நகரும் புல்வெளி : 031
சிறு தூறல்.
யாருமற்ற சாலை.
மென் பழைய நினைவுகள்.
பள்ளி விட்டு திரும்பும் மாணவன்.
வான் பார்த்து அமர்ந்திருக்கும் முதியவர்.
என்னை கடக்கும் புதுமல்லி வாசம்.
தொலை தூர வெளிச்சம்.
100ல் வாகனங்கள்.
சிறு தூறல்.
அத்தனையும் கடந்து, நடந்து செல்லும்போது எதிர்ப்படும் மனிதர்களின் முகத்திற்கு, ஒரு சிரிப்பை வழங்கி, நடக்கும்போது… சில பதில் சிரிப்புகள், சில ஆச்சர்யங்கள், சில fixed முகங்கள், சில திரும்பி பார்த்த முகங்கள்… இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு மறைய ஆரம்பித்த சூரியன் கேட்ட ஒரு கேள்வி … ” எதை நோக்கி நடக்கிறாய் ? ”
“மனிதம் நோக்கி” என்று என் பதில் இருக்கும். இந்த வாழ்க்கை முழுதும் மனிதம் நோக்கியே நடக்கிறேன். இன்று வந்த தனி செய்தியில் .. ” நன்றிகள் பல. இன்று எங்களின் திருமண நாள். பிரிய வேண்டியவர்கள் நாங்கள். உங்களின் சந்திப்பிற்கு பின் தவறாக யோசிப்பதை மாற்றிக்கொண்டோம். நன்றிகள் ” என்று பேசிய அந்த செய்தி தெரிவித்த மனிதம் நோக்கி தான் என் நடை தினமும் !
” புத்தகங்கள் நோக்கி ” என்று என் பதில் இருக்கும். “அசுரா ” படித்து அசந்து போகிறேன். இராவணனின் இராமாயணம் அசத்துகிறது. ஒரு பார்வை, ஒரு hero, ஒரு வில்லன் எல்லாம் இனி இல்லை. ஒவ்வொரு hero விற்கு பின்னும் ஒரு வில்லனும், வில்லனுக்கு பின் ஒரு hero வும் வாழ்வது யதார்த்தம் போல். 360 degree வாழ்க்கையை கொடுக்கும் புத்தகம் தேடி இந்த நடை தினமும் நகர்கிறது.
” புகைப்படங்கள் நோக்கி ” என்று என் பதில் இருக்கும். நேற்று ஏற்காட்டில் நடந்த போது .. புகைப்படமா, நடையா என்று ஒரு போட்டியே இருந்தது. ஆங்காங்கே புகைப்படம் சுவை எச்சிலை ஊற்று எடுத்தாலும், அசந்து அமர்ந்த போது நடை வெற்றி பெற்றதை மௌனமாய் அறிவித்தது.
” பாடல்கள் நோக்கி ” என்று என் பதில் இருக்கும். ” கண்ணில் என்ன கார் காலம் ?கன்னங்களில் நீர்க்கோலம் ” என்று ஒரு பாடல். அதற்காகவே இன்னும் இரண்டு KMs நடக்கலாம். அப்படி ஒரு நடை நடந்து.
” கவிதைகள் நோக்கி ” என்று என் பதில் இருக்கும்.
அசதியான பாதங்கள்
தேடும் உன் விரல்கள்
பிடித்து விடும் அழகிற்காகவே…
நடக்க வேண்டும்
இன்னும் கொஞ்ச நேரம்
நானாக – பின் நாமாக !
நடப்போம். எண்ணம் பகிர்வோம். மனம் நிறைவோம்.