கவிதையின் கண் 010
கவிதையின் கண்
ஒரு கவிதை படிக்கிறோம். உடனே மனம் எளிதாகிறது அல்லது கனக்கிறது. ஏன் அப்படி ?
யாரோ ஒருவனின் ஒருத்தியின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பக்கத்தை தான் ஒரு கவிதை பேசுகிறது. அப்படி பேசும் கவிதையின் மௌனம் தான் இங்கே ஆச்சர்யம். ஒரு கவிதை சொல்வதை ஒரு நட்பு சொல்லும்போது நமக்கு மிகவும் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். அது அந்த நட்பிடம் நாம் வைத்திருக்கும் நட்பின் அளவிற்கு தக்க மாறுபடும். ஆனால் ஒரு கவிதை அப்படி அல்ல. அது ஒரு virtual நட்பு. அதை எழுதியவன் எழுதியவள் பற்றி நமக்கு தெரியாது. அல்லது முழுக்க தெரியாது. ஆதலால் அவர்கள் non definable identity புள்ளியில் இருந்து கவிதையை நமக்கு அளிக்கிறார்கள். நாமும் கண் மூடிக்கொண்டு அந்த கவிதையை வார்த்தைகளால் நுகர்கிறோம். என்ன ஒரு அழகான பரிமாற்றம் இது ? !
தேசம் கடந்து சில கவிதைகள் நம்மை ஆளும். எழுதியவனின் வளின் பெயரை தவிர நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவனின் அவளின் வாழ்க்கை முறையை நாம் உள்வாங்க ஆரம்பிப்போம். அவனின் அவளின் சோகம் நம்மை தாக்கும். உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும். அவனுக்கென்று இருக்கும் சில சுவாரஸ்யங்களை நாம் ரசித்து சிரிப்போம்.
ஒரு கவிதை நம் எண்ணத்திற்குள் விழுந்து விட்டால், மீண்டும் எழுந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. அதுவும் பிடித்த கவிதை என்றால் …உயிர் இருக்கும் வரை, எண்ணங்களுடன் இணைந்து இருக்கும்.
“நகர்ந்த எறும்பை
கொன்றேன் …
மகன் பார்த்துக்கொண்டிருந்தான்”
என்ற கவிதை உள்ளே என்னவோ செய்யும்.
“கொள்ளைகொள்ளுங்கள்
கலவிகொள்ளுங்கள்
துயில்கொள்ளுங்கள்
பறந்தோடிக்கொண்டிருக்கிறது இரவு. “
என்ற ருஷ்ய கவிதை நம் ஓட்டத்தை தட்டி கேட்கும். ஏன் இப்படி அவசரம் என்பது இன்னொரு கேள்வி.
” மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்
எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி
– ரோபர்ட்டோ யூரோஸ் “
என்கிற இந்த கவிதை நம்மை மிகவும் யோசிக்க வைக்கும். ஏன் இப்படி விரைகிறோம் ? என்ற கேள்வியும் எழும். பதிலை கண்டுபிடிக்க மனம் தேடும்.
இந்த கவிதைகளை எழுதியவர்களை நமக்கு தெரியாது. ஆனால் அவர்களுடன் பேசுகிறோம் கவிதைகளின் மூலமாக. கவிதைகளின் இயல்பு நம்முடன் பேசுவது. பேசிக்கொண்டே நமக்குள் இருக்கும் அறைகளை தட்டி திறப்பது. அப்படி திறக்க திறக்க வரும் கவிதைகள் நமக்கு நம்மை புதியதாய் காட்டிக்கொண்டே இருக்கும். கவிதைகள் உங்களுடன் இருந்தால் நீங்கள் உங்களுக்கே புதியதாய் தெரிவீர்கள் !
என்ன தெரிகிறீர்களா ?