நகரும் புல்வெளி : 019
பொதுவாக ‘ எப்போதும் செல்லும் ‘ பாதைகளை தவிர்த்துவிட்டு புதிய பாதைகளை நான் தேர்ந்தெடுத்து செல்வதுண்டு. புதிய பாதைகளில் நிரந்தரமாய் இருக்கும் இருப்பு ‘தேடல்’. தேடுதல் என்பது எதற்காக ? எதை நோக்கி ? எதுவுமற்றா? என்ற கேள்விகளை தவிர்த்து விட்டு யோசித்தால்.. பொதுவாக வரும் பதில் மனிதர்களின் அருகாமை. தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் தொலைத்தது மரங்களை மட்டும் அல்ல. மனிதர்களையும்தான்.
ஒரு முறை காட்டு வழிப்பாதை ஒன்றில் பயணிக்கும்போது ஒரு லாரி பழுது காரணமாக நின்று கொண்டிருந்தது. அதை தொடர்ந்து ஒரு நான்கு லாரிகள், இரண்டு கார்கள் நின்றிருந்தன. அதில் இருந்த அனைவரும் அந்த பழுதுபட்ட லாரியின் அருகில் நின்று உதவிக்கொண்டிருந்தனர். பெண்கள் வழக்கம்போல் காருக்குள். என் காரை நிறுத்திவிட்டு சென்று பேச ஆரம்பித்தபோது .. ” இந்த பக்கம் விலங்குகள் அவ்வப்போது வரும். தனியா இருந்தா சிரமம். அதனால நிற்கிறோம் ” என்று சொன்னார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் 100 120 ல் பறக்கும் மனிதர்கள் ஞாபகத்திற்கு வந்தார்கள். ( நான் உட்பட ).
இன்னொரு முறை, சாலையின் ஓரத்தில் மோர் விற்கும் பெண்மணியை சந்தித்தேன்ம் அவர் பேசிய விஷயங்கள் ஆச்சர்யமானவை .. ” பொதுவாக வெய்யில் நேரங்களில் மக்கள் வாகனத்தை நிறுத்தி மோர் சாப்பிடுவாங்க. ஆனால் ஒரு குடும்பம் இதற்காகவே இங்கு பயணித்து வந்து சாப்பிடும். கணவன், மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என்று எல்லோரும் வருவார்கள் – இரண்டு கார்களில். நான் ஒண்டிக்கட்டை. எனக்கு அவ்வளவு சந்தோஷமாகிடும். பணமே வேண்டாம்னு சொல்லுவேன். அவர்கள் கையில் வைத்து திணிப்பார்கள். அவர்களும் ‘ என்னவோ தெரியலைம்மா .. இங்க வந்து சாப்பிட பிடிச்சிருக்கு என்பார்கள் ‘. அவர்கள் சென்ற பின் ஒரு வெறுமை இருக்கும். அதன் பின் நான் மோர் விற்க்கும்போது எனக்கு விற்பனையில் அவ்வளவு பிடிப்பு இருக்காது ” . நகரமயமாதலில் நாம் இழந்தவை, வெறும் காடுகள் மட்டும் அல்ல. இவை எல்லாம்தான்.
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அவர் சொன்னார் .. ” சில வாகனங்களின் சத்தம் கண்டு ஆடு மிரளும். துள்ளி குதிக்கும். இரண்டு மூன்று நாட்களில் அதுக்கு பழகிடும். சத்தம் வரும்போது தலையை தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் மேய ஆரம்பிக்கும். ஒரு ஆடு தன்னை இந்த சூழ்நிலைக்கு பழக்கும். “. பொருள் பொதிந்த வார்த்தைகள் ! சமீப தூத்துக்குடி கலவரங்கள் ஞாபகத்திற்கு வந்தது. தலையை தூக்கி பார்த்துவிட்டு தன்னை இந்த சூழ்நிலைக்கு பழக்குகிறோமா அல்லது மிரண்டு, எழும்பி நிற்போமா தெரியவில்லை. ஆனால் ஒன்று. சில ஆடுகளை வாகனங்கள் அடித்து செல்லும். ஆயிரம் ஆடுகள் சாலையில் நின்றால் ? Reverse Gear .. நிச்சயம் !
முன்னேறும் பயணம் தொடர்வோம்.