தெரிந்ததும் தெரியாததும் – 006
Tso Kar :
லடாக் பகுதியை உலகின் சொர்க்கம் என்று பெயரிடலாம். பனி போர்த்தி நிற்கும் மௌன தலைகீழ் V மலைகளின் இடைவெளியில் இருக்கும் ஒரு ஏரி போதும் .. ஒரு நாள் முழுக்க மௌனமாக அமர்ந்து இருக்க. இளைப்பாற. இதம் பெற. இதயம் பெற. 15000 அடியில் ஒரு ஏரி அமைதியாகி, எதிரே தெரிவதை பிரதிபலித்து .. ஒரு சாட்சியாக நிற்பதை காண கண் இரண்டு போதும். மனம் மட்டும் அங்கே செல்ல நினைக்க வேண்டும். சென்றவுடன் அங்கேயே நிகழ்காலத்தில் வாழ வேண்டும். வாழ்ந்தால் .. ? அப்படி ஒரு அழகான ஏரி கண்ணில் தெரியும்.
பொதுவாக இமயமலை பகுதிகள் மனிதர்கள் அற்றவை. அங்கே செல்லும் மனிதர்களை ” அவ்வளவும் எனக்கே ” என்று நினைக்க வைப்பவை. மலைகள் பேசுவதில்லை என்பதை பொய்யாக்குபவை. தன் மௌனத்தால், மனிதன் அவனுக்குள் பேசுவதை, அவனுக்கே கேட்க வைத்து, மலை தான் அவனுடன் பேசியதோ என்றும் அதே அவனை நினைக்க வைக்கும் திறன் படைத்தவை. மௌன உயர மலைகள் உணர்த்தும் ஒரே பாடம் … ” உலகிலேயே நீ பெரியவனாக இருந்த போதும் மௌனம் பழகு. நட்புணர்வும் மகிழ்வும் நம்பிக்கையும் கொடு “.
இமயமலையில் நான் பார்ப்பதை போல நீல வானம் வேறு எங்கும் பார்த்ததில்லை. தொழிற்சாலைகள் இல்லை எனில் நம் வானங்களே நமக்கு ஓவிய வாத்தியார்களாக ஆகியிருக்க கூடும். நீல வானில், பகலில், வட்டமாக தெரியும் நிலவு ஓரு அதிசயம் எனில், இரவில் அதே கரு வானில் … வீசி எறியப்பட்ட மத்தாப்புகளாய் மின்னும் நட்சத்திரங்கள் தான் இவ்வுலகின் real அழகி. அழகன். Tso Kar கரைகளில் படுத்துக்கொண்டு, இரவு நேரத்தில் நட்சத்திரங்களை பார்த்தவர்கள் … அது அழகு இது அழகு என்று சொல்பவர்களை கவனித்து சிரித்து கடப்பார்கள். அழகின் வேறு நிலை அது.
அங்கே அமர்ந்து இருந்தபோது … ஏரியின் கரைகளை நோக்கி எழுந்த அலைகள் ஏற்படுத்திய மென் சத்தம் போன்ற ஒரு இசையை கேட்டிருக்கிறேனா என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஒரு rhythm மில் கரை நோக்கி வரும் சத்தம் கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக மாறவில்லை. ஆம். இயற்கை அவ்வளவு ஒழுங்காக அங்கே வாழ முடிகிறது. செயற்கை உலகம் இழந்த பல பொக்கிஷங்களில் ஒன்று … ஏரிகளின் அலை சத்தம். கால் நனைந்து ஏரியில் நின்றபோது, மனம் ஏரியில் குதிக்க ஆரம்பித்து இருந்தது. 15000 அடியில் ஒரிலக்க வெப்பநிலையில், குதித்தல் உடலுக்கு நல்லதல்ல என்று உடல் விடுத்த எச்சரிக்கையையும் கேளாமல் … உடை கழட்டி, விழுந்து எழுந்த போது .. உடல் என்னுடன் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு சில்லிட்டது. கை எடுத்து கன்னத்தில் வைத்து, அழுத்தி, உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்ட பொழுதுகள் அவை !
என்ன இங்கு பயணிக்க வேண்டுமா ? தயாராக இருக்கலாம். கூடிய விரைவில் .. இமயமலை நோக்கிய பயணம் ஒன்று அறிவிக்கப்படும். வழக்கம்போல busy busy என்று மானுட பொய்கள் பேசாமல் .. பொக்கிஷங்களை காண தயாராகலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கும் மனநிலையில் இருந்து பயணித்தால், இந்த உலகின் இன்னொரு அழகிய பக்கம் கண்ணில் தெரியும்.
பயணிக்க தயாராவோம். நட்சத்திரங்கள் காண பயனற்ற காரணம் தவிர்த்து, பயனுள்ள காரணம் காண்போம் !
அங்கே உங்களை சந்திக்கிறேன்.