மனங்களின் மறுபக்கம் – 002
பள்ளிபாளையம் – ஈரோடு வழியே செல்லும்போது காவிரி பாலம் ஒன்று வரும். அதன் அருகே இருக்கும் தேநீர் கடை ஒன்றில் காலை நடையின் போது தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு எனக்கு. அப்போது பார்த்த ஒரு காட்சி இது.
மிகவும் வயதான கிழவி ஒருத்தி அமர்ந்து பிச்சை கேட்கிறாள். அந்த பக்கமாய் ஒல்லியான தேகத்துடன் நடந்து வந்த ஒருவர் அந்த கிழவியை பார்த்துவிட்டு கையில் இருந்த காசை/ பணத்தை ஏதோ கொடுக்கிறார். பின் நான் அமர்ந்து இருந்த தேநீர் கடைக்கு வருகிறார்.
” டீ போடவா ? ” இது தேநீர் கடைக்காரர்.
” இல்ல வேண்டாம். கையில் இருந்ததை அந்த கிழவிக்கு கொடுத்திட்டேன். அதனால டீ வேண்டாம் ” – இது உதவி செய்த ஒல்லியான மனிதர்.
” அட .. சும்மா டீ சாப்பிடு. நீ அதுக்கு செஞ்சே .. நான் உனக்கு செய்யறேன் ” சிரித்தவாறு தேநீர் கடைக்காரர் சொல்ல .. அந்த உரையாடலின் பின் இருக்கும் மனம் என்னை மகிழ்வாய் அதிர வைத்தது.
தன் இயலாமையால் பிச்சை கேட்கும் வயதான கிழவி, தன்னிடம் இருப்பதை ‘அப்படியே ‘ கொடுக்கும் ஒல்லி மனிதர், அவருக்கு உடனே டீ வழங்கும் தேநீர் கடைக்காரர் .. இந்த மூவரையும் பார்க்க வைத்த இயற்கை.. !
உதவும் மனம் நம்மிடம் இருக்கிறது. இல்லாமல் இல்லை. உதவும் மனம் இல்லை எனில் குடும்ப அமைப்பே இருக்க வாய்ப்பில்லை. உதவுதல் என்பது ” இயலாமையின் ” போது மட்டும் அல்ல. எப்போதும் ! உதவுதல் என்பது ஒரு இயல்பு. சொல்லிக்கொண்டு உதவுதல், சொல்லாமல் உதவுதல், தக்க சமயத்தில் உதவுதல், தான் உதவி செய்வது தெரியாமல் உதவுதல் .. என்று இதற்கு பல பெயர்கள் இருந்த போதும் .. உதவுதல் என்பது ஒரே ஒரு இயக்கமே.
உதவி ஆளுக்கு தகுந்தவாறு வேறுபடும். பணம் மட்டுமே உதவி என்று யார் சொன்னது ?. ” How to win friends and influence people ” புத்தகத்தை நீ படித்தே ஆகவேண்டும் என்று சொன்ன என்னை விட வயது முதிர்ந்த நண்பரை இப்போது நினைத்து பார்க்கிறேன். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது. அந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் வேறு நிலை. மிக சாதாரணமான புத்தகம் அது. ஆனால் சாதரணங்களே மாற்றங்களின் ஆரம்பபுள்ளி !!
சமீபத்தில் படிப்பிற்காக, ஒரு பெண்ணிற்கு நான் உதவி செய்த போது அந்த பெண் சொன்னது நினைவுக்கு வருகிறது …
” இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவேன். ஆனால் இதை கொடுக்க நினைக்கும் மனதிற்கு என்ன திருப்பி கொடுப்பது என்று தெரியவில்லை ! “.
நான் சிரித்து கொண்டே சொன்னேன்.
” இதே போல நீயும் யாருக்காவது செய். அது போதும். ”
ஆம். உதவிகள் தொடர்ச்சியானவை. அவை ஒன்று மற்றொன்றாவது என்று இயல்பான மாற்றத்தை அடைந்து கொண்டே இருக்கும். யாரோ மனிதர்களின் உதவிதான் நம்மை வாழவைக்கிறது என்பது நாம் உணர்ந்தும் உணராமல் வாழ்கிறோமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.
சாலை கடக்கும்போது .. “சார் நில்லுங்க ” என்று சொல்லும் அந்த யாரோ மனிதர்.
கால் வைக்கும்போது “பார்த்து சார். வழுக்கிடும் ” என்று எச்சரிக்கும் வயதான பெண்.
கீழே விழுந்த புத்தகத்தை உடனே எடுத்து கொடுக்கும் ” ஆட்டோ மனிதர் “.
” சார் .. headphone மிஸ் பண்ணிட்டீங்க ” என்று அழைக்கும் பக்கத்து இருக்கை மனிதர்.
” குனிஞ்சு போ தம்பி, தலையில இடிக்கும் ” என்று சொல்லும் பெரியவர்.
இந்த யாரோ மனிதர்களின் உதவிக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறோம் ?
அல்லது … யாரோ மனிதர்களுக்கான உதவியை .. நாம் எப்போது துவங்க போகிறோம் ?
10K ஆளுமைகளின் சில எழுத்தாளர்களுக்கு/சில சிறப்பான யோசிப்பாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்