நகரும் புல்வெளி : 010
குழந்தைகள் போல் .. யதார்த்தத்தை பிரதிபலித்து வாழும் மனிதம் வேறு எதுவும் இல்லை. கோபமோ, பாசமோ, குழந்தைகள் உள்ளதை சொல்லிவிட்டு எப்போதும்போல் நம்மிடம் உறவாடுகின்றன. ஐந்து மாதமாக பேசவில்லை என்பெதெல்லாம் நம்மிடம் மட்டுமே. ஐந்து நிமிடங்களே குழந்தைகளுக்கு அதிகம்.
முதிர்ச்சி என்ற பெயரால் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் நாம் என்று யோசித்தால் நிறைய ஆச்சர்யங்கள் வரும் நமக்கு. நாம் நினைத்த போது எழ முயற்சித்த குழந்தை இயக்கங்களை தொலைத்து, alram வைத்த கடிகாரம் போல் நேரத்திற்கு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அலைகிறோம். காலையில் எழுந்ததும் அம்மா அப்பா மடி மேல் உட்கார்த்திருந்த குழந்தைத்தனங்களை தொலைத்து, whatsapp ல் கூட விசாரிக்க இயலாத busy யில் இருப்பதாய் சொல்லிக்கொள்கிறோம். அம்மா நீ சாப்பிட்டியா ? என்று கேட்ட பொழுதுகளை மறந்து … சாப்பிட்டியா என்று என்னை கேட்டாயா என்று வம்பிழுக்கிறோம். அக்காவிற்கு புத்தகங்களை அவளின் பையில் வைக்க உதவிய நாம்தான் இப்போது ‘ அது அக்காவோட பிரச்சினை ‘ என்று ஒதுங்குகிறோம். நம்மை திட்டியபோது ரசித்த அதே மகளைத்தான் இப்போது ‘ அதெல்லாம் அடங்காது ‘ என்று புறம் பேசுகிறோம். யார் கண்டுபிடித்தது இந்த முதிர்ச்சியை ?
ஒரு மரம் சிறு வயதிலும், பெரு வயதிலும் அது மரம் மட்டுமே. முதிர்ச்சி என்று அது தன்னை மாற்றிக்கொள்வதில்லை. புற மாற்றம் என்று ஒன்று உண்டு. அதை தவிர்த்து அகத்தில் மரம் விதையின் DNA வில் இருந்து மரம் மட்டுமே. கிளைகள், பழங்கள், விழுதுகள் எல்லாம் புற வளர்ச்சி மட்டுமே. மரம் எப்போதும் மரமே. மனிதன் மட்டும்தான் முதிர்ச்சி என்ற பெயரில் அக மாற்றம் கொள்கிறான். எப்போதும் அப்பாவிற்கு பையன்தான் என்பது அவனுக்கு அவன் காலில் நின்றவுடன் மறந்து போகிறது. அதேபோல் பையன் எப்போதும் பையனே என்பது அப்பாவிற்கு கால மாற்றத்தில் மறந்து போகிறது. நிறைய தந்தைகள் பையனை போட்டியாளராக பார்ப்பதும் இவ்வுலகில் தான் நடக்கிறது !
சிறு வயதில் பிச்சைக்காரரை பார்த்தால் உதவ வேண்டும் என்று நினைக்கிற அதே குழந்தை பின்னாளில் உதவவும், உதவக்கூடாது என்று நினைக்கவும் .. தகுந்த காரணங்களை கண்டுபிடிக்கிறது. இதுவே முதிர்ச்சி எனப்படுகிறது. இந்த முதிர்ச்சி இல்லை எனில் ‘ பிழைக்க தெரியா பையன் / பெண் ‘ என்ற பட்டம் வேறு. சூது வாது தெரியவில்லை உனக்கு என்ற சொல் வேறு. ( தெரியாமல் கேட்கிறேன் .. சூதும் வாதும் ஏன் தெரிய வேண்டும் ?. ஒரு சூதின் ஆதிக்கம் இன்னொரு சூது வரும்வரை மட்டுமே என்பது ஏன் யாருக்கும் புரிவதில்லை ? ) ஒருவருக்கு உதவ வேண்டும் என்பதற்கு இடையில் இவ்வளவு குறுக்கீடுகள் எதற்கு ? உதவ வேண்டும் என்பதில் உதவ வேண்டும் என்பதை தவிர .. வேறு சிந்தனைகள் என்ன தேவை ? கொஞ்சம் யோசித்தால், ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டிய அழகு வாழ்க்கையை .. ஏகப்பட்ட pre constructed mind maps வைத்துக்கொண்டு .. அதை முதிர்ச்சி என்று பெயரிட்டு.. பேசாமல் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உடல் வளர்ச்சியை கொடுத்து விட்டு மரங்களை போல், அகத்தில் ஒரு குழந்தையாகவே வாழ்ந்தால் என்னதான் நடந்துவிடும் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. இந்த கேள்வியை புரிந்துகொள்ள ஒரு குழந்தையும் இங்கு இல்லை என்பது மறுக்க முடியா உண்மை.
திடீரென்று வந்த பனி மூட்டத்தின் குளிரை பொறுக்க முடியாமல் இந்த கம்பளி போர்வையை போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தது இந்த குழந்தை. ஆனாலும் அது அப்போதும் குழந்தையாகவே இருந்தது ! முதிர்ச்சி அடைந்த நாம் அங்கே இருந்திருந்தால்.. அந்த குழந்தைக்கு போர்வை போர்த்திய பின் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருப்போம். அங்கே தான் நாம் வைத்திருக்கும் முகமூடியை அந்த குழந்தைக்கு போர்த்திவிட்டு .. அதற்கு முதிர்ச்சி என்று பெயரும் இட்டு கொள்கிறோம். முதிர்ச்சி என்ற ஒரு முகமூடியை எரிக்க வேறு ஒன்றும் தேவை இல்லை. உள்ளே இருக்கும் நீ வெளியே வந்தாலே போதுமானது.
யோசிப்போம்.