நகரும் புல்வெளி : 027
சில நினைவுகள் எப்போதும் நமக்கருகில், தலையணை மந்திரம் போல் இருப்பை விவரித்துக்கொண்டே இருக்கும். அந்த நினைவுகளின் வேர், உடல் முழுக்க படர்வது, போர்வை தேவைப்படா அணைப்பு. நெஞ்சுக்கூட்டின், தேக்கப்பட்ட, குவிக்கப்பட்ட இளஞ்சூடு.
ஏன் நினைவுகள் நம்மை, மீண்டும் மீண்டும் வந்தடைகின்றன ? அவை எதிர்பார்ப்பது என்ன ? நினைவுகள் நம்மை அடையும் நேரம் பெரும்பாலும் தனிமை என்று இருப்பது ஏன் ? நினைவுகள் அதன் ஆதிக்க ஆளுமையை, ஏன் காட்சிகளாக, குரல்களாக, உணர்வுகளாக … நமக்குள் செலுத்திக்கொண்டே இருக்கிறது ?
நினைவுகளில் நல்லவை – தேவையற்றவை என்று இரண்டு பகுதி உண்டு. தேவையற்ற நினைவுகள், சவாலான தருணங்களிலும், நல்ல நினைவுகள் மகிழ் தருணங்களிலும் வருவது ஆச்சரியமே. தேவையற்ற நினைவுகள், மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு செல்வதும், அதே வார்த்தைகளை கேட்க செய்வதும், அதே உணர்வுகளை உணர வைப்பதும் எதற்காக என்ற கேள்வி ஒன்று உள்ளுக்குள் சகதியை அடையும் புழுதி போல் விழுந்துகொண்டே இருக்கிறது. தேவையற்ற என்ற tag இருந்த போதும் அவை தேவையற்ற பொழுதுகளில் வாசலை அழைக்கப்படா விருந்தாளியாய் தொடுவது, இன்னும் விடை கண்டுபிடிக்கப்படா புதிர்.
நல்ல நினைவுகள் தான் இயக்கத்தின் எரிபொருள். ஒரு நல்ல நினைவு, மொத்த நாளின் இயல்பையும் மாற்றி விடும். அதுவும் மகிழ் நிலையில், மனதுக்கு பிடித்த மனதுடன் பேசும்போது, அவை நல்ல நினைவுகளாகவே இருப்பதன் சூட்சுமம் தான் என்ன? அதிகாலை குரலும், அமைதி சூழ் உலகும் நல்ல நினைவுகளை ஆழ் உலகில் இருந்து மென் கரம் கொண்டு வெளியே இழுத்து வீசுகின்றன. எப்படி விழுந்தாலும், விழும் நினைவுகளுக்கும், விழுந்த இடத்திற்கும் வலியற்ற ஒத்தடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நல்ல நினைவு ஒன்றை பெற்ற காலைப்பொழுது அந்த நாள் முழுக்க நீரின் கூழாங்கற்கள் போல் சத்தமின்றிய இருப்பில், சம்மணம் போட்டு அமர்கின்றன.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு நல்ல நினைவை அசை போடுவது, அந்த நினைவை மீண்டும் digest செய்ய உதவக்கூடும். மீண்டும் மீண்டும் Digest செய்யப்படும் நல்ல நினைவு ஒன்று, உள்ளே கொண்டு வரும் vitamin கள், உடலை உள்ளிருந்தும் பிரகாசிக்க செய்யும். முகம் புன்னகையை நீண்ட கால குத்தகைக்கு எடுக்கும். வார்த்தைகள் சுத்தமாகும். பேச்சு செல்லும் இடமெங்கும் மகிழ் உணர்வை சந்தன பூச்சு போல், பூசிக்கொண்டே செல்லும். ஒரே ஒரு நல்ல நினைவின் பலம், இந்த உலகின் ஆணி வேரை சாந்தப்படுத்தவும் செய்யும். அசைக்கவும் செய்யும்.
நல் நினைவுகள் ஆட்சி செய்யும் அக தேசத்தில், புரிதல் என்பது உணர்தலின் உயிர்ப்பூ.