நகரும் புல்வெளி : 014
ஒரு உலகம் இருக்கிறது. அங்கே நிச்சயமாக நாம் நினைப்பதும், செய்வதும், பேசுவதும், உணர்வதும் சரி என்று தெரியும். மற்றவர்களும் அதை ஆமோதிப்பார்கள். ஆனாலும் ஒரு வரி வரும் .. ” பொறுமையா இரு “. அங்கே இருக்கிறது அந்த உலகத்தின் வேர். அப்படி என்னதான் அந்த பொறுமையில் இருக்கிறது ?
பொதுவாக நாம் பேசுவதற்கான உரிமைகள் இருக்கும்போது நம்மிடம் இருந்து வரும் வார்த்தைகள் நம்மின் இன்னொரு பரிமாணத்தை காண்பிக்க கூடியவை. அப்படி ஒரு பரிமாணம் வர வாய்ப்பிருந்தும், அமைதியாக இருக்கும்போதும் நமக்குள் இன்னொரு பரிமாணம் வருகிறது. இந்த பரிமாணம் கொஞ்சம் வித்தியாசமானது. வார்த்தைகள் உள்ளே bubble போல எழுந்து அங்கேயே அமிழும். அதே நேரம் முகத்தில் ஒரு சிரிப்பும், ஒரு நிலைக்கும் பார்வையும் … இந்த பொறுமை யாராலும் கணிக்க முடியாதது. ‘பொறுமையா இரு ‘ என்று சொல்லும் அதே உலகின் ஒரு பகுதி – இன்னொரு உலகம் பொதுவாக கேட்கும் .. ” ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கே ? அது அதை அப்பப்போ தட்டிடனும் “. இந்த இரு உலகங்களும் நம்மை பொறுமையா இரு, ஏன் பொறுமையாக இருக்கிறாய் .. என்று கேட்டக்குக்கொண்டே இருக்கும்.
புத்தர் நடந்து செல்லும்போது, புத்தரை கண்டபடி திட்டும் ஒருவனை அவர் பொறுமையாக சிரித்து கடக்கிறார். சீடர்கள் ஏன் இவ்வளவு பொறுமை என்று கேட்டபோது .. ” அவன் பேசிய வார்த்தைகளை நான் வாங்கி கொள்ள விரும்பவில்லை ” என்று சொல்லிவிட்டு அதே சிரித்த முகம், நேர் நிலைக்கும் பார்வை யுடன் நடந்து செல்கிறார். ஏன் நமக்கு சம்பந்தமில்லா வார்த்தைகளை வாங்க வேண்டும் ? ஏன் கோபத்தில் கொதிக்க வேண்டும் ? வேறென்ன .. நிரூபித்தல் தான் காரணம். மனிதனின் மிகப்பெரிய challenge அவனை அவன் நிரூபிக்க விரும்புவதுதான். ஆரம்ப காலத்தில் எல்லோரும் செய்யும் இந்த தவறு, அங்கங்கே குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ” என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள் ” என்ற நிலைக்கு சென்று, பின் நின்றுவிடுகிறது. அங்கே வரும் பொறுமை .. பொறுமையின் இன்னொரு ரகம்.
” என்னை தவறாக பேசி இருக்கிறாய். ஆனாலும் அமைதியாய் இருக்கிறேன் ” என்பது ஒரு வித்தியாசமான பொறுமை. ஏன் எனில் அந்த பொறுமை இன்னும் அந்த உறவை மதித்து அமைதியாக இருக்கிறது. அந்த உறவிற்கு நேரமும் காலமும் கொடுக்கிறது. ‘ உன் தவறை நீயே திருத்திக்கொள் ‘ என்ற சுதந்திரத்தையும் அளிக்கிறது. வாழ்க்கை இங்கே வேறு ஒரு நிலையை அடையும். இங்கே தவறாக பேசியவர்கள் மன்னிப்பு கேட்பதும், அமைதியாக இருப்பவர்கள் அடுத்த நிலை அமைதியை அடைவதுமாக இந்த வாழ்க்கை வேறு நிலையை நோக்கி பயணிக்கிறது.
பொதுவாகவே பொறுமையின் எல்லைகள் கண்களில் காணக்கூடியவை. பொறுமைக்கு எல்லையே இல்லை என்பதெல்லாம் illusion. நம் கண்களில் தெரியும் எல்லையை சற்று நகர்த்தி வைக்கிறோம் என்பது மட்டுமே முழு உண்மை. ஏதோ ஒரு கட்டத்தில் அந்த எல்லை உடைவது நிச்சயமாக நடக்கும். ஆனால் பொறுமை உடையும்போதெல்லாம், உறவுகள் அறுந்து போகும் என்று அர்த்தமல்ல. அநேகமாய் உறவுகள் வேறு ஒரு புரிதலை நோக்கி பயணிக்கும். பொறுமை உடையும்போது .. ஒன்று அதீத புரிதலும், அல்லது, அதீத விலகலும் நிச்சயம். அதற்கு தயாராகும் மனது பொறுமையை கொஞ்சம் சோதித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு மனிதனிடமும் அவனின் பொறுமைக்கு பின்னால் .. ஏகப்பட்ட ஏமாற்றங்கள் இருக்க கூடும். அவை விதையாக உழப்பட்டு, எதிர்கால மரமாக வருடங்கள் கழித்து தெரியக்கூடும். அந்த மரத்தின் கீழ் அவனை / அவளை ஏமாற்றிய .. அதே ஏமாற்றங்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் நிலையும் வரக்கூடும். அப்போது அந்த மரம் வைத்திருக்கிறதே ஒரு அமைதி .. அதற்கு இணையான அமைதி இந்த உலகில் இல்லை. அந்த அமைதி அநேகமாய் பொறுமையின் உச்சபட்ச நிலையாக இருக்க கூடும்.
சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு இந்த புகைப்படம் எடுக்கும்வரை பொறுமையாய் நின்ற வாகன சாரதி ஒருவரின் சிரிப்பு இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கடக்கும்போது சொன்னார் ..
” வாழ்க்கையை ரசிக்கிறீங்க “.
அங்கே எனக்கொரு கேள்வி வந்தது. ” வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்தால் பொறுமை தானாக வந்துவிடுமோ ? அல்லது.. அந்த ரசிப்பு இல்லாததால்தான் பொறுமையை இழக்கிறோமோ ? ”
யோசிப்போம்.