நகரும் புல்வெளி : 016
சிரிப்பு எல்லோருக்குமானது. எல்லோரின் முகத்திலும் ஒரு வசீகர சிரிப்பு கட்டாயம் இருக்கும். ஆனால் அந்த சிரிப்பின் பின் இருக்கும் காரணங்கள் பொதுவானவை அல்ல. அவை மகிழ்வான காரணங்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சிறு வயதில் ஒரு சிரிப்பு சட்டென வருகிறது. ஆனால் .. அனுபவம் வர வர.. சிரிப்பிற்கு ஒரு அசாத்திய புரிதல் தேவைப்படுகிறது. சிரித்த, சிரிக்க வைத்த பலரின் வாழ்க்கைக்கு பின் இருந்த இருக்கும் காரணங்கள் பெரும்பாலும் சோகம் நிறைந்தவை. அந்த சோகத்தை புரிந்தவர்களுக்கு அந்த சிரிப்பு … ஒரு வித ஆறுதலை கொடுக்கும். ‘ எவ்வளவு நாளாச்சு நீ இப்படி சிரிச்சு ‘ என்கிற வரியை கடக்காதவர்கள் இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் இன்னும் வாழ்வின் யதார்த்தத்தை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
கோபம் பொதுவாக நெருங்கியவர்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் வருவது உண்மையே. அந்த ‘ நெருங்கியவர்களிடம் ‘ என்பதன் அர்த்தம் புரிந்தவர்களுக்கு இது புரியலாம். ‘நானும் நீயும் வேறு வேறு அல்ல ‘ என்கிற மனநிலை தான் நெருக்கம் கொடுக்கிறது. நானும் நீயும் வேறு அல்ல எனும்போது மகிழ்ந்த மனநிலை, கோபம் வரும்போது .. அதை விளக்காமலே புரிந்து கொள்ள முடியும் திறமையை பெற்றிருக்கும். அப்படி பெற்றிருந்தால் கோபம் அழகான அனுபவமாக முடியும். ‘ஏன் என்னிடம் கோபம் உனக்கு ?’ என்கிற கேள்வி இரு காரணங்களில் வருகிறது. 1. விளக்காமலே புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. 2. நானும் நீயூம் வேறு வேறு. இதில் முதலாவது.. காரணம் விளக்கப்பட்டு.. புரிந்தவுடன் சரியாகிவிடும். இரண்டாவது Bye சொல்ல தயாராகும் மனநிலை. கோபத்தின் பின் இருக்கும் அன்பு எல்லோருக்கும் தெரியாது. தெரிபவர்களுக்கு … கோபம் தெரியாது.
மௌனத்தின் காரணங்களை இன்னொரு மௌனம் அழகாய் உணர்ந்து கொள்ளும். ஒரே ஒரு மென்சிரிப்பில் காரணத்தை சரி செய்யும். மௌனம் போன்ற ஒரு அழகான புரிதல் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை. ஒவ்வொரு மனிதனின் மௌனத்திற்கு பின்னும் சொல்ல விரும்பாத ஆயிரம் காரணங்கள் உண்டு. சில .. கடைசி வரை சொல்லப்படுவதில்லை. புதைக்கப்படும்போது, அல்லது, எரிக்கப்படும்போது .. அந்த முகம் வைத்திருக்கும் உயிரற்ற மௌனம்… அதற்கு பின் இருக்கும் உயிருள்ள காரணம் என்ற நிலை …. இவ்வுலகின் புரிந்து கொள்ள முடியா புதிர்.
இந்த வரிகளை படித்ததும் ஒவ்வொருவருவருக்கும் அவரவரின் கடந்த காலம் ஞாபகத்தில் வரக்கூடும். அப்படி வரும்போது முகத்தில் புன்னகை ஏற்படுத்தும் முகங்களும் வரக்கூடும். அவர்களே நம்முடன் இறுதி வரை பயணிக்கும் தகுதி பெற்றவராக இருக்க கூடும். எதன் பொருட்டும் அந்த மனிதங்கள் நம்மை விட்டு நகரப்போவதில்லை என்ற நிறைவுடன் .. சிரித்தவாறு உடலை வாங்கிக்கொள்ளும் மெத்தையும் ..இனிய நாளும்/இரவும் நம்மை மௌனமாய் அணைத்து கொள்வது.. இந்த உலகின் ஆச்சர்ய இயக்கம். ஒரு அசாத்திய நிறைவில் நிறைவு புன்னகையுடன் நம் உலகம் பயணிக்கும். அந்த பயணத்தில் …
யோசிக்க வேண்டியதில்லை.
அந்த மனிதர்கள் பற்றி.
யோசிப்போம்.
அந்த மனிதங்களை பற்றி.