படம் சொல்லும் பாடம் 007
பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு செல்லும் ஒரு விண்வெளிக் கலம். நூற்றி இருபது வருட பயணம். hibernation தூக்கத்தில் இருக்க வேண்டிய அனைவரும் அழகாய் தூங்கி கொண்டு இருக்க … விண்கலம் ஏற்படுத்தும் ஒரு மோதலில் ஒரே ஒருவன் எழுகிறான். யாருமே இல்லாத விண்கலத்தில் முப்பது வருடங்களுக்கு பின் எழுந்து, இன்னும் தொண்ணூறு வருடங்கள் இருக்கிறது அனைவரும் எழ, பின் செல்ல வேண்டிய இடம் செல்ல … என்று அவனுக்கு தெரிய வந்தால் எப்படி இருக்கும் ? அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட விண்கலத்தில், பேச யாரும் அற்று … தனித்து நிற்கும் அவன் இறந்து போய்விடலாம் என்று கூட முடிவெடுக்கிறான். ஒரே ஒரு மனிதனை அங்கே அவன் அப்போது சந்திக்க நேர அதுவும் ஒரு robot என்று தெரிய … வெறுத்துப்போகிறது அவனுக்கு.
அப்போது hibernation தூக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணை [கதாநாயகி ] எழுப்ப முடிவெடுக்கும் அவன், அவளை எழுப்புகிறான். அவள் ஒரு எழுத்தாளர். இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களில் இன்னும் எண்பத்து எட்டு வருடங்கள் இருப்பதை உணர … வேறு எதுவும் செய்ய முடியா நிலையில் … இருவரும் பழக, பேச, உணர .. காதல் செய்ய … அனைத்தும் நடக்கிறது. Robot ட்டுக்கு மட்டும் தெரிந்த இந்த ” எழுப்பிய உண்மை ” கதாநாயகிக்கும் தெரிய வர … அவள் அவனை வெறுக்க ஆரம்பிக்கிறாள்.
அதே நேரம் விண்கலத்தின் Board இல் இருக்கும் இன்னொருவரின் hibernation தூக்கம் தொழில்நுட்ப கோளாறால் கலைந்து போக … அவரின் ID கொண்டு விண்கலம் நிறைய பாதிக்கப்பட்டு இருப்பதை மூவரும் உணர்கிறார்கள். மூன்றாவது நபர் உடல்நிலை சரியில்லாது இறந்துபோக, இறக்கும் முன் அவர் கொடுத்த ID யை வைத்து கதாநாயகன் கதாநாயகி … இருவரும் என்ன செய்தார்கள் என்பதே படம் !
முழுவதும் எந்திரத்தனமாக மாறி விட்டால் .. வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்று உணர்த்தும் காட்சிகள். எந்திர மயம் எவ்வளவு வசதியோ அவ்வளவு கொடுமையானது என்பதை காட்சிகள் அழகாக உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. ” நீங்கள் already இறந்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று மூன்றாம் நபருக்கு எந்திர தொழில்நுட்பம் சொல்லும்போது … அருகில் இருக்கும் கதாநாயகன் கதாநாயகி இருவரும் செய்வது அறியாமல் திகைக்கும் காட்சியில் … நாம் இறக்கும் கணம் தெரியாமல் இருக்கும் வரை தான் அழகு என்பது அழகாக புரிகிறது !
மனிதர்கள் அற்ற தனிமை கொடுமை. எவ்வளவு எந்திர தொழில்நுட்ப அருகாமை இருந்தாலும் … மனித அருகாமை இல்லை எனில் … கேள்விகள் பதில்கள் அவ்வளவும் … எவ்வளவு கொடுமை என்பதை படம் பார்க்கும்போதே நாம் உணர ஆரம்பிப்போம். எந்திர உலகமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் படம் பார்த்தபின் கண்டிப்பாக யதார்த்த வாழ்க்கை வாழ்வதை பற்றி யோசிக்க கூடும்.
மொத்தமே மூன்றே characters. ஒரு robot. விண்கலம். அதைச் சுற்றிய வாழ்க்கை. ஒரு இரண்டு மணி நேரம் நாமும் அப்படி வாழ்வதை போன்ற மனநிலையை ஏற்படுத்தும் படம். படம் பார்த்து முடித்த பின் … ஒரு வெட்டவெளிக்கு சென்று, மனிதர்களுக்கு அருகில் இருந்து … சுதந்திர காற்றை சுவாசிக்க தோன்றினால் … நீங்களும் நானும் ஒன்றே.