தெரிந்ததும் தெரியாததும் 017
அணைகள் பொதுவாக எல்லை வகுக்கப்பட்டு அதற்குள்ளேயே இருக்கும். எல்லைக்கு வெளியே அணைகளை பார்த்துவிட்டு நகர்தலே நம்மின் பொதுவான இயல்பு. ஆனால் கோமுகி அணை அப்படி அல்ல. அணையை ஒட்டி சில கிலோமீட்டர் நடந்தால், அணைக்குள் செல்லும் வழி கண்ணில் தெரியும். அவ்வழியே அணைக்குள் எங்கும் எந்த பக்கமும் நடக்க முடியும். ஆம். நீரற்ற நிலப்பகுதியில் !
ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன். நான் படித்த பள்ளியில் எங்களை சுற்றுலா அழைத்து சென்ற போது நான் வந்த முதல் சுற்றுலா இங்கே தான். பார்த்த முதல் காட்சி இந்த அணை தான். அப்போது அணை பார்த்து பயந்து மிரண்டது ஞாபகம் இருக்கிறது. கால்வாயில் நீர் வெளியேறும் வேகம் பார்த்து அருகில் இருந்த நண்பனை ( பாலமுருகன் ) கட்டிக்கொண்டு நின்றதும் இன்னும் ஞாபகத்தில். அதே அணையில் தான் இன்று உள்ளே நடக்கிறேன். அணைக்குள்ளே, அணையை சுற்றி முழுமையாக, ஓர் சுற்றுப்பாதையில் !
இலக்கற்று ஓடும் நதிக்கு ஒரு temporary resting place தான் அணையாக இருக்க கூடும். அப்படி இலக்கற்று ஓடும் நதியின் தேங்கிய நீரை பக்கத்தில் இருந்து பார்க்கும்போது கொஞ்சம் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. சட்டென விரியும் நீரின் மேற்புற மௌனம் கேட்கும் கேள்விகளுக்கு … என்னிடம் எந்த பதிலும் இல்லை. எதிரே சூரிய அஸ்தமனம். அணையும் சூரிய அஸ்தமனமும் ஒரு சேரக் கிடைப்பது வரம்.
அணைகளில் இருந்து மலைகளை பார்த்தது உண்டா நீங்கள் ? அது ஒரு பெரு அனுபவம். 180 degrees க்கு மலைகளும், மீதமுள்ள பகுதியில் நீரும், நடுவில் நீங்களும் நிற்கும் அனுபவம் ஒரு தியானப்புள்ளி. மலைகளின் தொடர்ச்சி நமக்குள் ஏற்படுத்தும் infinite thinking – முடிவிலியாக யோசிக்கும் விதம் – ஆச்சரியமானது. சட்டென திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்ததை போல … நீருக்கும், மலைக்கும் நடுவில் என்னை நான் கண்டுபிடிக்கிறேன்.
” நகரும் தென்றலின்
கண் தெரியா தொட்டிலில்
நானும் ஓர் பறவை ”
என்று எழுத தோன்றியதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கே இருந்து வந்தவை இந்த வார்த்தைகள் ? நிச்சயம் அதற்கு முன் வினாடி வரை என்னுள் அந்த வரிகள் இல்லை. அநேகமாக அவை மலையும், அணையும் எனக்குள் பிரசவித்த வரிகளாக இருக்கக்கூடும் !
சிறு குருவி ஒன்று எனக்கு அருகில் அமர்ந்தது. ஆம். பயமின்றி. பறவைகள் நம் அருகில் அமர்கிறது எனில் நாம் கொஞ்சம் சரியானவர்கள் என்று நமக்கு நாமே தோளில் தட்டிக்கொள்ளலாம். அருகில் அமர்ந்த குருவி இன்னும் சில அடிகள் என்னை நோக்கி முன்னேறி வந்தது. நேருக்கு நேர் ஒருமுறை முகம் பார்த்துவிட்டு இன்னும் அருகில் வந்தது. ஒரு சிறு பறத்தல் செய்து என் மடியில் அமர்ந்தது. ( ஒரு குருவி உங்களின் மடியில் கடைசியாக எப்போது அமர்ந்தது ? ). குருவி நகர நகர, அதன் கால் பாதங்களின் சிறு மெத்தை அனுபவம் உடலில் உணர்வாய் பரவத் தொடங்கியது. பின் அமைதியாய் அமர்ந்த குருவியை மடியில் வைத்துக்கொண்டே சூரியனை பார்த்துக்கொண்டிருந்ததே 2019 இன் இதுவரையிலான நிறை மகிழ் தவ நேரம் என்று நான் எழுதக்கூடும் !
பொதுவாக அணை அதனை சுற்றி பச்சை வயல்களை விரித்து போடும். அந்த பச்சை வயல்களின் மௌனம் அதற்கு நடுவே நிற்கும் தென்னை மரங்களுக்கும் சேர .. ஒரு மௌன வெளியில், சத்தமின்றி தொலையும் சிறு பிள்ளையாய் வியந்து நிற்கிறேன். எப்போதும் தீரப் போவதில்லை இந்த மௌன வெளியின் ஓசை !
நிற்கும் வாகனத்தின் மௌனத்தை பார்த்து நான் அதிசயிக்க, தன் மௌனம் கலைத்து .. எனக்காக தன் நகர்தலை துவக்க அது தயாராக, மீண்டும் ஓர் பயணம் ஆரம்பித்தது. இப்போதைக்கு வீடு. நாளை எங்கோ ? யாரறிவார் ?
( இந்த கட்டுரையை @தீரா உலா வின் உறுப்பினர் பாலமுருகன் அவர்களின் மகனுக்கு சமர்ப்பிக்கிறேன். )