காட்டில் இரண்டு வாரம் இருந்த பின் என்னை சந்தித்த வயதான ஒரு ஆண் கேட்ட .. ” எங்கிருந்து வரீங்க ” கேள்விக்கு … ” நானா .. நான் எங்கிருந்து … ” என்று யோசித்து பின் பிறந்த இடம் சொல்லும் நொடியில் புரிகிறது தன்மயத்தை இழந்திருப்பது. அப்படி ஒரு இழத்தலை சந்தித்தவர்கள் அக நிர்வாணம் உணர்ந்தவர்கள். அக நிர்வாணத்தில் வேடம் இல்லை. உள்ளது உள்ளபடி இருக்கும் நிலை இது !
சில வருடங்களுக்கு முன் .. ஆற்றில் ஆடையின்றி குளிக்க, யாருமற்ற அந்த நீர் வெளியில், சற்று தூரத்தில் செல்லும் கரு வண்ண பெரும் பாம்பு ஒன்று எதுவும் சொல்லாமல், செய்யாமல் அது அதன் பயணத்தை தொடரும்போது தான் புரிகிறது… அதனால் ” எந்த பயமும் ” இல்லை. இந்த பயங்கள் எல்லாம் ” தன்மயத்தால் ” வந்தவை. ஒரு பாம்பு ” இவன் இவள் எங்கே ” என்று தேடி வந்து கொத்தப்போவதில்லை. சத்தம் அதன் எதிரி. அதிர்வு அதன் எச்சரிக்கை. அப்போது மட்டுமே அது கொத்துவதை உறுதி செய்கிறது. அந்த கரு வண்ண பெரும் பாம்பு சட்டென பாதை திரும்பி .. என்னருகில் நீந்தியது. சுற்றி வந்து ஒரு வழியை ஏற்படுத்தி நகர்ந்தது. விலகியது.
” என்னருகில் ” என்று நான் நினைத்தது தன்மயத்தால் ஏற்பட்ட விளைவு, நோய், தடுமாற்றம், தோற்றப்பிழை…இன்னும் என்ன என்னவோ. நன்றாக யோசித்தால் .. அதன் நீந்தும் பாதையில் ஏதோ ஒன்று ( நான் ) குறுக்கே நிற்பதால், அந்த ‘ஏதோ ஒன்றை’ ( நான் ) தொந்தரவு செய்யாமல் சுற்றுப்பாதையில் சென்றிருக்க வேண்டும் அது !
அப்படி பார்த்தால் அது தான் example for being sensitive to everything!
I was just being sensitive to my ‘self’. இல்லையா ?