நகரும் புல்வெளி : 018
புரிதல் என்பது உனக்கும் எனக்குமானது அல்ல. நமக்கும் நமக்குமானது. மீண்டும் சொல்கிறேன். நமக்கும் நமக்குமானது. உன் எதிர்காலத்திற்க்கும் என் எதிர்காலத்திற்குமானது அல்ல. நம் எதிர்காலத்திற்குமானது. தனியை பொதுவில் தொலைத்து வாழ்பவர்கள் நாம்.
நான், நீ வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ தொலைவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரும் ஆச்சர்யம். நான், நீ அழகுதான். அது நாமாக, நாம் இருவர் மட்டும் தனியாக இருக்கும்போது ! தனிமையில் ‘நான்’ ‘நீ’ போல் ஒரு செல்ல வார்த்தைக்கு ஈடு இணை கிடையாது. பொதுவில் ‘நான்’ ‘நீ’ போன்ற ஒரு பிரிவிற்கான வேர் வார்த்தை கிடையாது.
இணையாக நீயும் நானும் நடப்போம். பேசுவோம். அமர்வோம். கற்போம். கற்பிப்போம். காத்திருப்போம். காதலிப்போம். காதலிக்கப்படுவோம். ஆளுமையை வெளிப்படுத்துவோம். ஆளுமையை ரசிப்போம். சத்தமாய் பேசுவோம். சத்தமின்றி உணர்வோம். நுகர்வோம். சுவைப்போம். பார்ப்போம். கேட்ப்போம். நிறைய ‘ம்’கள். எல்லா ‘ம்’ களிலும், நீயும் நானும் இல்லை. நாம் இருக்கிறோம். அங்கேதான் நம் உலகம் ஆரம்பம்.
ஒரு மனிதர்கள் அற்ற தீவு. நாம் சென்றதால், ‘மனிதர்கள் அற்ற’ தீவு என்கிற பெயரை இழக்கிறது. அதுதான் நம் வலிமை. ஒன்றாய் காலடி வைக்கும்போது சரித்திரம் மாற்றப்படும். அந்த தீவின் பறவைகள் நம்மை கண்டு பறந்து செல்லாது. பயம் என்ற ஒன்று அந்த பறவைகளுக்கு இருக்க போவதில்லை. அதுவே நம் மனதின் யதார்த்த தொனிக்கு கிடைக்கும் வரவேற்ப்பு. நமக்கு அருகில் அந்த பறவைகள் அமர்வது இயற்கையின் பச்சை வரவேற்பு வாயில்.
தீவிற்க்குள் நடக்கும்போது, நீ விழ நான் தாங்குவது நடக்கும். நான் விழும் முன் நீ எச்சரிக்கை செய்வது நடக்கும். ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பதின் போட்டி அது. வெளி உலகம் அதை ‘அந்நியோன்யம்’ என்று பெயரிட்டுகொள்ளும். இடட்டும். அவர்களின் உரிமை அது. நமக்கு அது ஒரு ஆரோக்கியமான போட்டியின் வெளிப்பாடு. கொஞ்சம் உரிமை. நிறைய சுதந்திரம் என்பதன் குறியீடு. உன் எல்லைகளை நான் வகுப்பதில்லை. ஆனால் நீ செல்லும் பயணங்களில் நான் நிறைவேன். விரல் பிடித்து, மோதிரம் தொட்டு, சிறிது சிரித்து உடன் நடக்கும் பயணம் அல்ல அது. Visible அருகாமையில், invisible ஆத்மார்த்ததில் .. நீயும் நானும் பயணிக்கும் ஜன்னலோர காற்று முகம் அறையும் பயணம் அது.
நாம் பிரிவதில் ஒரு சாரார்க்கு, நாம் சேர்வதில் ஒரு சாரார்க்கு, நாம் நாமாக இருப்பதில் ஒரு சாரார்க்கு, நம்மோடு பயணிக்க வேண்டும் என்று ஒரு சாரார்க்கு, நம் பயணம் நிற்க வேண்டும் என்று ஒரு சாரார்க்கு .. இப்படி உலக கண்ணாடிகளில் நாம் முகம் பார்ப்பதில்லை என்று நமக்கு மட்டுமே தெரியும். உனக்கும் எனக்கும் நம்மை பார்க்க கண்ணாடி தேவையில்லை என்பதும் நமக்கு மட்டுமே புரியும்.
சரி .. அந்த நீயும், நானும் யார் ?. இதை படிக்கும்போதே அந்த நீயும், அந்த நானும் பேச ஆரம்பித்திருப்போம். அநேகமாய் மென் சிரிப்பு ஒன்றை உதிர்த்து படித்து கொண்டிருப்போம். அட .. என்று மனதிற்குள் சொல்லி இருப்போம். நீயாடா இது என்று கேட்டிருப்போம். நீதானடி இது என்று பதிலையும் பெற்றிருப்போம். யார் என்று யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. Announcementல் வருவது அவர்களின் உலகம். Mute ல் வருவது நம் உலகம். இங்கு சத்தங்கள் அனாவசியம். மௌனம் சந்தம். மௌனத்தின் போது ஒலிக்கும் ‘ம்’, இதுவரை யாரும் இசைக்காத ஒரு வார்த்தை பாடல். அந்தப் பாடலுக்கு இந்நேரம் உன் கண்கள் சிரித்தால் ..நானும் நீயும் வேறு வேறல்ல.
பயணிப்போம்.