தெரிந்ததும் தெரியாததும் 012
NH வழக்கம்போல கம்பீரமாக நின்றது. Traffic இல்லை. வழ வழ சாலை. யாருக்காகவும் நிற்க வேண்டியதில்லா வேகம். எதிரே, அருகே, பின்னே … மனிதர்கள் அற்ற ஒரு High Class apartment போல – ஆனால் -இவ்வளவு இருந்தும் அநாதையாக !
உயர் ஜாதி மக்கள் வாழ்க்கையை கவனித்தால் ஒன்று புரியும். அனைத்து வசதிகளும் இருக்கும். வீட்டுக்குள் குடை பிடிக்க கூடவே ஆள் இருப்பான். கடைசி பருக்கை சாப்பிட்டவுடன் தட்டை எடுக்க அருகே யாரோ கையை கட்டிக்கொண்டு நிற்பார்கள். இவ்வளவும் இருந்தும் அந்த மேல்தட்டு மக்களின் முகத்தில் ஒரு நிறைவு இருக்காது. யாரையோ தேடுதலும், யாரையோ இழத்தலும் நடந்து கொண்டே இருக்கும். NH drive ம் அப்படித்தான்.
பெங்களூரில் சாலை ஏறினால் நேராக பயணித்தால் கோவை அடைந்து விடலாம். ஆனால் அப்படி செய்யவில்லை நான். உயர் ஜாதி அநாதை வாழ்க்கை தேவை இல்லை எனக்கு. ஆக .. NH இல் இருந்து விலக முடிவெடுத்தேன். கொஞ்ச நேரமாவது நான் மனிதர்களுடன், இயற்கையுடன் பயணிக்க வேண்டும். தொப்பூரில் இருந்து மேச்சேரி மேட்டூர் பவானி வழியாக ஈரோடு அடைந்து அங்கிருந்து மீண்டும் NH அடைந்து மீண்டும் அநாதையாக முடிவு செய்து வாகனத்தை திருப்பிய போது செய்த முதல் வேலை .. ac ஐ அணைத்துவிட்டு window ac ஐ on செய்து சுதந்திர காற்றை சுவாசித்து மனதிற்குள் இயற்கை ஆக்ஸிஜன் நிரப்பி மகிழ் சிரிப்பொன்றை முகத்தில் விரித்து பயணிக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம் என்னவெனில் .. எதிரே tvs 50 யில் பயணித்த விவசாயி என் முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே கடந்தார். ” ஹ்ம்ம் … நான் அனாதை அல்ல. மனிதர்கள் என்னுடன் இருக்கிறார்கள் ” என்று மனம் திமிராக ஆனால் மகிழ்வாக உறுமியது
NH என்ற ஒன்று வந்த பின் கிராம சாலைகளை ” தீண்டத்தகாத சாலைகளாக ” மாற்றிய நம் அறிவு மனதை என்னவென்று சொல்வது ! கொஞ்ச காலத்திற்கு முன்னே அதில் பயணித்தவர்கள் தானே நாம் ! கண் பார்க்கும் மக்களை avoid பண்ண ஆரம்பித்த போது, வீட்டின் உயரம் apartment ஆகவும், சாலையின் உயரம் NH ஆகவும் மாறிவிட்டதோ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். உயரம் எல்லாம் சரி தான்.. apartment இல் மனிதர்களை இழந்து சுதந்திரம் என்ற பெயரில் பெரும் சிறையில் வசிப்பதை போல .. NH இன் இரு மருங்கிலும் fencing செய்யப்பட்ட high class அநாய்களே .. மன்னிக்கவும் .. அநாதைகளே நாம்.
JSW, Chemplast என்று நிறுவனங்கள் ஆங்காங்கே வரவேற்றாலும் .. பச்சை வயல்கள் மெதுவாக நம் பயணத்தின் எல்லையாக மாறியவுடன் சாலை வேறு உடையை அணிகிறது.
மரங்கள் நம்மை cover செய்த சாலைகள் தாய் மடியின் சுகம். பெரு வெய்யிலோ, பெரு மழையோ நம்மை அடையும் முன் ஒரு சிறு அக்கறை தடுப்புகள் அவை. NH இல் திறந்த வெளி தான் அழகு. ஆனால் எந்த தடுப்புமற்ற அநாதையாக அங்கு திரிவதில் எந்த அழகும் இருப்பதாய் தெரியவில்லை.
புகைப்படம் எடுக்கும்போது என்னை கடந்த பெரியவர் ஸ்நேகமாய் சிரித்து கேட்டார் …
” படம் புடிக்கறீகளா ? புடிங்க புடிங்க. நாங்க இங்கேயே வாழறோம். அதனால படம் எடுப்பதில்லை ”
கன்னத்தில் அறைந்த வரிகள் அவை. உண்மைதானே ? எவற்றை இழக்கிறோமோ அவற்றை தானே தேடி தேடி புகைப்படம் எடுக்கிறோம் ? அங்கேயே வாழ்பவர்களுக்கு எதுக்கு புகைப்படங்கள் ?
காவேரி இங்கு ஆறு அல்ல. உயிர். வழியெங்கும் ஏதோ ஒரு குடும்பம் காவேரிக்கு ஏதோ ஒரு வேண்டுதலை செய்துகொண்டே இருக்கிறது. அதேபோல ஏதோ ஒரு set of மனிதர்கள் குளித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரே குடும்பமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அருகருகே !
பெயர் அற்ற ஒரு படித்துறையில் ஆடைகளை களைந்து குளிக்க நான் தயாரானபோது யாரோ மனிதர் ஒருவர் சொன்னார் ..
” பயப்படாம குதிங்க. ஒன்னும் செய்யாது. நம்ம காவேரி. இந்த கல்லுக்கு இந்த பக்கம் விளையாடுங்க. அந்த பக்கம் போயிட வேண்டாம். ”
இந்த யாரோ உறவுகளை, அக்கறையை தான் Apartment களிலும் NH களிலும் தொலைத்து விட்டோமோ ?
எந்த shampoo வும் தேவைப்படவில்லை தலைக்கு. குளித்து முடித்தவுடன் .. பஞ்சு பஞ்சாய் பிரிந்து பறக்கிறது கேசம். இயற்கையாய் கிடைத்ததை இழந்துவிட்ட செயற்கையை amazon river இல் தேடும் தலைமுறை நாம் போல் !
ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளியேயும் எல்லைச் சாமிகள். தீயவை வந்துவிடக்கூடாது என்று கோர முகங்களில். பூஜைகள் நடந்துகொண்டே இருக்கிறது.
” கும்பிட்டுக்கங்க. எல்லை சாமி பாத்துக்குவான் ” என்ற வார்த்தைகள் எவ்வளவு பெரிய ஆறுதல் ! ” பார்த்து பத்திரம்பா. கவனமா போ ” என்று அம்மா சொல்லும் வார்த்தைகளுக்கு நிகரானவை அவை. ஒவ்வொரு ஊருக்கு வெளியேயும் ஒரு எல்லை சாமி .. வீட்டு அம்மாவின் அக்கறை வடிவில் !
” மோர் சாப்பிடுங்க தம்பி. உடம்புக்கு நல்லது ” .. என்று சொல்லும் பாசக்கார கிழவியின் வியாபார யுக்தியும் அக்கறையை தான் சொல்கிறது.
” முதல்ல கொஞ்சம் தண்ணி குடிங்க. அப்புறம் மோர் குடிங்க .. நீண்ட தூர பயணம்ல ” என்ற வார்த்தைகளில் வியாபாரத்தை காணோம். Hyper Mall களில், Mcdonals இல், KFC யில், CCD யில் நீர் கேட்டால் முறைக்கும் வியாபார சின்னத்தனம் ஞாபத்தில் !!
பவானி தாண்டியவுடன் மீண்டும் NH என்னை ஆட்கொண்டது. NH இல் சொகுசான பயணம் என்பது உண்மை எனினும், அதன் பெயரில் நாம் இழந்து இருப்பதை யோசித்தால் … ?
யோசிப்போம். ஒவ்வொரு பயணத்திலும் கிராம சாலைகளை தேர்ந்தெடுப்போம். அடுத்த தலைமுறைக்கு மனிதர்களை அறிமுகப்படுத்துவோம். வேகத்தை அல்ல ! அவர்களும் ஆற்றினை பார்க்க வேண்டும். குளிக்க வேண்டும். இப்படி ஒரு உலகம் இருப்பதை அறிய வேண்டும்.
என்ன பயணிப்போமா ?