தெரிந்ததும் தெரியாததும் – 004
படித்து, வேலைக்கு சேர்ந்து, காசு பார்க்க ஆரம்பித்தாயிற்று. எப்படியாவது ஒரு car வாங்கவேண்டும் .. வாங்கியாயிற்று. எப்படியாவது ஒரு இடம் வாங்கவேண்டும் .. சரி வாங்கியாயிற்று.. எப்படியாவது ஒரு வீடு கட்ட வேண்டும் .. சரி கட்டியாயிற்று. இன்னும் ஒரு இடம் வாங்கி, இன்னும் ஒரு வீடு கட்டி, வாடகைக்கு விட்டு .. சரி செய்தாயிற்று. இன்னும் கொஞ்சம் Bank Balance அதிகப்படுத்தி .. படுத்தியாயிற்று. இப்போ என்ன ? தனியாக தொழில் ஒன்று செய்து.. செய்து ? இன்னும் பணம் சம்பாரித்து .. ரித்து ? .. Commitments never ends as long as we have Desires and Dreams என்று எங்கோ படித்த ஞாபகம் !
மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்த நட்பு ஒன்று சொல்லியது ..
” எல்லாம் இருக்கிறது. ஆனால் ஏதோ இல்லை. எதையோ இழக்கிறேன். என்ன அது என்று தான் தெரியவில்லை ”
இங்கே தான் இருக்கிறது சூட்சுமம். எல்லாம் கிடைத்த பின் .. “நிம்மதியான வாழ்க்கை. என் வாழ்க்கையை நான் சிறப்பாக வாழ்ந்தேன் ” என்று சொல்ல முடியவில்லை எனில் … என்ன வாழ்க்கை அது ?
ஒரு துரோகம், ஒரு பெரும் ஏமாற்றம், ஒரு பழிவாங்கல், ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இறப்பு, ஒரு மனசாட்சிக்கு மட்டும் தெரிந்த பொய், ஒரு பெருங் களவு, ஒரு பிரிவு, ஒரு விபத்து, ஒரு பெரும் நஷ்டம் .. .. இன்னும் நிறைய சொல்லலாம். இவை அன்றி ஒரு வேகமான வெற்றி இவ்வுலகில் வாய்ப்பில்லை. யதார்த்தமான வெற்றி கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் இவற்றை எல்லாம் ஒதுக்கி தள்ளும்.
மேற்சொன்னவைகளை விலக்கி, உள்ளதை வைத்து சிறப்பாக வாழ்ந்து முடிப்பவர்களால் ” நிம்மதியான வாழ்க்கை. என் வாழ்க்கையை நான் சிறப்பாக வாழ்ந்தேன் ” என்று சொல்ல முடியும். இப்படி சொல்ல வேண்டும் என்பதை நோக்கி தானே வாழ்க்கை ?
நம்மை சுற்றி அழகான ஒரு உலகம் இருக்கிறதே .. அதை எப்போது பார்ப்பது ? பூமியில் பிறந்து, பூமியில் வளர்ந்து, பூமியை நடந்து, பூமியை கும்பிட்டு .. ஆனால் வாழ் பூமியை பார்க்காமல் இறந்து போவதா ? சரி .. பூமி வேண்டாம். நாம் பிறந்த நாட்டை ? சரி .. நாடு வேண்டாம் .. நாம் பிறந்த மாநிலத்தை ? அதற்க்கு எல்லாம் நேரம் இல்லை என்பது தானே நம்மின் பதில். ஹஹஹ.. அதே நாம் .. பணம் சம்பாதித்தவுடன் வேறு நாடுகளுக்கு பறக்கிறோமே .. அப்போது நம் பிரச்சினை நேரம் இல்லை. நம் உண்மையான பிரச்சினை .. அருகில் இருப்பதை விட்டுவிட்டு தூர பறப்பது. தூர உலகமே உண்மை என்று நம்புவது. நாம் இருக்கும் இடத்தில் இருந்து 60, 60, 6000 கிலோமீட்டெரில் இருக்கும் பகுதியை மறப்போம். 30000 கிலோமீட்டர் பறந்து எதையோ பார்த்து, ” என்ன ஒரு அழகு ” என்று மெய்சிலிர்ப்போம். இப்போது புரிகிறதா ? பொருள் ஈட்டல் survival வரை சரி. அதற்கு மேல் அது ஒரு Ego centric act.
இந்தியாவை பார்க்கவே இந்த ஜென்மம் போறாது. அவ்வளவு அழகு இந்த இந்தியா. 600 Kilometer இல் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், இருப்பிடம்.. அனைத்தும் மாறும் அதிசயம். இந்நாட்டில் பிறந்ததை போல ஒரு பெரும்பேறு இல்லை.
இங்கே சொல்லும் ஆன்மிக வாழ்க்கை ” போதும் ” என்கிறது. ” இயற்கையை போய் பார் .. மனம் திற .. சிறகு விரி .. பற .. ” என்றும் அதே ஆன்மிக வாழ்க்கை தான் சொல்கிறது.
கேட்கிறோமா ?
Chikmagalur என்ற ஒரு அதிசய உலகத்தில் இருக்கிறது இந்த காட்சி. பச்சை எல்லை கட்டிய மலையும், நீல வான் முனையும் சேரும் இடத்தில், கண் படக்கூடாது என்று ஆங்காங்கே திரியும் மேகங்களை பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நிற்க முடிந்தால் BPT – 40 க்கு அழகாய் வரும். ( ஒலிம்பிக் champions resting இல் இருக்கும்போது வரும் Beats per Minute அது ! இங்கே சும்மா எளிதாக கிடைக்கும் !! )
ஒரு 800 kilometers இல் இருக்கிறது இப்படி ஒரு சொர்க்கம். அங்கு சென்று ” நேரம் ஆயிற்று கிளம்பு ” என்று பறக்காமல், ( அதற்கு செல்லாமலே இருக்கலாம் !!☺️ ), தன்னை காட்சியிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே அமர்வது எப்போது ?
இன்னும் 40 வருடங்கள் கழித்து நன்கு சம்பாதித்த பின்பா ?
யோசிப்போம்.