தெரிந்ததும் தெரியாததும் – 005
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் கண்ட இந்த காட்சி ஏற்படுத்தும் அதிர்வுகள் பல. அவற்றில் பிரதிபலிப்புகள் சொல்லும் பாடங்கள் இங்கு பகிரப்பட வேண்டியவை. பொதுவாக இந்த சாலையில் கண் கொள்ளா காட்சிகள் பல உண்டு.
*
நீரின் அமைதியே பிரதிபலிப்பின் வேர். நீர் அமைதியாய் இல்லை எனில் பிரதிபலிப்பு என்று ஒன்று இருக்கும் ஆனால் கலக்கமாக, தெளிவற்று, குழப்பமாக இருக்கும். எது பிரதிபலிக்கிறதோ அதன் அமைதி மிக முக்கியமானது. Stillness எனப்படும் அந்த அமைதியால் மட்டுமே சரியான பிரதிபலிப்பை கொடுக்க முடியும்.
மனம் அமைதியாய் இருந்தால், அதன் பிரதிபலிப்புகள் சரியாக இருக்க முடியும்.
*
பிரதிபலிப்பு உண்மை அல்ல. ஆனால் இருப்பதை அப்படியே சொல்லும். இருப்பதை அப்படியே காண்பிப்பது போன்ற அழகான விடயம் இல்லை. இருப்பதை அப்படியே – எந்த வித கூட்டல் கழித்தல் இல்லாமல் – காண்பிக்க முடிந்தால் அதன் அழகே தனி.
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு விடயத்தை சொல்லும்போது – எந்த வித கூட்டல் கழித்தல் இல்லாமல் சொல்ல முடிந்தால் .. அதுவே மிகச் சிறந்த அழகு அந்த நட்புக்கு.
*
யாரும் கல் எறியாதவரை பிரதிபலிப்புகள் அப்படியே இருக்கும். கல் எறிந்த பின், பிரதிபலிப்புகள் சிறிது நேரம் கலங்கும். தன் நிலை இழக்கும். உருவம் வேறு நிலை பெறும். ஆனால் .. இவை எல்லாம் சில நேரம் மட்டுமே. பிரதிபலிப்பு இழந்த இடத்திலேயே மீண்டும் தன்னை கண்டுபிடிக்கும். கொண்டுவரும். நிலை நிறுத்தம். ஆம். முக்கியமாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இதை செய்யும்.
பிரச்சினைகளுக்கு பின், அப்படி ஒரு ஆர்ப்பாட்டமற்ற come back கொடுக்க முடிந்தால், நாம் பிரதிபலிப்புகள் சொல்லும் பாடத்தை கற்றிருக்கிறோம் என்று அர்த்தம்.
*
பிரதிபலிப்புகள் சத்தம் அற்று வாழ்பவை. இருப்பதை அப்படியே காண்பிக்கும் அவை எந்த சத்தத்தையும், தன்னுள் கொண்டுவருவதில்லை.
அப்படி ஒரு நட்பு உங்களுக்கு இருக்கிறதா ? இருப்பதை அப்படியே நமக்கு சொல்லும் நட்புக்கள் .. அவர்களின் நட்பு நம்மிடம் இருக்கிறதா ?
… என்று கேட்கிறதா இந்த பிரதிபலிப்புகள் !?