கவிதையின் கண் – 006
வீசும் காற்றினைக் கேளுங்கள்
அடுத்து எந்த இலை
இந்த மரத்தை விட்டுச் செல்லுமென்று.
– ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்று.
_______________________________________
இலைகள் சூழ் பெரு மரம் அது. வருடங்களாய் வாழ்வது. ஒரே ஒரு காற்று அந்த பெரு மரத்தின் ஒரு இலையை நோக்கி தன் பேச்சினை ஆரம்பிக்கிறது.
” என்ன .. விட்டு செல்ல தயாரா ? ”
மௌனமாய் நிற்கும் இலையின் மனதில் வருட நினைவுகள்.
காற்று சொல்லியது
” ஆம். நினைவுகள் தான். ஆனால் நினைவுகளும் ஒரு நாளில் just நினைவுகளாக மாற வேண்டும். அதுதானே விதி ”
இலை இன்னமும் மௌனமாகவே நிற்கிறது.
——————————————————————-
விட்டு செல்லும்போது ஏற்படும் மௌனத்தை பற்றி எழுத இந்த உலகில் இன்னும் யாரும் பிறக்கவில்லை. விட்டு செல்லுதலில் இரு பக்கம் உண்டு. ஒரு பக்கத்திற்கு தான் விட்டு செல்கிறோம் என்று தெரியும். இன்னொரு பக்கத்திற்கு தன்னை விட்டு செல்ல போவது தெரியாது. ஆனாலும் இப்படி ” விட்டு செல்லுதல் ” ஏதோ ஒரு காலத்தில் நிகழும் என்று அந்த இன்னொரு பக்கத்திற்கும் தெரியும். எப்போது என்பது இலையின், காற்றின், இயற்கையின் கையில் இருக்கிறது. மரத்தின் கிளைகளில் இல்லை !
விட்டு செல்லுதல் என்ற ஒன்றை நாம் சந்தித்து கொண்டே இருக்கிறோம். தாத்தா, பாட்டி, தந்தை, தாய், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, மகன், மகள், மாமா, அத்தை, சித்தி, கணவன், மனைவி … யாராவது ஒருவர் நம்மை ” விட்டு செல்லுதல் ” நடந்து கொண்டே இருக்கிறது. நமக்கு தெரியும் இது நடக்கும் என்று. எப்போது என்பதே கேள்வி. அவர்களுக்கும் தெரியும் விட்டு செல்வோம் என்று. எப்போது என்பதே அவர்களின் கேள்வியும். காற்று வந்து இழுத்துக்கொள்ளும்போது .. அந்த விட்டு செல்லுதல் நடந்தே விடுகிறது !
தன் நாட்டிற்கு வந்த யோகியிடம் ராஜா கேட்டார் ..
” ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்களேன் ”
கொஞ்சம் யோசித்து யோகி சொன்னார் ..
” முதலில் நீ சாக வேண்டும். பின் உன் மகன் சாக வேண்டும். பின் உன் பேரன் சாக வேண்டும் ”
அதிர்ச்சி அடைந்த மன்னன் கோபத்தின் உச்சிக்கு சென்று யோகியை சிறையில் அடைக்க சொன்னான்.
யோகி சொன்னார் …
” நான் என்ன தவறாக சொல்லி விட்டேன். இயற்கையின் order அது. முதலில் நீ இறப்பது தானே முறை ? நீ உயிரோடு இருக்க மகன் இறப்பது போல கொடுமை உண்டா ? நீ உயிரோடு இருக்க உன் பேரன் இறப்பதை போல கொடுமை உண்டா ? முதலில் நீ, பின் உன் மகன், பின் உன் பேரன் …இதுதானே முறை ”
மன்னன் அந்த கருத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்தான். சிறையில் இருந்து விடுபட்ட யோகி சொன்னார் ..
” உன் வீட்டை போல ஒவ்வொன்றாக இழக்கும் மரம் எதுவும் இல்லை ”
இந்த முறை மன்னனுக்கு கோபம் வரவில்லை. உண்மை கற்க பழகி இருந்தான் அவன்.
யாரோ பிரிவது என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும் இயற்கையின் கட்டளை. அதை மாற்ற முயற்சிப்பதை போல முட்டாள்தனம் இல்லை. எனக்கான நேரக் காற்று வரும்போது என் குடும்ப மரத்தில் இருந்து நான் இலையாய் உதிர்வேன் என்பது புரிய ஆரம்பித்தால் வாழும் நாட்கள் சொர்க்கம். அது புரியாது இயற்கையின் கட்டளைக்கு எதிராக வாழ்ந்தால், வாழும் நாட்களே நரகம் !
மனைவியை பிரிந்த கணவன், கணவனை பிரிந்த மனைவி .. அழ வேண்டியது இல்லை. ஆர்ப்பாட்டம் செய்து தன் அன்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் ‘கணவ/மனைவ‘ மரத்தின் வேர் ஒன்றும் பிரியவில்லை. இலை மட்டுமே பிரிகிறது. மரம் எப்போதும் மரமே. இலை விழும் என்பதை புரியும் மரம் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்வதில்லை !
விதை மண்ணிற்குள் முளைக்க ஆரம்பிக்கும்போதே உதிர்தலுக்கும் சேர்த்தே வளர்கிறது. உதிர்தல் சத்தியம். நிச்சயம். சர்வ உண்மை. யதார்த்தம். இயல். விதைக்கு புரிவதால் வளர்வதில் மட்டும் அதன் கவனம் இருக்கிறது. பிரிந்து விழும் இலையை கவனிக்கும் தரைக்கு அது இன்னொரு நிகழ்வு .. ! அவ்வளவே. தரைகள் அழுவதில்லை. மரங்கள் அழுவதில்லை. காற்று அழுவதில்லை.
மனிதன் அழுகிறான். அழுகிறாள். அழத் தெரிவதால்.
மனிதன் மீண்டும் எழுகிறான். எழுகிறாள். வாழ்கிறான். வாழ்கிறாள். வாழத் தெரிவதால்.
கடைசியில் இதுதான் நடக்கும் என்ற உண்மையை முதலில் உணர்பவன் வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் கவிதை.
ஒவ்வொரு எழுத்தும் மகிழ் உணர்வு.
யோசிப்போம்.