தெரிந்ததும் தெரியாததும் : 014
” ஒரு Drive போகணும் அண்ணா .. உங்க கூட ” சொன்ன சத்யா சிலிகுரி யில் இருந்து வந்த உடுமலைப்பேட்டை பெண். முகநூல் மூலம் அண்ணன் தங்கை நட்பு. சந்தித்த உடன் பேசிய முதல் வார்த்தை .. ” எந்த பக்கம் செல்கிறோம் அண்ணா ? “. நான் சொன்ன பதில் … “தெரியவில்லை “.
Random Drives என்பது எந்த plan ம் இல்லாமல், Drive செய்வது. அதாவது ” No Rule is the Rule “. எவ்வளவு நேரம் என்று தெரியும் ஆனால் எங்கு செல்லப்போகிறோம் என்று தெரியாது. முதலில் ஒரு ஏரியை பார்க்கலாம் என்று பயணம் ஆரம்பித்தபோது அந்த ஏரி வறண்டு போயிருப்பதை உணர்ந்து திரும்பி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அப்போதுதான் அந்த பழைய வீடு கண்ணில் பட்டது. சுமார் 50 /60 வருட வீடாக இருக்கலாம். தூண்கள் வைத்த திண்ணைப்பகுதி, சில்லு ஓடு வைத்த கூரைப்பகுதி .. என்று அசத்திய வீட்டினை கொஞ்சம் கவனித்தால் ஏதோ ஒரு சோகம் இருப்பது தெரிந்தது. யாருடைய வீடு இது ?. யார் இருந்தது ? இப்போது அவர்கள் எல்லோரும் எங்கே ? கேள்விகளை எறியும் இந்த வீட்டினை பார்க்க பார்க்க இன்னும் அதிசயிக்கவே தோன்றியது. சில வீடுகள் அமைதியாக இருக்கும். ஆடம்பரம் இருக்காது. பெரிய gate இருக்காது. நாய்கள் அங்கே குலைக்காது. Watchman ஒருவர் வாங்கும் சம்பளத்திற்கு ” யார் நீ ” என்று கேட்டுக்கொண்டே அல்லது பார்த்துக்கொண்டே இருப்பது இருக்காது. அப்படி ஒரு வீடு அது. ஏதோ ஒன்றை சொல்ல முடிந்த, ஆனால் மௌனமாக வாழும் சாட்சி போல நிற்கும் அந்த வீடு எண்ணங்களுக்குள் எதையோ பிசைந்தது.
அமைதியான தெரு ஒன்றில் காற்று கடக்கும் சத்தம் நகரத்தில் கேட்டதுண்டா ? பறவைகள் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டதுண்டா ? எங்கோ நகரும் ஆட்டுக்குட்டியின் கணைக்கும் சத்தம் கேட்டதுண்டா ? ஒரு தெருவில், ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு மேற்சொன்ன அனுபவங்கள் காட்சிகளாய் மாறிக்கொண்டே இருக்க.. அந்த அமைதியை ரசிக்க ஆரம்பித்தேன். ஒரு கோவில்,அருகே ஒரு பள்ளி, அங்கே குழந்தைகளின் உற்சாக சத்தம் … நகரம் என்ற மாபெரும் அவதியில் இந்த அழகினை தானே இழந்து traffic கில் horn அடித்துக்கொண்டே நிற்கிறோம் ? எழுப்பப்படும் ஒவ்வொரு horn ம் … இழந்த அமைதியின் அடையாளங்கள் !
வீட்டை பார்த்துவிட்டு பயணத்தை மீண்டும் தொடங்க சட்டென மனதில் நின்ற ஓர் இடம் ஒரு அழகான தென்னந்தோப்பு. பொதுவாக தென்னந்தோப்புகள் மனதை சட்டென ஈர்க்கும். அதற்கு அது கொடுக்கும் நிழல் மற்றும் space தான் காரணம் என்று தோன்றுகிறது. City யை Natural parking செய்துவிட்டு சுற்றிப்பார்த்த போது .. குளுமை குளுமை அவ்வளவு குளுமை. ( குலுமனாலி யெல்லாம் செல்ல யோசிக்கிறோமே… அருகே உள்ள தென்னந்தோப்புக்கு செல்ல யோசிக்கிறோமா ? ) சத்யா புகைப்படங்களை சுட்டுத் தள்ள, எனக்கு தெரிந்த சில விடயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். சத்யா ஒரு நல்ல கற்றுநர். கற்க தயாராகும் மனம் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடும். அது தனக்கு தெரியும் என்று போலி வேடம் இடாது. தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லி கற்க ஆரம்பிக்கும்.
சத்யா சொல்லும் ” அண்ணா ” எம் இரண்டாம் தங்கை அழைக்கும் விதம். முகமும் அதே. ஒரு தங்கையுடன் பயணிப்பது நிச்சயம் அழகான அனுபவம். அதுவும் இயற்கையை ரசிக்கும் ஒரு தங்கையுடன் !
மீண்டும் பயணம் துவக்கம். வழியில் ஒரு சில இடங்களில் காட்சிகள் கண்ணை கவர ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் city யில் ஏறிக்கொண்டு பயணிக்க .. அந்த சிறு சிறு நிறுத்தங்கள் நம்மை, நம் பார்வையை இன்னும் அழகாக்கும் கவிதைகளாய் மாறிப்போகின்றன.
அப்படி பயணித்த போது ஆடு மேய்த்துகொண்டிருந்த அம்மாவிடம் பேச சொல்லி ஆழ்மனம் intuitive signal கொடுக்க உடன் வாகனம் நிறுத்தி சென்றோம். Intuition சொல்வதை முழுதாக மதிப்பது என்னிடம் உண்டு. அந்த அம்மா பேச ஆரம்பித்தாள்.
” என்ற பேரு வெடத்தம்மா. வாயில வராதுங்கோவ் ” என்று கோவை தமிழில் ஆரம்பித்த அவள் பேசியது இன்னும் நினைவில்.
” முப்பது வருஷமா ஆடு மேய்க்கிறேன்ங்க. ஒரு மகன்ங்க. இப்போதான் திருமணம் ஆச்சுங்க. மருமக இவங்களை மாதிரியே. ( சத்யாவை கை காண்பிக்கிறார் ). பையன் பத்தாவது படிச்சிட்டு இப்போ சொந்தமா tractor வச்சுருக்காங்க. இரண்டு tractorங்க. Tractor வாங்கிட்டு தான் கல்யாணம் னு சொன்னான்ங்க. அப்புறம் அதோட loan அடைச்சிட்டு தான் கல்யாணம் னு சொன்னான்ங்க. அப்புறம் இரண்டாவது வாங்கிட்டு தான் கல்யாணம்னு சொன்னான்ங்க. அப்புறம் போர் போட்டுட்டு ன்னு சொன்னான்ங்க. அப்புறம் வீடு கட்டிட்டு தான்னு சொன்னான்ங்க. அப்புறம் கடன் அடைச்சிட்டு தான்னு சொன்னான்ங்க. செஞ்சிட்டாங்க. இரண்டாவது tractor வருமானம் எனக்குன்னு சொல்லிட்டான்ங்க. இன்னைக்கு tractor க்கு வேலை இருக்குங்க ஆனால் வேலைக்கு ஆள் இல்லைங்க. ஏதோ பைனான்ஸ் எல்லாம் கட்டிட்டதால பரவாயிலிங்க. இல்லேன்னா ரொம்ப சிரமங்க. நாங்க பார்ப்போம்ங்க. வண்டி ஓடலின்னா ஆட்டை வித்து பணம் கட்டிருவோம்ங்க. கடன் கட்டியதை நிறுத்தியது இல்லீங் ”
ஒரு வாழ்க்கை பாடத்தை அவள் சொல்லி முடித்திருந்தாள். குறிப்பாக சிரித்த முகத்துடன். படும் கடினங்களை சிரித்த முகத்துடன் சொல்வதில் இருக்கிறது உண்மையான Personality Realization.
எவ்வளவு கடின வாழ்க்கை அவளின் வாழ்க்கை ! Zero வில் ஆரம்பித்து இப்போதும் ஆடு மேய்க்கும் அவளின் வாழ்க்கை போராட்டத்தை அவளே சிரித்து சொல்வதே இந்த பயணத்தின் மிகப்பெரும் கவிதை. பொதுவாக இந்த ” யாரோ மனிதர்கள் ” நடத்தும் வாழ்க்கைப் பாடம் மிக முக்கியமானது. இங்கே பாடங்களை follow செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றுக்கொள்ள எந்த கட்டணமும் இல்லை. ஆனாலும் இது முக்கிய வாழ்க்கை பாடம் – வாகனத்தை நிறுத்தி கேட்பவர்களுக்கு !. ” ஆட்டை விற்று கட்டிடுவேங்க .. ” என்ற ஒற்றை வரியில் அவர் சொல்லும் ” வறுமையின் நேர்மை ” மிக முக்கிய வாழ்க்கை பாடம். இது இல்லா மல்லையாக்கள் தான் நாடு கடந்து ஒளிந்து திரிய வேண்டி இருக்கும் !
சத்யா ஆட்டுடன் புகைப்படம் எடுக்க விரும்ப, வெடத்தம்மா .. குட்டி ஆடு ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறார்.
” பேரு மீனாங்க .. எம் மருமக பேரை அதுக்கு வச்சிருக்காங்க. நீங்களும் எம் மருமக மாதிரி தாங்க “.
வார்த்தைகள் உறவை புலப்படுத்துகின்றன. உண்மையாக, அழகாக, யதார்த்தமாக சொல்லும் வார்த்தைகள் ஒரு கவிதையை காற்றில் பதித்து, உறவை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்கின்றன.
கொத்து கொத்தாய் புளியங்காய் தொங்கும் புளியமரம் ஒன்றை பார்த்தவுடன் சத்யா குதிக்க, வாகனம் நிறுத்தி, புளியங்காய் பறித்து, சுவைத்து .. வாழ்க்கையில் தான் எவ்வளவு miss செய்கிறோம். கடைசியாய் புளியங்காய் சாப்பிட்டது எப்போது ?
மொத்தமே 55 கிலோமீட்டர் பயணம் தான். காலை 10 மணி முதல் மாலை 05 30 மணி வரை. சித்ரா – அக்ரஹார சாமக்குளம் – காரமடை – அன்னுர் – சித்ரா என்று ஒரு சிறு வட்டத்தில் நீண்ட உலா. கண்ணில் நிற்கும் காட்சிகள், வாழ்க்கை பாடம் சொன்ன வெடத்தம்மா, புளியங்காய் ருசித்த தங்கை, ஏதோ சொல்ல முயன்று சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கும் வீடு, இயற்கையாய் parking செய்ய இடம் கொடுத்து நின்ற தென்னந்தோப்பு, திரும்ப வரும்போது சாப்பிட்ட திருப்தியான coffee .. அனு வீட்டில் சிறிது நேர பயணப் பகிர்வு ….என்று முடிந்த இந்த பயணத்தை என் பயணங்களில் one of the best என்று சொல்ல முடியும். அதற்கு அந்த மௌன வீடும், பச்சை இடம் கொடுத்த தென்னந்தோப்பும், இன்னமும் என்னுடன் இருக்கும் புளியங்காயும், சிரித்த முக வெடத்தம்மாவும் சாட்சி !
அவைகள் மட்டுமல்ல. படிக்கும் நீங்களும்தான் !